Thursday 12 October 2023

வேலை! வேலை! வேலை!

 

வேலை! வேலை! வேலை! 

ஆமாம்! வேலை இல்லாமல் வாழ்க்கையை எப்படி ஓட்டுவது? வாடகை வீடு, பிள்ளைகளின் கல்விச் சுமை, உண்ண உணவு - எல்லாவற்றுக்குமே பணம் போட வேண்டும். அதற்கு ஏதாவது ஒரு வேலை வேண்டும்.

இப்போதெல்லாம் எல்லா குடும்பங்களிலும் இருவர் வேலை செய்கின்றனர். கணவன் மனைவி இருவரும் வேலை செய்யாவிட்டால்  குடும்பத்தை நடத்த இயலாது. அது தான் இன்றைய நிலை.

இந்த நேரத்தில் இருவருக்குமே வேலை இல்லை என்றால்....?  என்ன செய்வது? எங்கே போவது?

நமக்குத் தெரிந்ததெல்லாம்  நமக்கு அருகே சிங்கப்பூர் இருக்கிறது. அங்கே போனால் வேலை கிடைக்கும்.  சரி கணவர் மட்டும் போய் ஏதாவது வேலை செய்யலாம்.  பெரும்பாலான குடும்பங்களில் அது தான் நடந்து கொண்டிருக்கிறது. சில குடும்பங்களில் பெண்களும் சிங்கப்பூர் போய் வேலை செய்கின்றனர்.  என்ன செய்வது?  பிழைப்பு நடத்த வேண்டுமே!

ஆனாலும் நிலைமை சீரடைந்து  வருகிறது. கொஞ்சம் முயற்சிகள் தேவை. சமயங்களில்  சம்பளம் எதிர்பார்த்தபடி கிடைப்பதில்லை.  பெரும்பாலான நிறுவனங்கள் அரசாங்கத்தின் குறைந்தபட்ச  ரி.ம. 1500.00 கொடுப்பதாகவே நினைக்கிறேன். மனம் தளர்ந்து விடாதீர்கள்.

நமது பொருளாதாரமும் அந்த அளவுக்குக் கீழ்நோக்கிப் போகவில்லை. நம்பிக்கை தரும் அரசாங்க நடவடிக்கைகளும் மக்களுக்குச் சாதகமாகத்தான்  இருக்கிறது. பொது மக்களுக்கு நமது ஆலோசனை என்னவென்றால் விலை அதிகம் என்றால் அது போன்ற பொருள்களை வாங்குவதைத் தவிருங்கள். தவிர்க்க முடியாத பொருள்கள் என்றால் அளவுகளைக்  குறைத்துக் கொள்ளுங்கள். முன்பெல்லாம் பெரிய பெரிய  மீன்களை வாங்கிச் சாப்பிடுவதற்கான வாய்ப்புகள் இருந்தன. இப்போது அது குறைந்து போயிருக்கலாம். அதனால் பெரிய மீன்களை  குறைந்த அளவில்  ஒரு நேர சாப்பாடாக  வைத்துக் கொள்ளுங்கள்.  எல்லாமே சிக்கனம் தான்.

வேலை இல்லையே என்று புலம்பல் வேண்டாம்.  வேலையே இல்லையென்றால்  வேறு என்ன செய்யலாம் என்று  யோசியுங்கள். வெளிநாடுகளிலிருந்து  இன்னும் ஆட்கள் வேலைக்கு வந்து கொண்டு தான் இருக்கின்றனர். ஒரு சில வேலைகள் நமக்குப் பழக்கமில்லாத வேலையாக இருக்கலாம். பழக்கப்படுத்தி கொள்ளத்தான் வேண்டும். நாம் விரும்பும் வேலை கிடைக்கும்வரை  ஏதோ ஒரு வேலையில் ஒட்டிக்கொள்ளத்தான் வேண்டும்.

நாட்டில் வேலையே இல்லை என்று சொல்லாதீர்கள்.  இருக்கின்ற, கிடைக்கின்ற வேலைகளில் ஈடுபடுங்கள்.   நாட்டுக்கு இப்போது கஷ்ட காலம் தான். அதே போல மலேசியர்களுக்கும் இப்போது கஷ்ட காலம் தான். ஆனால் இவைகள் எல்லாம் முறியடிக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை.

நல்லது நடக்கும் என எதிர்பார்ப்போம்!

No comments:

Post a Comment