Thursday 19 October 2023

வீடு புதுப்பிக்கீறீர்களா?

 

                                                                  House Renovation

`வீடுகளை வாங்குகிறோம். நல்ல செய்தி. சொந்த வீடு  வாங்குகிறோம் என்பதே நல்ல செய்தி தான்.

ஆனால் சொந்த வீடு என்றால் வாங்கிய கடனை வங்கிக்கு முழுமையாக கட்டியிருக்க வேண்டும். அதன் பின்னர் தான்  நம் வீடு. நம் சொந்த வீடு என்கிற உரிமை அந்த வீட்டின் மேல் நமக்கு உண்டு.

வங்கிக்குக் கடன் கட்டிக்கொண்டிருக்கும் காலத்தில்  சிலர் வீட்டைப் பெரிய அளவில்  மாற்றங்களைச் செய்து கொண்டிருப்பார்கள். அதாவது புதுப்பித்துக் கொண்டிருப்பார்கள். அதற்கும் பெரிய அளவில் பணம் தேவைப்படும்.

நம் வீட்டுக்குச் செலவு செயது மாற்றங்களைக் கொண்டு வருவது பார்ப்பதற்கு அழகாகத்தான் இருக்கும். மற்றவர்களும்  பாராட்டத்தான் செய்வார்கள். பாராட்டப்பட வேண்டும் என்பதற்காக பணத்தைக் கொண்டு போய் கொட்ட முடியாது. காரணம் அது உங்கள் வீடு அல்ல, வங்கி தான் உண்மையான உரிமையாளர். அதற்காக என்ன செய்யலாம். புதிப்பிக்க ஆகும் செலவை நீங்கள் வங்கியின் கடனை அடைக்க முயற்சி செய்யலாம். இப்படி செய்வதன்  மூலம் வங்கியின் கடன் சீக்கிரம் அடைபடும்.  வீடு உங்களுக்குச் சொந்தம் என்றால் அதன் பின்னர் எந்த மாற்றங்கள் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்.

ஒரு சிலர் கண்மூடித்தனமாக செலவு செய்கின்றனர். இன்று நாம் சம்பாதிப்பது போல  நாளை முடியுமா என்பதை யாராலும் கணிக்க முடியாது. வியாதியில் வீழலாம். விபத்துகள் ஏற்படலாம்.  அது நிரந்தரமாகக் கூட ஆகிவிடலாம். வருமானம் இல்லாத காலத்தில் வங்கிக்கு நீங்கள் பணம் கட்ட முடியவில்லை என்றால்  வங்கிகள் தயவு தாட்சண்யம்  பார்ப்பதில்லை. உடனே வீட்டை ஏலத்திற்குக் கொண்டு வந்துவிடுவார்கள்.

வங்கிக்கடன்  எவ்வளவு சீக்கிரத்தில்  கட்ட முடியுமோ  அதனைக் கட்டி முடிப்பதுதான்  புத்திசாலித்தனம். தேவையில்லாமல் பத்து ஆண்டுகள், இருபது ஆண்டுகள் என்று காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. கடன் இல்லை என்றால் நீங்கள் சுதந்திரமானவர்.  அது ஒன்றே போதும். நிம்மதி பெருமூச்சு விடலாம்.

வீடு உங்களுடையது என்றால் தாராளமாகச் செலவு செய்யுங்கள். வீடு வங்கியினுடையது  என்றால்  நீங்கள் செய்யப்போகின்ற செலவுகளைக் கொண்டு வங்கியின் கடனை அடைக்க முயலுங்கள். வீடு என்பது நமது எதிர்காலம். நமது குழந்தைகளின் எதிர்காலம்.  நிகழ்காலத்தில் செய்ய வேண்டியவைகளைச் சரியாக செய்துவிட்டால் எதிர்காலம் சரியாக அமையும்.

No comments:

Post a Comment