பாட்டிக்கு வயதோ 85. பெயரோ பாப்பா. ஊரோ ராசிபுரம், நாமக்கல் மாவட்டம்.
Tuesday, 30 November 2021
நீச்சலில் தூள் கிளப்பும் பாட்டி!
பாட்டிக்கு வயதோ 85. பெயரோ பாப்பா. ஊரோ ராசிபுரம், நாமக்கல் மாவட்டம்.
Monday, 29 November 2021
ஓமிக்ரோன் இன்னொரு மனிதகுல எதிரியா?
கோரோனாவின் புதிய திரிபு ஓமிக்ரோன்
கோரோனாவின் புதிய திரிபான ஓமிக்ரோன் இப்போது உலகைக் கலக்கிக் கொண்டிருக்கிறது!
அதன் மூலம் தென் ஆப்பிரிக்கா. இப்போது தனது பங்குக்கு ஒமிக்ரோனும் உலகில் எல்லா நாடுகளையும் பயமுறுத்திக் கொண்டிருக்கிறது!
இதற்கான மருந்துகள் இப்போது தீவிர ஆராய்ச்சியில் இருக்கின்றன. இன்னும் ஓரிரு மாதங்களில் ஆராய்ச்சி முடிவுகள் வெளிவரலாம்.
இப்போது நாம் செய்ய வேண்டியது என்ன? இது பற்றி தான் நாம் யோசிக்க வேண்டும். உண்மையைச் சொன்னால் எல்லாமே வழக்கம் போல தான்! வழக்கமான நடைமுறை! புதிதாக ஒன்றுமில்லை!
சமூக இடைவெளி தொடர வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும். முடிந்த அளவில் பொது இடங்களைத் தவிர்க்க வேண்டும். கொரோனாவிற்கான தடுப்பூசிகள் போட வேண்டும். இப்போதைக்கு இது தான் முக்கியம்.
இன்றைய நிலையில் தடுப்பூசிகளும் முகக்கவசமும் மிக மிக முக்கியமானவை. இன்னும் எத்தனை கொரோனா திரிபுகள் வந்தாலும் இவைகள் தான் முக்கியமாக கடைப்பிடிக்கப்பட வேண்டும். ஒரு வேளை தடுப்பூசிகள் அதிகரிக்கப்படலாம். புதிய மருந்துகள் அறிமுகப்படுத்தப்படலாம். புதிய திரிபுகள் வரும்போது புதிய மருந்துகளும் வரலாம். இது ஒரு தொடர்கதை தான். முற்றுப்புள்ளிக்கு இடம் உண்டா என்பது இதுவரை தெரியவில்லை!
முன்பு போல "லாக்டௌன்" வருவதற்கு வாய்ப்புக் குறைவாகத்தான் இனி இருக்கும். அதனால் எல்லாருக்குமே பிரச்சனை. மக்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டால் அது பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதனை சமீபத்தில் கண்டோம். இன்னும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
அதனால் நாம் தான் எச்சரிகையாக இருக்க வேண்டும். நாம் வேலை செய்ய வேண்டும். அலட்சியமாக இருக்க முடியாது. வேலை செய்கின்ற இடத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டும். சில கட்டுப்பாடுகளோடு இயங்க வேண்டும்.
கோரோனா என்று வந்துவிட்டால் யார் தப்பிப்பார் யார் தவறுவார் என்று சொல்ல முடியாது! பணம் இருந்தால் தப்பித்துவிடலாம் என்று சொல்வதற்கில்லை. பல பணக்காரர்கள், பல பதவியில் உள்ளவர்கள் சமீப காலங்களில், எவ்வளவோ செலவு பண்ணியும், அவர்களால் தப்பிக்க முடியவில்லை!
யாராக இருந்தாலும் முகக்கவசம், தடுப்பூசி, பொது இடங்களைத் தவிர்த்தல், சமூக இடைவெளி அனைத்தும் கடைப்பிடிக்கபட வேண்டியவை. "நான் பணக்காரன்! நான் இதனையெல்லாம் செய்ய மாட்டேன்!" என்று இறுமாப்புடன் நடந்து கொண்டால் அப்புறம் இறுதி ஊர்வலம் கூட இல்லாமல் போய்விடும்!
ஒமிக்ரோன் திரிபு மனிதகுலத்திற்கு எதிரியா என்றால் எல்லா திரிபுகளுமே எதிரிகள் தான்! நாம் அவைகளுக்கு எதிரியாக இருக்க வேண்டும் என்றால் நாம் நம் கடமைகளைத் தவறாமல் செய்ய வேண்டும்! அவ்வளவு தான!
Sunday, 28 November 2021
ஏன் இந்த புறக்கணிப்பு?
Saturday, 27 November 2021
இரக்கம் காட்டும் என நம்புகிறோம்!
ஏன் தாய்மொழி பள்ளிகள் வேண்டும்?
Friday, 26 November 2021
ஏன் இந்த வன்மம்?
நன்றி: வணக்கம் மலேசியா
எத்தனையோ, நம்மால் புரிந்த கொள்ள முடியாத விஷயங்கள், நம் கண் முன்னே நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
அதில் ஒன்று அப்பாவி பிராணிகளைத் துன்புறுத்தி சாகடிப்பது. இவர்கள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று நம்மால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.
இது ஒரு தமாஷான காரியமாக நினைக்கிறார்களா அல்லது அதனை ஒரு வீரமாக நினைத்துச் செயல்படுகிறார்களா என்பது நமக்குப் புரியவில்லை! வீரம் என்றால் ஓரிரு மாதங்களுக்கு முன்னர் ஒரு வயதானப் பெண்மணி தனது ஊன்றுகோலால் ஒரு சிறுத்தையை விரட்டி அடித்தாரே அது வீரம்! ஒரு பலவீனமான வளர்ப்புப் பிராணியை அடித்துக் கொல்வது, அப்படிச் செய்பவர்களை, கொடூரர்கள் என்று தான் நினைக்க வேண்டியுள்ளது. இது வீரமும் இல்லை, விவேகமும் இல்லை!
