Wednesday 18 October 2023

சொந்த வீடு அவசியம் தேவை!

 


இன்றைய நிலையில் மலேசியாவில் வீடு வாங்குவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. முதலில் அதனைப் புரிந்து கொள்ளுங்கள்.

ஒரு காலகட்டத்தில்  மக்கள் மீது அக்கறை உள்ள அரசாங்கம் மூன்று விதமான வீடுகளைக் கட்டின. மலிவு வீடுகள், நடுத்தர வீடுகள், வசதி படைத்த பங்களா வீடுகள்.  ஆனால் இப்போது  அது போன்ற வீடுகள் தேவை இல்லையா அல்லது அரசாங்கத்தின் ஆதரவு இல்லையா  என்பதும்  பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

போகிற போக்கை பார்க்கின்ற போது  மலிவு வீடுகளைக் கட்டுவதற்கு வீடுகட்டும் நிறுவனங்கள் விரும்புவதில்லை. அரசியல்வாதிகளின் ஆசி,  அவர்களுக்கு உண்டு. 

எது எப்படியிருந்தாலும் வருங்காலங்களில் B40, நடுத்தர மக்கள்  வீடுகள் வாங்குவது என்பது கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும். குடும்பங்களில் கொஞ்சம் சிரத்தை எடுத்து வீடு வேண்டும்  என்று முயற்சி செய்தால் நிச்சயம் சாதிக்க முடியும். எல்லாம் நம் கையில் தான் உள்ளது.

இப்போதும் குடும்பங்கள் அண்ணன் தம்பி, அக்காள் தங்கை என்று ஒன்றாகத்தான் வாழ்கின்றனர். ஒன்றாக வாழும் போதே வீடுகளை வாங்கி விடுங்கள்.  இரண்டு மூன்று பேர் சம்பாத்தியம் இருந்தால் வீடுகள் வாங்கிவிடலாம்.

"தலைக்கு மேல் ஒரு கூரை இருந்தால் நீங்கள் கோடீஸ்வரன்" என்பதாக நண்பர் ஒருவர் கூறியிருந்தார்.  உண்மை தான்.  இப்போதே பலரை நாம் பார்க்கிறோம். நன்றாக இருந்த குடும்பங்கள், வேலை இழந்து, நடுவீதிக்கு வந்துவிட்டன.  என்ன செய்வது? எங்கே போவது?  என்கிற நிலைமையில் பல குடும்பங்கள்  இன்று இருக்கின்றன.  சொந்த வீடு என்று ஒன்று இருந்தால் குடும்பம் அங்கே தங்கிகொண்டு கிடைதத வேலையைச் செய்து கொண்டு  காலத்தைக் கழிக்கலாம். வாடகை வீடு என்றால் கடைசியில் நடுவீதி தான்.

நண்பர்களே! இப்போது நாம் நன்றாக யோசிக்க வேண்டிய தருணம். தனி ஆளாக இருந்தால் எப்படியோ என்று விட்டுவிடலாம். ஆனால் குடும்பம்? குழந்தைகளை நடுவீதியில் கொண்டு போய் நிறுத்துவது எவ்வளவு பெரிய  கேவலமான  நிலை ஒரு அப்பனுக்கும் அம்மாவுக்கும்?  

வீடு வேண்டும். அது கட்டாயம். அதைவிடக் கட்டாயம் அதைக்கட்டி முடிக்க நாம் எடுக்கும் நேரம்.  வாடகை வீட்டில் எப்போதும், சாகும்வரை குடியிருக்க முடியாது.  அவர்கள் விரட்டும்வரை  நாம் அங்கிருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் பார்த்துக்கொள்ள  வேண்டும்.

கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு  நாட்டின் நிலைமை மாறிவிட்டது.  மக்களின் பொருளாதாரம் சரிந்துவிட்டது.  அதனைத் தூக்கிப்பிடிக்க நாம் நினைத்தால் நம்மால் மட்டுமே முடியும்!

No comments:

Post a Comment