நாம் சொன்னால் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்! சொல்ல வேண்டியவர் சொன்னால் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஆனாலும் சில கல்லுளி மங்கன்கள் எதையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்க மாட்டார்கள்.
அவர்களை விடுவோம். அவர்கள் யாருக்கும் தேவை இல்லாதவர்கள! நமது தேசிய வங்கியின் தலைவர் அப்துல் ரஷித் கபூர் தான் இத்தகைய தகவலை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார். மலேசியர்களுக்கு நிதி நிர்வாகம் என்பதே தெரியவில்லை என்கிறார் அவர். ஏதோ ஓர் ஆபத்து அவசரத்துக்கு உதவ ஓர் ஆயிரம் வெள்ளியைக் கூட அவர்கள் சேமிப்பில் வைத்திருப்பதில்லை என்கிறார்.
ஆனால் இப்படி சொன்னதும் 'சீனர்களும் அப்படித்தானோ?' என்று எண்ணத்தில் கொள்ளாதீர்கள்! சேமிப்பு இல்லாமல் அவர்களால் வாழ முடியாது. இங்கு முக்கியமாக சொல்லப்படுவது இந்தியர்களுக்குத்தான் என்று எடுத்துக் கொள்ளுங்கள். மலாயாக்காரர்கள் கூட ஏதோ ஒரு நிதி பாதுகாப்பைக் கொண்டிருக்கிறார்கள். வேலை இல்லையென்றால் கிராமத்தில் வீடு இருக்கிறது. சாப்பிடுவதற்கும் வழி இருக்கிறது. நம்மிடம் மட்டும் தான் எந்த பாதுகாப்பும் இல்லை. சேமிப்பு இல்லை, காப்புறுதி இல்லை. வீடு இல்லை. எதுவும் இல்லை.
நம்மிடம் உள்ள குறைபாடு என்ன? வேலை இருக்கிறது. அது போதும். நன்றாகச் சாப்பிடுவோம். ஆட்டம், பாட்டம், கேளிக்கை, கும்மாளம், கூத்து - எல்லாம் வேண்டும். வெலை இல்லையென்றால் நடுவீதிக்கு வருவோம். சரி, மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றமாட்டானா என்று தத்துவம் பேசிக்கொண்டு, உதவ ஆளில்லை என்றால், பத்திரிக்கைகளில் செய்தியைப் போட்டு பொது மக்களின் உதவியை நாடுவோம். இது தான் நமது நிலை. சீனர்கள் யாரும் இப்படி பொது மக்களின் உதவியை நாடுவதில்லையே!
ஏன்? நம்மால் கொஞ்சம் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள முடியாதா? கொஞ்சம் சேமித்துத் தான் வைப்போமே. என்ன கெட்டு விட்டது? கணவன் மனைவி வேலை செய்தால் மாதம் 100 வெள்ளி சேமிப்பு என்றால் ஓர் ஆண்டு 1200 வெள்ளி. அதையே 10 ஆண்டுகள் என்றால் 12,000 வெள்ளி. சரி, இருபது ஆண்டுகள் என்றால் 24,000 வெள்ளி. கிராமப்புறங்களில் ஒரு வீட்டையே வாங்கிவிடலாம்!
ஒவ்வொரு குடும்பத்துக்கும் சேமிப்பு முக்கியம். சேமிப்பு நமக்குப் பலத்தைத்தரும். கஷ்டத்திலும் நம்மைத் தலைநிமிர வைக்கும். நமது பணம் தான் நமக்கு உதவும். அண்ணன், தம்பி என்றால் கூட பணம் என்றால் உறவு முறிந்து போகும். பணம் எவ்வளவு வலிமையானது என்று கையில் பணம் இல்லாத போது தான் புரியும்.
தேசிய வங்கியின் தலைவர் சொன்னால் தான் புரியும் என்று இல்லை. நாமே அதனை நடைமுறையில் புரிந்து கொள்ளலாம். ஆபத்து, அவசரம் என்பது அனைவருக்குமே உண்டு. அதிலிருந்து தப்பிக்க ஒரே வழி: சேமிப்பு மட்டுமே!
No comments:
Post a Comment