நாய்கள் நம் வீட்டில் வளர்க்கப்படும் வளர்ப்புப் பிராணிகள். அதனால் சில பிரச்சனைகள் வரலாம். வேண்டாமென்றால் தக்கவர்களிடம் ஒப்படைத்து விடலாம். இல்லையென்றால் "எப்படியாவது போ!" என்று ஒரு சிலர் செய்வது போல எங்கேயோ விட்டுவிட்டு வந்து விடலாம்! அப்படித்தான் பலர் செய்கிறார்கள். ஆனால் வேண்டாமென்று யாரும் அடித்துக் கொல்வதில்லை! அது குற்றமும் கூட! அப்படி அடித்துக் கொல்வதற்கு நம் மனமும் இடம் தராது என்பது தான் உண்மை.
ஏனோ தெரியவில்லை. மனிதனின் வன்மம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. அல்லது ஏற்கனவே உள்ளது தானா, நமக்குத் தான் தெரியவில்லையா என்பதும் புரியவில்லை!
மேலே காணப்படும் அந்த நிகழ்வு என்று எப்போது நடந்தது என்பது தெரியவில்லை. கொஞ்சம் கூட மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொள்ளும் அந்த நபர் யாரென்றும் தெரியவில்லை. ஆனால் காவல்துறை அதனைக் கண்டுபிடித்து விடும் என்று நம்பலாம்! யாரும் நீதியின் கண்களிலிருந்து தப்பிவிட முடியாது!
ஒரு பலவீனமான வளர்ப்புப் பிராணியை இப்படி அடித்துக் கொள்வதைப் பார்க்கும் போது மனம் பதைபதைக்கிறது. நெஞ்சம் கனக்கிறது.
ஏன் இந்த வன்மம் என்று கேட்கத்தான் முடியும்! வேறு என்ன செய்ய முடியும்! செய்வது காவல்துறையின் கையில்!
Thursday, 25 November 2021
கிடு கிடு உயர்வு!
விலைகளெல்லாம் உயர்ந்துவிட்டன!
மற்ற காலங்களில் உயர்வதற்கும் இந்த கோவிட்-19 காலத்தில் உயர்வதற்கும் நிரம்ப வித்தியாசங்கள் உண்டு.பொதுவாக திருவிழாக் காலங்களில் வியாபாரிகள் விலைகளை ஏற்றுவார்கள். இதெல்லாம் நமக்குப் பழக்கமாகிவிட்டது! வியாபாரிகள் விலைகளை ஏற்றுவதும் அரசாங்கம் தலையிட்டு விலைகளைச் சமநிலைப் படுத்துவதும் வழக்கமாக நாம் அனுபவமாகக் கொண்டிருக்கிறோம்!
ஆனால் இந்த முறை விலையேற்றம் என்பது நாம் எதிர்பார்க்காதது என்று சொல்வதற்கில்லை! எதிர்பார்த்தது தான்! சீனப் புத்தாண்டு விரைவில் வருகிறது. கிறிஸ்துமஸ் பெருநாளும் விரைவில் வருகிறது. அதுமட்டும் அல்ல.
கோவிட்-19 தொற்று இன்னும் ஒரு முடிவுக்கு வராத நேரம். அதன் வீச்சு இன்னும் குறையவில்லை. இப்போது தான் மக்கள் வேலைக்குப் போக ஆரம்பித்திருக்கின்றனர். அதிலும் இரண்டு பேர் வேலை செய்கின்ற நேரத்தில் ஒருவர் வேலை செய்தால் கூட ஏதோ குடும்பம் சமாளிக்கும் என்கிற நிலைமை தான்.
இந்த நேரத்தில் அத்தியாவசியமான பொருள்களின் வேலை ஏற்றம் கண்டால் எப்படி சமாளிப்பது என்று ஒவ்வொரு குடும்பமும் தடுமாறுவது இயல்பு தான்.
குறை என்று சொன்னால் அரசாங்கம் தான் இந்த விலைக் கட்டுப்பாட்டை முன்னமையே உணர்ந்து, திட்டங்கள் போட்டு அதனைக் களைய முயற்சி செய்திருக்க வேண்டும். எந்த முயற்சியும் செய்யாமல் இப்போது யார் யாரையோ குற்றம் சாட்டுவது சரியான வழி அல்ல.
நம்மாலும் பிரச்சனைகளைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஒன்று: மழை காலம். நமது பிரதான உற்பத்தி கேந்திரம் என்பது கேமரன்மலை. உற்பத்திகளைக் கீழே கொண்டுவர பல தடங்கல்கள் நிலச் சரிவுகள். போக்குவரத்துத் தடங்கல்கள் என்று பல பின்னடைவுகள். நாம் உள்ளூர் உற்பத்திகளை வரவேற்பதில்லை. வெளிநாடுகளிலிருந்து வருவதைப் பெருமையாகக் கருதுகிறோம்! வெளிநாட்டுப் பொருள்கள் இப்போது தாராளமாக வருவதற்கான வழியில்லை. நிறையக் கட்டுப்பாடுகள். தொற்று முடியும்வரை பிரச்சனைகள் தொடரத்தான் செய்யும். அரசாங்கம் உள்ளூர் உற்பத்திகளுக்கு ஆதரவு கொடுக்கவில்லை என்றால் இந்த நிலை நீடிக்கத்தான் செய்யும்!
காய்கறிகளின் விலையேற்றத்தால் மக்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர். 200% விழுக்காடு உயர்வு என்பது ஏற்றுக்கொள்ள முடியாது தான்! அரசாங்கம் எப்படி சமாளிக்கப் போகிறது என்பது தெரியவில்லை. மக்களை வெவ்வேறு யூகங்களைப் பின்பற்றுங்கள் என்று நாமும் சொல்லலாம். உங்களால் முடிந்தால் வீட்டிலேயே குறைந்தபட்சம் ஒரு சில பயிர்களையாவது பயிரிடுங்கள் என்று சொல்லத்தான் வேண்டியிருக்கிறது. பூஜாடிகளைப் பயன்படுத்தி எந்த காய்கறிகளை வளர்க்க முடியுமோ அதனை வளருங்கள். முனகிக் கொண்டும் முணுமுணுத்துக் கொண்டும் இருப்பதால் பயனில்லை!
