Saturday 21 October 2023

இதைத் தவிருங்கள்!

 

இது பள்ளிப்பிள்ளைகளிடையே நடந்த சம்பவம். ஆனால் ஏற்றுக்கொள்ள முடியாத சம்பவம்

குற்றத்தை யார் மீது சுமத்துவது? அவசியமில்லை. இருவருமே சிறுமிகள். ஆனால் மற்ற சிறுமிகளுக்கு இது பாடம்.

நீங்கள் சம்பந்தப்படாத ஒருவரின் புகைப்படத்தை அவர்களின் அனுமதியில்லாமல் வலைதலைங்களில் பதிவேற்றம் செய்வது  மாபெரும் தவறு என்பதை மீண்டும்  நினைவுப்படுத்துகிறோம்.

பள்ளிக் குழந்தைகள் என்பதால் அவர்களால் அதனைப் புரிந்து கொள்ள முடியவில்லை. இப்போது அந்த  பிரச்சனையைக்   காவல்துறையினர்  கையில் எடுத்திருக்கின்றனர். 

நடந்தது என்ன? ஒரு மாணவியின் புகைப்படத்தை இன்னொரு மாணவி  டிக்டாக்கில் அந்த மாணவியின் அனுமதியின்றி  பதிவேற்றம் செய்திருக்கிறார். அந்த புகைப்படம் அந்த மாணவிக்கு எங்கிருந்து கிடைத்தது என்று தெரியவில்லை. பாதிக்கப்பட்ட மாணவி அது பற்றி விசாரித்திருக்கிறார். "அந்த புகைப்படம் எப்படி உனக்குக் கிடைத்தது, எங்கிருந்து கிடைத்தது, ஏன் அந்த புகைப்படத்தை பதிவேற்றம் செய்தாய்?" போன்று அந்த மாணவியிடம் கேள்விக்கணைகளைத் தொடுத்திருக்கிறார். அத்தோடு நிற்காமல் ஒவ்வொரு கேள்விக்கும் ஒவ்வொரு அறை அந்த மாணவிக்கு விழுந்திருக்கிறது!

இந்த பிரச்சனை தான் இன்று பூதாகரமாகி  இப்போதுகாவல்துறை கையில் எடுத்திருக்கிறது. இது ஒன்றும் பெரிய பிரச்சனை அல்ல. சின்ன பிரச்சனைதான். இரு சிறுமிகளையும் சமாதானப்படுத்தி விடலாம். அந்த புகைப்படத்தையும் அழித்துவிடலாம்.  ஆனால் புகைப்படத்தைப் பலர் இந்நேரம் பதிவிறக்கம் செய்திருப்பார்கள்! 

டிக்டாக் செய்பவர்கள் இதனைக் கவனிக்க வேண்டும். அவர்கள் குழந்தைகள் அறியாமல் செய்துவிட்டார்கள்.   மன்னித்துவிடலாம்.  ஆனால் நமது இளைஞர்கள்  பலர் இந்த வேலையைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.  யாருக்குத் தெரியப் போகிறது என்கிற எண்ணம் அவர்களுக்கு உண்டு. காரணம் எதிர்தரப்பினர் அப்பாவிகளாக இருப்பார்கள். வலைதளங்களைப் பயன்படுத்த  தெரியாதவர்களாக இருப்பார்கள். அவர்களை எப்படியும் பயன்படுத்தலாம் என்கிற நினைப்பு இவர்களுக்கு. ஆனால் நேரம் ஒரே மாதிரியாக இருக்காது. அகப்பட்டால்...?

நாம் சொல்ல வருவதெல்லாம் அவர்கள் பள்ளிப்பிள்ளைகள். அறியாமல் செய்கிறார்கள். ஆனால் வளர்ந்துவிட்டவர்கள் அப்படியெல்லாம் செய்தால் அதற்கான தண்டனைகள் உண்டு.  எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள். இது மற்றவர்களைக் கேவலப்படுத்தும் விஷயம்.

இது போன்ற விஷயங்களைத்  தவிருங்கள் என்பதைத்  தவிர,  வேறு அறிவுரைகள் இல்லை!

No comments:

Post a Comment