இந்தியர்களுக்குப் புதிய அரசியல் கட்சி ஒன்று தேவை என்பதாக ஒரு சிலர் மிக மிக அவசரம் காட்டுகிறார்கள்!
இவர்கள் இப்படி அவசரப்படுவதை வைத்தே இவர்கள் ஏதொ தீய நோக்கத்துடன் செயல்படுகிறார்கள் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
அதாவது இந்தியர்களைக் குழப்ப வேண்டும் என்கிற நோக்கம் அவர்களிடம் உண்டு என்பதாகவே நமக்குப்படுகிறது.
இந்தியர்களின் ஏகோபித்த ஆதரவுடன் பிரதமர் அன்வார் இப்ராகிம் கடந்த தெர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். நம்முடைய ஆதரவு கணிசமானது.
இப்போது உள்ள குற்றச்சாட்டெல்லாம் எதிர்பார்த்தபடி அவர் தனது கடமையை ஆற்றவில்லை என்கிற குறைபாடு இந்தியர்களுக்கு உண்டு. உண்மை தான். யாரும் மறுக்கவில்லை. ஆனால் ஓர் ஆண்டுக்குள் அனைத்து மாற்றங்களையும் கொண்டு வந்துவிட வேண்டும் என்பது இயலாத காரியம் என்பது நமக்குத் தெரிந்தது தான். அவர் இந்தியர்களுக்குமட்டும் அல்ல அனைத்து மலேசியர்களுக்கும் பிரதமர்.
இன்னும் நான்கு ஆண்டுகள் இருக்கிறன. இப்போது நாட்டில் பல சிக்கல்கள்.விலைவாசி ஏற்றம் போன்று இன்னும் பல. அனைத்தையும் சரிசெய்ய வேண்டியது அவரது கடமை.
நம்மைப் பொறுத்தவரை புதிய அரசியல் கட்சி என்பதைவிட இந்தியர்களின் சார்பில் வலுவான இயக்கம் ஒன்று தேவை. அந்த இயக்கம் அரசியலில் நமக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். இந்தியர்களின் பிரச்சனைகளை அரசாங்கத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். இப்போது யாரும் இல்லை என்பது தான் மிகப் பெரிய குறைபாடு.
சீனர்களுக்கு Dong Zong என்கிற அமைப்பு எப்படி சீன மொழிக்கல்வியில் வழிகாட்டியாக இருக்கிறதோ அதே போன்று நமக்கு ஓர் அமைப்புத் தேவைப்படுகிறது என்பதாகவே நான் நினைக்கிறேன். நல்ல ஆலோசனைக் கூற, அரசியலில் வழிகாட்ட, கல்வி, வேலை வாய்ப்பு - இப்படி பல துறைகளில் வழிகாட்ட நமக்கு ஓர் அமைப்புத் தேவை. அதனை அரசாங்கத்திற்குக் கொண்டு செல்வது அவர்களின் கடமை.
65 ஆண்டுகள் ம.இ.கா. வை சகித்துக் கொண்டு வந்தோம். ஐந்து ஆண்டுகள் பி.கே.ஆர். ரை சகித்துக் கொள்ள முடியாதா? அப்படியே புதிய கட்சி ஆரம்பித்தாலும் அதுவும் பி.கே.ஆர். ஆதரவு கட்சியாகத்தான் இயங்கும். எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை.
ஒரு சிலர் தலைவர் ஆக வேண்டும் என்பதற்காகவே நம்மைக் குழப்புகிறார்கள். அதற்குப் பலியாக வேண்டாம் என்பதே நமது வேண்டுகோள்.
No comments:
Post a Comment