இது காய்கறிகளின் விலையைக் குறைக்கும் என்று சொல்ல வரவில்லை. குறைந்தபட்சம் உங்கள் பட்டினியைப் போக்கும்!
Wednesday, 24 November 2021
கலவையான தடுப்பூசியா?
கலவையான மருந்துகளால் ஆபத்தா?
மூத்த குடிமக்களுக்கான தடுப்பூசியில் ஒரு சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.
தடுப்பூசி என்பதைவிட பூஸ்டர் தடுப்பூசி என்பது தான் சரி. ஆரம்பத்தில் பைசர் தடுப்பூசி போட்டவர்களுக்கு இன்னும் பூஸ்டர் தடுப்பூசி போடப்படவில்லை என்றே நினைக்கிறேன். முதலில் வந்த அறிவிப்பின் படி தடுப்பூசி போட்டு ஆறு மாதங்களுக்குப் பின்னரே பூஸ்டர் தடுப்பூசி போடுவதாக அறிவிப்பு வந்தது. இன்றைய நிலைமை தெரியவில்லை.
ஆனால் சைனோவேக் தடுப்பூசி போட்டவர்களில் நானும் ஒருவன். தடுப்பூசி போட்டு மூன்று மாதங்கள் கூட ஆகவில்லை. எனக்கு பூஸ்டர் தடுப்பூசி போட அழைப்பு வந்தது. நான் சைனோவேக் தடுப்பூசி தான் போடுவார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் பைசர் தடுப்பூசி போடப்பட்டது. அதனை நான் டாக்டரிடம் சுட்டிக் காட்டினேன். அவர் சுகாதார அமைச்சு சொன்னதைத்தான் செய்கிறோம் என்றார்.
அதனைப்பற்றி நான் அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. அலட்டிக் கொள்ள ஒன்றுமில்லை! முதன் முதலில் நான் தடுப்பூசி போட்டுக் கொண்ட போது அது என்ன தடுப்பூசி என்று கூட கேட்கவில்லை. இரண்டாம் முறை போன போது தான் அது சைனோவேக் என்று தெரிந்து கொண்டேன்.
நான் என்ன தடுப்பூசி என்பது பற்றி அக்கறை காட்டாததற்குக் காரணம் உண்டு. அது சைனோவேக் என்றாலும் சரி பைசர் என்றாலும் சரி நான் மட்டுமா போடுகிறேன். உலகம் பூராவும் கோடிக்கணக்கான மக்கள் போடுகிறார்கள். அதில் நானும் ஒருவன் அவ்வளவுதான்! இதில் என்ன அந்த மருந்து, இந்த மருந்து! இது நல்லது, அது நல்லது! அரசாங்கமும் பல ஆராய்ச்சிகளுக்குப் பின்னர் தான் தடுப்பூசியைப் போடுகிறார்கள். அதனை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒவ்வொன்றுக்கும் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தால் அனைத்துமே முடங்கிப் போகும்!
சைனோவேக் மருந்தில் சில குளறுபடிகள் ஏற்பட்டது உண்மை என்பதை சுகாதார அமைச்சு ஏற்றுக் கொண்டது. சைனோவேக் தடுப்பூசி போட்டவர்களுக்கு உடம்பில் ஒரு சில அசௌகரியங்கள் ஏற்பட்டதாக அமைச்சு கூறியது. அதனாலேயே பூஸ்டர் ஊசியை மூன்று மாதங்களில், அதுவும் மாற்றி பைசர் தடுப்பூசியை, போடுவதாக அமைச்சு கூறியது.
எனது குடும்பத்தில் எனக்கு ஒருவனுக்குத் தான் பூஸ்டர் பைசர் தடுப்பூசி போடப்பட்டது. மற்றவர்கள் அனைவருக்கும் பைசர் தடுப்பூசி போடப்பட்டதால் இன்னும் அவர்களுக்குப் பூஸ்டர் தடுப்பூசி போடப்படவில்லை.
என்னைப் பொறுத்தவரை இப்படி மாற்றி தடுப்பூசி போட்டதால் எந்த ஒரு பிரச்சனையும் எழவில்லை. எந்த ஒரு மாற்றமும் இல்லை. எல்லாமே வழக்கம் போல தான்! கலவையாக இருந்தால் இருக்கட்டுமே! கவலைப்படுவதாக இல்லை!
திருந்த வாய்ப்புண்டா?
Kedah MB Muhammad Sanusi Md.Nor
சமீபத்தில் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். ராயர், பாஸ் தலைமைக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்!
கெடா மந்திரி பெசார் சனூசிக்கு முஸ்லிம் அல்லாதாரின் உணர்வுகளை மதிக்க கற்றுத்தரும்படி பாஸ் தலைமையைக் கேட்டுக் கொண்டிருக்கிறார், ராயர்!
ராயர் சொல்லுவதில் தவறு ஏதுமில்லை. நாமும் அதனைத்தான் சொல்ல விரும்புகிறோம்.
சனுசியின் பின்னணி நமக்குத் தெரியவில்லை. பினாங்கு முப்தி அவர்கள் சமீபத்தில் சனுசியைப்பற்றி பேசும்போது கம்பத்துத் தலைவர் போல் நடந்து கொள்ள வேண்டாம் என்று அறிவுரைக் கூறியிருந்தார்! நமக்கும் அதில் மாறுபட்ட கருத்து இல்லை!
பாஸ் தலைமைக்கும் நமக்கும் கருத்து வேறுபாடுகள் உண்டு. ராயரின் கோரிக்கையையோ அல்லது நமது கோரிக்கையையோ பாஸ் தலைமை ஏற்றுக்கொள்ளுமா என்பது தான்.
