Monday 16 October 2023

பழைய கதைகள் வேண்டாமே!

 


இளநிலை மாரா கல்லூரிகளிலில் இவ்வாண்டு மாணவர் சேர்க்கையில் தமிழ், சீனப் பள்ளிகளில் பயிலும்  மாணவர்களும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என கூறப்படுகின்றது.

இந்த ஆண்டு தான் இக்கல்லூரி மீண்டும் தமிழ் மாணவர்களுக்குத்  திறக்கப்படுகிறதா  அல்லது இன்னும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறதா என்பது எனக்குத் தெரியவில்லை. அதனைத் உறுதிப்படுத்த ஆசிரியர் நண்பர்கள் யாரும் அருகில்  இல்லை.

எனக்குத் தெரிந்து இது நீண்ட நாள்களாக  நடப்பில் உள்ளதை நான் அறிவேன். இந்த மாணவர் சேர்க்கை நீண்டநாள்களாக அதாவது சுமார் நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே நான் இதில் கவனம் செலுத்தியிருக்கிறேன்.  ஆனால் அதன் பின்னர் அதனை முற்றிலுமாக மறந்து போனேன். 

அப்போது என்ன என்ன குறை சொன்னார்களோ அதே குறை, அதே குற்றச்சாட்டு இப்போதும் சொல்லப்படுகிறதே என்கிற ஆதங்கம்  எனக்குள் உண்டு. ஒரு மாணவர் கல்வி கற்க எவ்வளவு தடைக்கற்கள்  யார் இந்த தடைகளை ஏற்படுத்துகிறார்?  பெற்றோர் தரப்பிலிருந்து தான்!

 இன்னொரு பக்கம் கல்லூரிகளும் தமிழ், சீன மாணவர்கள் வர இயலாதவாறு, கண்ணுக்குத் தெரியாதவாறு  சில மறைமுக தடைகளையும் வைத்திருக்கின்றனர். எங்களுக்குத் தான் அந்த உரிமை என்கிற உரிமை கொண்டாடலும் இருப்பதால்  மற்ற இன மாணவர்கள் வரவேற்கப்படுவதில்லை!

நாம் சொல்லுகின்ற குற்றச்சாட்டுகள் என்ன? அந்தப் பள்ளிகளுக்குப் போனால் கட்டாய  மதம் மாற்றி விடுவார்கள்.  அங்கே மாட்டிறைச்சி பயன்படுத்துவார்கள். நமது வழிப்பாட்டு முறைகளைத் தடை செய்வார்கள். இப்படியான குற்றச்சாட்டுகள்.

இவைகள் எல்லாம் தவிர்க்க முடியாதவை அல்ல. குற்றத்தைச் சொல்லிக் கொண்டே இருக்கலாம். அதற்கு முடிவேது?கணிசமான இந்திய, சீன மாணவர்கள் இருக்கும் போது  மதம் மாற்றம் பிரச்சனைகள் எழாது. மேலும் ஆசிரியர்களுக்கு அது வேலையும் அல்ல.  சரி,  வெளியே அது நடக்கவில்லையா?  நாம் சரியாக இருந்தால், நம் பிள்ளைகள் சரியாக வளர்ந்தால் ஒரு பிரச்சனையும் இராது! அது தான் முக்கியம்.

மாட்டிறைச்சி பிரச்சனை அல்ல. பெரும்பாலும் கோழி இறைச்சிக்குத் தான் முதலிடம். பல இன மாணவர்கள் பயில்கின்ற இடத்தில் இது பெரும்பாலும் நடப்பதில்லை. வெள்ளிக்கிழமைகளில் மரக்கறி உணவுகள்.  இது  பேசி தீர்த்துக் கொள்ளக் கூடியது தான். அப்படி இல்லையென்றால் வெறும் குழம்பு மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதெல்லாம் ஒரு பிரச்சனையா? 

நாம் வழிபடுவதில் அப்படி என்ன பிரச்சனை? ஒரு சிறிய சாமிபடத்தை வைத்துக் கொள்வதில் அப்படி எல்லாம் யாரும் சண்டைக்கு வரப்போவதில்லை. மற்றவர்களைச் சீண்டுவது போல் ஏன் நாம் நடந்து கொள்ள வேண்டும்?

எது முக்கியம் என்பதற்குத்தான்  முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தேவையற்ற சில்லறை பிரச்சனைகளுக்கெல்லாம்  தள்ளிவிட்டு கல்வி ஒன்றே தலையாயது என்கிற எண்ணம் வந்தால் அனைத்தும் சாத்தியமே. இனியும் அந்த பழைய கதைகளையே பேசிக்கொண்டு வாய்ப்புகளைத் தவற விடுவது ஏற்றுக்கொள்ள இயலாது!

No comments:

Post a Comment