நாம், இந்தியர்கள், எதிர்நோக்கும் பிரச்சனைகளில் இப்போது மட்டும் அல்ல, நீணட நாள்களாகவே வீடு வாடகைக்குக் கிடைப்பதும் ஒன்றாகிவிட்டது.
நமது நிலைமையைப் பார்க்கும் போது ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது என்று நமக்குள் கேட்டுக் கொள்ளத்தான் முடிகிறதே தவிர வேறு என்ன தான் சொல்ல? ஒரு சிலர் செய்கின்ற தவறுக்காக பார்த்தீர்களா, இந்த சமுதாயமே பாதிக்கப்படுகிறதே அதுபற்றி யோசித்தோமா?
ஒரு எண்ணத்தை நாம் எப்போதும் மனத்தில் இறுத்திக்கொள்ள வேண்டும். நாம் தனிப்பட்ட முறையில் செய்கின்ற தவறுகள் இந்த சமுதாயத்தையே பாதிக்கும் என்கிற எண்ணம் எப்போதும் இருக்க வேண்டும். இந்த சமுதாயத்தைப் பாதிக்கும் என்றால் அது தவிர்க்கப்பட வேண்டும்.
வீட்டை வாடகைக்கு எடுக்கிறோம். வீட்டின் உரிமையாளர் என்ன சொல்கிறாரோ அதை ஏற்றுக்கொண்டு அதன் படி நடக்க வேண்டும். வீட்டை ஒப்படைக்கும் போது ஒரு சிலர் அதனை எந்த அளவுக்குச் சேதப்படுத்த முடியுமோ அந்த அளவுக்குச் சேதப் படுத்திவிட்டுத்தான் போவார்கள். நோக்கம் என்ன வென்றால் காலி பண்ணும் போது சும்மா போகக் கூடாது. எந்த அளவுக்கு அந்த உரிமையாளருக்குச் செலவு வைக்க முடியுமோ அந்த அளவுக்குச் செலவு வைக்க வேண்டும். அப்படி ஒரு கோபம்!
குடிகாரக் கும்பலாக இருந்தால் பல பிரச்சனைகள். வீடு எப்போதும் அலங்கோலமாய் கிடக்கும். அக்கம் பக்கம் எல்லாம் சண்டை சச்சரவுகள். குடித்துவிட்டு சண்டை போடுவதே தொழிலாக இருக்கும்! மற்ற வீட்டாரும் சேர்ந்து "இந்தியர்களுக்கு வீட்டை வாடகைக்குக் கொடுக்காதீர்கள்!" என்கிற கெடுபிடியும் இருக்கும்.
கல்லூரி மாணவர்களையும் இந்தப் பிரச்சனை விட்டுவைக்கவில்லை. ஆமாம், அவர்கள் மட்டும் இளிச்சவாயர்களா என்ன? அவர்கள் இன்னும் பெரிய குடிகாரர்களாக இருக்கின்றனர்! கூச்சல், குழப்பம், அடிதடி எதையுமே அவர்கள் விட்டுவைப்பதில்லை! இவர்களை நம்பிதான் இந்த சமுதாயம் இருக்கிறது. அவர்கள் குடும்பம் இருக்கிறது. ஆனால் அவர்களோ அப்பன் கொடுக்கும் பணத்தில் எல்லா அனாவசிய செலவுகளைச் செய்து சமுதாயத்தின் பெயரைக் கெடுக்கின்றனர்.
நாம் கேட்டுக் கொள்வதெல்லாம்: நீங்கள் செய்கின்ற தவறுகளால் இந்த சமுதாயம் பாதிக்கப்படுகின்றது. அதனை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். தனிப்பட்ட மனிதனுக்கு வாடகை வீடு கிடைக்கவில்லை என்றால் பரவாயில்லை. ஒரு குடும்பத்திற்குக் கிடைக்கவில்லை என்றால் அவர்கள் எங்கே போவார்கள்? எங்கே தங்குவார்கள்? வேறு ஒரு ஊரில் வேலையின் காரணமாக ஓர் இளைஞன் போகும் போது அங்கே வீடு வாடகைக்குக் கிடைக்காவிட்டால் அந்த இளைஞன் என்ன செய்வான்? சரி அவனே மாணவனாக இருந்தால் அவன் என்ன செய்வான்?
கொஞ்சம் யோசியுங்கள். நம்மால் மற்றவர்களுக்கு எந்த தொந்திரவும் வரக்கூடாது என்று நீங்கள் நினைத்தால் பொது இடங்களில் நல்லபடியாக நடந்து கொள்ள வேண்டும். நல்லவர்கள் என்று பெயர் எடுக்க வேண்டும். வீட்டை வாடைகைக்கு எடுத்தாலும் அங்கேயும் நல்லவன் என்று பெயர் எடுக்க வேண்டும். இது தான் பொது நீதி!
No comments:
Post a Comment