உண்மையைச் சொன்னால் பாஸ் தலைமை, கெடா மாநில மந்திரி பெசாரை வைத்து அந்த மாநிலத்தை பரிட்சார்த்த முறையில் இப்போது ஆட்சி செய்து கொண்டிருக்கிறது! ஆமாம்! இந்து கோவில்களை உடைத்தால் என்ன நடக்கும், தைப்பூசத்திற்கு விடுமுறை கொடுக்கவில்லை என்றால் என்ன நடக்கும், நான்கு இலக்க சூதாட்டத்தை ஒழித்தால் எதிர்வினை எப்படி இருக்கும், உயிரிழந்தவர்களைக் கொள்கலன்களில் அடக்கம் செய்தால் அதன் எதிரொலி எப்படி இருக்கும் (குறிப்பு: முஸ்லிம்களை அவர் சொல்லவில்லை என்பதைக் கவனிக்க) - இப்படி அவர் செய்கின்ற ஒவ்வொரு செயலும் பாஸ் கட்சியின் தலைமைக்குத் தெரிந்து தான் - அவர்களின் பூரண கும்ப மரியாதையுடன் தான் - செய்கிறார் என்பதை மறுக்க முடியாது. இதற்குக் காரணம் இவ்வளவு நடந்தும் பாஸ் தலைமை அவரைக் கண்டிக்கவில்லை, வாயைத் திறக்கவில்லை! அவர்களின் பங்கும் நூறு விழுக்காடு இருப்பதாகவே தோன்றுகிறது!
ராயர் அவர்களின் ஆதங்கம் நியாயமானது. ஆனால் அதற்கான பதில் கிடைக்கப் போவதில்லை. பாஸ் ஆட்சியில் எப்படி மற்ற இனத்தவர்கள் எதிர்வினை ஆற்றுகிறார்கள், எப்படி மற்ற இனத்தவர்களின் கலாச்சாரங்கள், மொழிகள், வழிபாடுகளை ஒழிக்கலாம் என்று கணக்குப் போட்டுக்கொண்டே இருப்பவர்கள், அவர்கள்! அவர்களிடம் போய் நியாயத்தை எதிர்பார்ப்பது அநியாயம் அல்லவா!
எப்படியோ! பாஸ் கட்சி நாட்டை ஆளக்கூடிய வாய்ப்பில்லை! கெடா மாநிலம் கூட அடுத்த தேர்தலில் அவர்களால் தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்பதும் கேள்விக்குறியே! குறிப்பிட்ட சில முஸ்லிம்களின் ஆதரவை மட்டும் நம்பியிருப்பவர்கள் இவர்கள்! அதுவும் இப்போது கையைவிட்டு நழுவிக் கொண்டிருக்கிறது!
பாஸ் கட்சியினர் திருந்த வழியில்லை! அதேபோல கெடா மாநில மந்திரி பெசாரும் திருந்துவது கடினம்!
Tuesday, 23 November 2021
ஆனாலும் இது முடிவல்ல!
Monday, 22 November 2021
ஜேய்பீம் படத்திற்கு நன்றி!
மீண்டும் உயிர் கிடைத்திருக்கிறது!
Sunday, 21 November 2021
பயப்பட வேண்டாம்!
பாஸ் கட்சியினருக்கு எப்போதுமே ஒரு தாழ்வுமனப்பான்மை உண்டு!
Saturday, 20 November 2021
யார் பக்கம்?
இன்றமலாக்கா மாநிலத்தில் நடைபெறும் மாநில சட்டமன்றத் தேர்தலில் மக்கள் யார் பக்கம் இருக்கப் போகின்றனர்?
சென்ற சட்டமன்றத் தேர்தலில் பக்காத்தான் கட்சியினர் ஆட்சி அமைத்தனர். மொத்தம் 28 தொகுதிகள். குறைந்தபட்சம் 15 தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஆட்சி அமைக்கலாம். ஆனால் மிகக் குறைவான எண்ணிக்கையில் வெற்றி பெற்றால் அது மிகவும் பலவீனமாக அமையும்.
சென்ற தேர்தலில் அது தான் நடந்தது. ஒரிரு சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தால் எதிர்தரப்பு அவர்களை "வாங்க" முயற்சி செய்யும்! நமது நாட்டில் இது போன்ற "வாங்குகின்ற" விஷயத்தைக் கேள்விப்பட்டதில்லை. இப்போது கேள்விப்படுகிறோம். இனி மேலும் கேள்விப்படுவோம்! யாரிடம் பணம் இருக்கிறதோ அவர்கள் வாங்க முயற்சி செய்வார்கள்! பதவியில் இருந்து அனுபவித்தவர்கள் அவ்வளவு எளிதில் பதவியை விட்டுக் கொடுக்கமாட்டார்கள்!
இப்போது மலாக்காவில் மூன்று கட்சிகளே பிரதான கட்சிகளாக போட்டியிட்டாலும் இரண்டு கட்சிகள் தான் முக்கியமாகப் பேசப்படுகின்ற கட்சிகள். ஒன்று பாரிசான் நேஷனல். இன்னொன்று பக்காத்தான் ஹரப்பான்.
இதில் எந்த கட்சி வெற்றி பெற்றாலும் அது முழுமையான வெற்றியாக இருக்க வேண்டும் என்பதே நமது ஆசை. நமக்குத் தொங்கு சட்டமன்றம் வேண்டாம். மிக எளிதாக உறுப்பினர்களை வாங்கும் சட்டமன்றம் வேண்டாம். வெற்றி என்பது எந்த வகையிலும் கவிழ்க்க முடியாத சட்டமன்றமாக இருக்க வேண்டும். அப்போது தான் ஓர் நிலையான அரசாங்கத்தை நம்மால் பார்க்க முடியும்.
