பினாங்கு மாநில, தம்பி நவீன் கொலை வழக்கு எல்லாருக்கும் தெரிந்த ஒன்று தான். அவரின் பெற்றோர்கள் எந்த அளவுக்கு மனபாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என்பதை நம்மால் உணரமுடிகிறது.
இப்போது அது பற்றியான வாக்கு வாதங்கள் அதுவும் குறிப்பாக டிக்டாக் போன்ற ஊடகங்களில் பெரிய அளவில் பேசப்படுகிறதை நாம் பார்க்கிறோம்.
வழக்கு தோல்வி அடைந்தால் அத்தோடு அனைத்தும் முடிந்தது என்று அந்தக் காலத்தில் அப்படி ஒரு நிலை இருந்திருக்கலாம். ஆனால் இன்றைய நிலை அப்படியல்ல. தோல்வி என்றால் மேல்முறையீடு என்று அடுத்து அடுத்து தொடர்ந்து வழக்கைத் தொடர வாய்ப்புக்களும், வசதிகளும் உண்டு.
தற்காலிகமாக அது ஒரு தோல்விதான். யாரையும் குற்றம் சொல்லுவதில் பயனில்லை. போதுமான ஆதாரம் இல்லையென்றால் நீதிமன்றம் கொடுக்கும் முடிவு தான் தோல்வி. அத்தோடு அது முடியவில்லை. மீண்டும் போய் ஆதாரங்களைக் கொண்டுவா என்பதாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான்.
தோல்வு ஏற்பட்டுவிட்டதே என்பதற்காக நடுவீதியில் நின்று கொண்டு வழக்கறிஞர்களைத் திட்டுவதும் அவர்களின் குடும்பங்களைப் பற்றி முறைகேடாகப் பேசுவதும் ஏற்புடையது அல்ல. எங்கோ தவறு நடந்துவிட்டது. அதனைத் திருத்தி மீண்டும் நீதிமன்றத்திற்குப் போவது தான் புத்திசாலித்தனம். இப்படியெல்லாம் பேசி, தரக்குறைவாகப் பேசி கடைசியில் நீங்களே சிறைக்குப் போக வேண்டிய சூழல் ஏற்பட்டால் அப்போதும் உங்களுக்காக ஒரு வழக்கறிஞர் வந்து வாதாடத்தான் வேண்டும். இது இப்படித்தான் சுற்றிக்கொண்டே இருக்கும்!
இப்படி எடுத்ததெற்கெல்லாம் வீர வசனம் பேசி. நல்லது செய்கிறேன் என்கிற நினைப்பில், நவீன் குடும்பத்திற்கு மன உளைச்சலைத்தான் நீங்கள் ஏற்படுத்துகிறீர்கள். அந்தக் குடும்பத்தை இன்னும் வேதனைக்கு உள்ளாக்குகிறீர்கள்.
தமிழர்களுக்குள் அடித்துக்கொள்வதை ஒரு சிலர் கைதட்டி சிரிக்கிறார்கள். ஏன், இந்த நடவடிக்கைகள் எல்லாம் அவர்களின் தூண்டுதல்களாகக் கூட இருக்கலாம். ஒன்று கேட்கிறேன், நண்பர்களே? குற்றஞ்சாட்டபட்ட அந்த ஐந்து பேரும் வேறு இனத்தவராக இருந்தால் நீங்கள் இந்த அளவுக்கு உங்களின் 'நியாயத்தைப்' பேசியிருப்பீர்களா? அப்போது உங்கள் வீரம் எங்கே போயிருக்கும்? சும்மா வெத்து வேட்டுகளை வைத்துக்கொண்டு இந்த சமூகம் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறது!
நிதானத்தைக் கடைப்பிடிப்பது தான் ஞானத்திலும் ஞானம்!
No comments:
Post a Comment