இந்த முறை வெற்றி எந்த திசை நோக்கிப் போகும்? பக்காத்தான் ஹரப்பானுக்கான வாய்ப்பு அதிகம் என்றே நான் கணிக்கிறேன். நேரடி கள ஆய்வுகள் எதுவுமில்லை! சும்மா ஒரு கணிப்பு தான். சென்ற முறை பக்காத்தானைத் தான் மக்கள் தேர்ந்தெடுத்தார்கள். அவர்களைக் கவிழ்த்தவர்கள் பாரிசான் கட்சியினர். மக்களுக்கு இது புரியாத புதிர் அல்ல. மக்களுக்கு அரசியலில் என்ன நடக்கிறது என்பது தெரியும்.
அதுவும் இந்தியர்களைப் பொறுத்தவரை பாரிசானில் இருக்கும் ம.இ.கா. சட்டமன்ற உறுப்பினர்களால் எதுவும் ஆகப்போவதில்லை! அது ஊரறிந்த உண்மை! அதிசயம் ஒன்றுமில்லை. ம.இ.கா.வினரைத் தேர்ந்தெடுப்பது என்பது கொள்ளையர்களைத் தெர்ந்தெடுப்பதற்குச் சமம். அது மட்டும் அல்ல. அவர்கள் வாயைத் திறக்க வேண்டிய இடத்தில் வாயில் பணத்தைப் போட்டு அடக்கிக் கொள்வார்கள்!
பொறுத்திருப்போம். இன்னும் சில மணி நேரங்களில் முடிவுகள் தெரிந்துவிடும். மக்கள் யார் பக்கம் என்று!
Friday, 19 November 2021
என்ன முன்னேற்றத்தைக் கண்டோம்?
"மலேசியன் இந்தியர் காங்கிரஸ்" என்னும் பேரியக்கத்தை நான் குறை சொல்ல மாட்டேன். அந்த கட்சி பல பெரியவர்களால் இந்தியர்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்ட ஒரு கட்சி. ஆனால் இடையே சுயநலமிகளால் வழிநடத்தப்பட்டு இந்தியர்களை வீழ்த்த நடந்த சதியில் அக்கட்சி பாதை மாறிப்போனது!
இந்தியர்களின் மேம்பாட்டுக்காக ஆண்டுக்குப் பத்து கோடி வெள்ளி அதனையும் அடித்து வாய்க்குள் போட்டுக் கொள்கிறார்கள்! மனம் கனக்கிறது. யாரை நொந்துகொள்வது? கொள்ளையடிக்கிற இடத்தில் இருப்பவன் அவன் தானே!
இந்தியர்களின் முன்னேற்றம் என்றாலே ஏதோ இவர்களின் முன்னேற்றம் மட்டும் தான் என்கிற எண்ணம் இவர்களிடையே வளர்ந்துவிட்டது. படிக்காத அறிவு கெட்டவனைக் கூட வெளிநாடுகளுக்கு அனுப்பி படித்தவனாகக் காட்டிக் கொள்வதில் இவர்களுக்கு அபரிதமான ஆசை.
இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்பதை நம்மால் ஊகிக்க முடியவில்லை. இவர்களின் டி.என்.ஏ. கொள்ளையர்கள் சம்பந்தப்பட்டதோ!
ஒரு விஷயத்தில் நான் மலேசிய சீனர் சங்கத்தைப் பாராட்டுகிறேன். தேர்தல் களத்தில் குதிப்பவர்கள் என்றால் அவர்கள் பெரும்பாலும் பணம் உள்ளவர்களாகவே வருகிறார்கள். அவ்ர்களுடைய சமூகத்தைச் சார்ந்த பிரச்சனைகளில் அவர்கள் உண்மை உள்ளவர்களாக இருக்கிறார்கள். சமூகம் எந்த வகையிலும் பாதிப்பதில்லை.
அதைத்தான் நாமும் விரும்புகிறோம். ஆனால் அது மட்டும் நடப்பதில்லை! ஓரே காரணம் தான். இங்குப் பஞ்சப்பராரிகளை வைத்துக் கொண்டு நாம் அரசியல் நடத்துகிறோம்! இவர்கள் நோக்கமெல்லாம் பட்டம், பதவி, பணம்! பட்டம், பதவி கூட பரவாயில்லை. மன்னித்துவிடலாம். ஆனால் சமுதாயத்திற்குக் கிடைக்க வேண்டிய பொருளாதார உதவிகளையும் சுரண்டி விடுகிறார்கள்! இதனைத் தான் நம்மால் பொறுத்துக் முடியவில்லை.
எலியை உணவாகக் கொள்ளும் இருளர் சமூகத்திடம் உள்ள தன்மான உணர்வு கூட இல்லாத "கொள்ளயர்" சமூகமாக இவர்கள் உருவாகிவிட்டனரே என்று நினைக்கும் போது ஏற்படப்போகும் சாபங்களை இவர்கள் நினைத்தே பார்ப்பதில்லையா? ஐயோ பாவம் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது!
உங்களுக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புகளை மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை என்றால் உங்களுக்கு ஐயோ கேடு! வரப்போகிற கேடுகளுக்குத் தயாராக இருங்கள்! கேடுகளிலிருந்து உங்களால் தப்பிக்க முடியாது. மக்கள் கொடுக்கும் சாபத்திலிருந்து உங்களால் எங்கும் ஓடிவிட முடியாது!
இந்திய சமுதாயத்தை எப்படி விழவைத்தீர்களோ அதே போல நீங்களும் வீழ்வீர்கள்!
Thursday, 18 November 2021
திரைக்கடல் ஓடியும்.........!
மலேசியாவின் இளம் தலைமுறையினர் வெளிநாடு சென்று வேலை செய்வதையே விரும்புகின்றனர் என்று ஆய்வுகள் காட்டுகின்றன!
அதற்கு ஒரே காரணம் நமது கல்வி தரத்தை நாமே குறைத்து மதிப்பிடுகிறோமோ என்பது தான்! வேலை கிடைப்பது குதிரைக் கொம்பு. ஆனால் இதே கல்வி தரத்தை வெளி நாடுகளில் ஏற்றுக்கொள்கின்றனர்.
அதுவும் இந்திய இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள் முற்றிலுமாக மறுக்கப்படுகின்றது என்பதைக் குறிப்பிட்டுத்தான் ஆக வேண்டும். அதுவும் பட்டதாரி இளைஞர்களுக்கு வாய்ப்புக்கள் மறுக்கப்படுகின்றன. தனியார் துறைகளும் நமது கைகளில் இல்லாததால் அங்கு வேலை வாய்ப்புக்கள் கிடைத்தாலும் சம்பளத்தில் கை வைக்கின்றனர்! அதுவே நமது இளைஞர்களுக்கு இங்கு வேலை செய்வதில் வெறுப்பை ஏற்படுத்துகின்றன.
இந்திய இளைஞர்களுக்கு சிங்கப்பூரில் வேலை வாய்ப்புக்கள், நல்ல சம்பளத்துடன், கிடைப்பதால் பெரும்பாலும் அங்கு வேலை செய்வதையே விரும்புகின்றனர். சிங்கப்பூரில் சம்பளம் அதிகம். அதுமட்டும் அல்ல. நாம் சிங்கப்பூரை வேறு ஒரு நாடு என்று என்றுமே நினைத்ததில்லை! அது மலேசியாவின் ஒரு பகுதியாகவே நாம் நினைக்கிறோம்! அதனால் நமக்குச் சிங்கப்பூர் தான், வேலை என்று வரும்போது, முதலிடமாக நமது நினைவுக்கு வருகிறது.
நாம் எங்கெல்லாம் வேலை தேடிப் போகிறோம் என்பதை ஆய்வுகள் என்ன சொல்கின்றது என்று பார்ப்போம்:
சிங்கப்பூர்: 59% ஆஸ்திரேலியா: 48% நியுசிலாந்து: 50% பிரிட்டன் 55%
பிரிட்டனுக்குப் போகிறவர்கள் பெரும்பாலும் தங்களது கல்வித் தகுதியை உயர்த்திக் கொண்டு பின்னர் அங்கேயே தங்கி விடுகின்றனர். ஆஸ்திரேலியா போகிறவர்களும் அதே கதை தான். அங்கேயே தங்கிவிட விரும்புகின்றனர். ஏறக்குறைய நியுசிலாந்தும் அதே கதை தான்.
மற்றைய நாடுகளிலும் பலர் வேலை செய்யத்தான் செய்கின்றனர். அவர்கள் நிச்சயம் நாடு திரும்பவே விரும்புகின்றனர். குறிப்பாக அரபு நாடுகளில் வேலை செய்பவர்கள், ஆப்பிரிக்க நாடுகளில் வேலை செய்பவர்கள் அங்குத் தங்க விரும்பமாட்டார்கள்.
எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் நைரோபியில் (ஆப்பிரிக்கா) வேலை செய்து விட்டு திரும்பவும் வியட்னாமுக்குப் போய்விட்டார். ஆனாலும் இங்கு தான் அவர் வீடு உள்ளது. அவருடைய சம்பளம் என்பது அமெரிக்க டாலரில் தான் கொடுக்கப்படுகிறது.
இங்கு வேலை மறுக்கப்படும் என்றால் வெளி நாடுகளுக்குப் போவதைத் தவிர வேறு வழியில்லை! வெளி நாடுகளில் கிடைத்த அனுபவத்தைக் கொண்டு இங்குச் சொந்தத் தொழிலில் ஈடுபடுவது இன்னும் சிறந்தது.
நமக்கு இளம் தலைமுறையினர் மீது நம்பிக்கை உள்ளது. அவர்களுக்குத் திறமைகள் உண்டு. துணிவாக காரியங்களைச் செய்யும் மனப்பக்குவம் உண்டு.
நமது இன இலைஞர்கள் வருங்காலத்தில் சாதனைகள் புரிவார்கள் என நம்பலாம்!
நான்கு இலக்க சூதாட்டத்துக்குத் தடை!
கெடா மாநிலத்தில் நான்கு இலக்க சூதாட்டத்திற்குத் தடை
கெடா மாநிலத்தில் நான்கு இலக்க சூதாட்டத்திற்குத் தடை விதித்தார் மாநில மந்திரி பெசார் முகமட் சனூசி நொர்!
சூதாட்டம் என்பதை பொதுவாக நாம் வெறுக்கிறோம். எந்த மதமும் சூதாட்டத்தை ஆதரிக்கவில்லை.
எத்தனை மதங்கள் இருந்தும் என்ன பயன்? "மறு உலக வாழ்க்கையில் கேள்வி கேட்கப்படுவேன்!" என்கிற பயம் அவர் ஒருவருக்குத் தான் இருப்பதாகத் தெரிகிறது! இது நாள்வரை கெடா மாநிலத்தை வழி நடத்தியவர்களுக்கு அந்த பயம் ஏற்படவில்லை!
ஆனால் இந்த ஒரு விஷயத்திற்காக அதாவது சூதாட்டத்தை ஒழித்ததற்காக இவர் மறு உலகில் நல்ல வாழ்க்கை அமையும் என்று நினைக்கிறாரா? நாம் அப்படி நினைக்கவில்லை. அப்படி முடியும் என்றால் ஒவ்வொரு அரசியல்வாதியும் தனது கடைசி காலத்தில் இப்படி ஒர் சாதனையைப் படைத்துவிட்டு மிக எளிதாக மறு உலகிற்குள் புகுந்து நல்ல பெயர் வாங்கி விடுவார்கள்!
சனூசி எப்படி இதனைச் செய்தாரோ அதே போல இன்னும் பல நல்ல காரியங்களைச் செய்ய வேண்டி வரும். இப்போது செய்தது மிகவும் சாதாரண காரியம். இருக்கிற மற்ற இனத்தவரின் வழிபாட்டுத்தலங்கள் மீது கைவைக்கக் கூடாது! கோரோனா என்று சுகாதார அமைச்சு ஊரடங்கை விதித்தால் அதற்குக் கட்டுப்பட வேண்டும். பக்கத்து மாநிலங்களோடு சண்டைக்குப் போகக் கூடாது! தனக்குக் கீழே அடியாள்களை வைத்துக் கொண்டு மிரட்டக் கூடாது! பினாங்கு மாநில முப்தி சொன்னது போல "கம்பத்துக் கௌபாய்" போல நடந்து கொள்ளக் கூடாது! இதெல்லாம் அகம்பாவங்கள்! மட்டும் அல்ல! மறு உலக நல்வாழ்விற்கு எதிரடையானவை! இந்தக் குறைபாடுகளை வைத்துக் கொண்டு மறு உலக வாழ்க்கைப் பற்றி பேசுவதே தவறு! இங்கு யாரும் உத்தமர் இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்!
நான்கு இலக்க சூதாட்டத்தை ஒழித்துவிட்டார். அத்தோடு கதை முடிந்ததா? அப்படியெல்லாம் சொல்வதற்கில்லை. இனி கள்ளத்தனமாக நான்கு இலக்க விளையாட்டு தொடரவே செய்யும்! அதிகாரபூர்வமாக நான்கு இலக்க விற்பனை இருக்கும் போதே கள்ளத்தனமாகவும் அது எழுதப்பட்டு வருகிறது என்பதும் மறப்பதற்கில்லை! இனி அது, குறிப்பாக கெடா மாநிலத்தில், இன்னும் அதிகமாக பயன்பாட்டுக்கு வரும் என நம்பலாம்!
இந்த நிலை வரும்போது என்னவாகும்? அரசாங்கத்திற்குக் கிடைக்க வேண்டிய வருமானம் போய்விடும்! இனி தனிப்பட்ட முறையில் வியாபாரம் செய்பவர்கள் கூடுவார்கள். அவர்களில் அதிக இலாபம் பெறுபவர்களும் இருப்பார்கள்! துணடை காணோம் துணியைக் காணோம் என்று ஓடிப்போகுபவர்களும் இருப்பார்கள்!
ஆக, எப்படிப் பார்த்தாலும் இந்த சூதாட்டம் அவ்வளவு எளிதில் மறைய வழியில்லை! இன்னொரு அரசாங்கம் மாநிலத்திற்கு வரும் போது அதனை மீண்டும் கொண்டு வருவார்கள்!
இதற்கெல்லாம் ஒரு முடிவு காண வேண்டுமென்றால் "திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது!" என்று பட்டுக்கோட்டையார் பாடலைக் கேட்டு தலையில் அடித்துக் கொள்ள வேண்டியது தான்!
Wednesday, 17 November 2021
இந்திரா காந்தி வழக்கில் அலட்சியமா?
Tuesday, 16 November 2021
ஊழியர் சேமநிதி பறிபோனது!
ஊழியர் சேமநிதியில் உள்ள சந்தாதாரர்களின் சேமிப்பு மிக மோசமான நிலைக்குப் போய்விட்டது என்பதை அறிய மனம் பதபதைக்கிறது. 36 இலட்சம் சந்தாதாரர்களுக்கு அவர்கள் சேமிப்பில் இருக்கும் பணம் வெறும் 1000 ரிங்கிட்டுக்கும் குறைவே என்று அறியும் போது மனம் கவலை கொள்கிறது. இவர்களில் பெரும்பாலோர் மிகச் சாதாரண வேலையில் உள்ள தொழிலாளர்களாகத்தான் இருக்க முடியும்.
யார் என்ன செய்ய முடியும்? கோவிட்-19 என்னும் தொற்று நோய் உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் வேளையில் நமது நாடு மட்டும் அதிலிருந்து விலக்கா பெற முடியும்? பலர் வேலை இழந்தனர். சாப்பாட்டுக்கு வழியில்லை.
அந்த நேரத்தில் ஊழியர் சேமநிதி வாரியம் நமக்குக் கை கொடுத்தது. உண்மையைச் சொன்னால் நம்மிடம் சொந்தப் பணம் எதுவுமில்லை. சொந்த சேமிப்பு எதுவுமில்லை. அதனால் பலர் ஊழியர் சேமநிதியிலுள்ள பணத்தை எடுத்துத்தான் தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டனர்.
அந்த சமயத்தில் நமக்கு அதன் வலி தெரியவில்லை. அப்போது அதன் தேவை நமக்கு முக்கியம். இப்போதோ வலி தெரிகிறது. ஆமாம் சேமநிதியில் இருந்த பணம் அடிமட்டத்திற்குக் குறைந்து போனது. இப்போதோ ஆயிரம் ரிங்கிட்டுக்கும் குறைவான பணம் தான் உள்ளது! அது தான் துயரம்.
ஆனால் இளம் வயதினருக்கு இது பிரச்சனையே அல்ல. இன்னும் நீண்ட காலம் அவர்கள் வேலை செய்வர். அவர்கள் ஓய்வு பெரும் போது கணிசமான தொகை அவர்களது கணக்கில் இருக்கும். அதன் மூலம் அவர்கள் வீடு வாங்கலாம் அல்லது ஏதாவது சொத்துகள் வாங்கலாம்.
ஆனால் நடுத்தர வயது அல்லது இன்னும் சில ஆண்டுகளில் ஓய்வு பெறுபவர்கள் தான் சிக்கலில் மாட்டுகின்றனர். போதுமான சேமிப்பு இருக்க நியாயம் இல்லை. ஆனாலும் "வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்" என்பார்கள். அது தான் உண்மை.
இருக்கிற பணத்தை வைத்துக் கொண்டு சிறு தொழில்களில் ஈடுபடாலாம். சிறிய முதலீட்டில் தொழில்கள் செய்ய எத்தனையோ சிறிய தொழில்கள் உள்ளன. அல்லது நீங்கள் உங்களின் தனிப்பட்ட திறனை வைத்து ஒரு தொழிலை உருவாக்கலாம்.
எல்லாமே நம்மால் முடியும். எதை செய்தாலும் அதனை நம்பிக்கையோடு செய்யுங்கள். அல்லது சேமநிதியில் உங்களது சேமிப்பை அதிகமாக்க வேண்டுமானால் இன்னும் அதிகமாக உழையுங்கள். உங்களின் வருமானத்தை அதிகரியுங்கள். அதன் மூலம் ஊழியர் சேமநிதியில் உங்களது சேமிப்பை அதிகமாக்குங்கள்.
எல்லாமே நம் கையில் தான் உள்ளது. சேமிப்பு குறைந்து போனதே என்று கன்னத்தில் கையை வைத்துக் கொண்டிருக்க முடியாது. வாழ்க்கையை வாழ வேண்டும்.
நம்மிடம் சேமிப்பு இல்லை என்றால் யார் என்ன செய்ய முடியும்? ஊழியர் சேமநிதி ஒன்றே வழி. அதைத்தான் அவர்கள் செய்தார்கள். இப்போது குறைந்து போனது என்பது உண்மை தான். ஆனால் நாம் குறைந்து போகவில்லை. வாழ்ந்து காட்டுவோம்!
"வெஜி" முதலையைத் தெரியுமா?
Monday, 15 November 2021
சமையல் எண்ணைய் தீர்ந்தது!
விலை உயர்ந்த சமையல் எண்ணைய் கிடைப்பதில் பிரச்சனை இல்லை. ஏழை எளியவர் வாங்கும் பிளாஸ்டிக் பைகளில் வரும் சமையல் எண்ணைய் கிடைப்பதில் பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கின்றன.
இது எண்ணெய் பதுக்கல் நாடகம் என்பது தான் பெரும்பாலோரின் கருத்து. அதுவும் பெருநாள்கள் வரும் போது இது போன்ற பதுக்கல்களும் சேர்ந்து வருவது இயல்பு தான்.
தீபாவளி கொண்டாடும் மக்கள் அப்படி ஒன்றும் பெரும் பணக்காரர்கள் அல்ல. பெரும்பாலும் கீழ்த்தட்டு மக்கள். அதுவும் இந்த ஆண்டு பலருக்கு வேலை இல்லை, சம்பாத்தியம் இல்லை, குடும்பத்தை நடத்துவதற்கே அல்லல் படுகின்றனர். இந்த நேரத்தில் இது போன்ற அத்தியாவசிய பொருள்களின் விலையேற்றம் - இது விலையேற்றம் அல்ல , பதுக்கல் - செய்வது கொடிதிலும் கொடிது மிகக் கொடிது.
விழாக்காலங்களில் பொருள்களின் விலையேற்றுவது வியாபாரிகளுக்குக் கைவந்த கலை. அதனால் தான் ஒவ்வொரு பெருநாட்களின் போதும் அரசாங்கம் தலையிட்டு அத்தியாவசிய பொருள்களின் விலையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. பாராட்டுகிறோம்!
ஆனால் இந்த ஆண்டு என்னவாயிற்று? பொருளே சந்தையில் இல்லை என்றால் அது யாருடைய குற்றம்? அரசாங்கம் ஏன் அதில் அக்கறைக் காட்டவில்லை? பொதுவாக இந்தியர் என்றாலே அரசாங்கம் அக்கறைக் காட்டுவதில்லை. அதுவும் பாஸ் கட்சியினர் அரசாங்கத்தில் இருப்பதால் நடக்கக் கூடாததெல்லாம் நடக்கும் என்பதை நாம் புரிந்து வைத்திருக்கிறோம். ஆனால் இந்த பிளாஸ்டிக் பைகளில் உள்ள எண்ணெய் என்பது இந்தியர்கள் மட்டும் அல்ல ஏழை மலாய்க்காரர்களும் பயனீட்டாளர்கள் என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். ஏழைகள் எல்லா இனத்திலும் இருக்கிறார்கள். அவர்கள் தான் பெரும்பாலும் விலைகுறைவான எண்ணெயைப் பயன்படுத்துபவர்கள். அவர்களின் வாயிலும் வயிற்றிலும் அடிப்பது யாருக்கும் நல்லதல்ல.
ஆனாலும் அரசாங்கம் அதைச் செய்கிறது! இது நாள் வரை முடிந்தவரை பெருநாள் காலங்களில் ஒரு சில கட்டுப்பாடுகள் வைத்திருந்தனர். முகைதீன் பிரதமராக பதவியேற்ற பின் அனைத்தும் பறிபோயிற்று! அவர் தனது பதவியைத் தக்க வைத்துக் கொள்ளவே பெரும்பாலான நேரத்தை அதற்காகவே ஒதுக்கிவிட்டார்! பிரதமர் பதவி மாற்றம் என்றாலும் அரசாங்க அதிகாரிகள் அதே அதிகாரிகள் தாம். இவர்களுக்கு என்ன நேர்ந்தது? இவர்கள் ஏன் தங்களது கடமைகளைச் செய்யவில்லை என்பது நமக்கும் புரியவில்லை.
ஒரு விஷயத்தில் மட்டும் அரசாங்க அதிகாரிகள் மிகவும் உஷாராக இருக்கிறார்கள். முஸ்லிம்களுக்கான பெருநாட்கள் என்றால் அதில் எந்த தவறும் நேர்வதில்லை. காரணம் அவர்களும் பயனீட்டாளர்கள் தான் என்பதை மட்டும் அவர்கள் மறப்பதில்லை!
நிச்சயமாக அவர்கள் தங்களது கடமைகளைச் செய்வதில் பாரபட்சம் காட்டுகிறார்கள். அதுவே தவறு தான். அவர்களுக்கான சம்பளம் என்பது முஸ்லிம் அல்லாதவர்களிடமிருந்தும் வரியாக வருகிறது என்பதை அவர்கள் மறக்கவே கூடாது.
இனி வருங்காலங்களில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.
சமையல் எண்ணெய் தீரலாம்! ஆனால் சமையல் தீராது!
விசாரணை வேண்டும்!
"கேட்க ஆளில்லை என்றால் தம்பி சண்ட பிரசண்டன்!" என்று ஒரு பழமொழி உண்டு.
முன்னாள் பிரதமர் முகைதீன் யாசின் எப்போது கொல்லைப்புற வழியாக பதவிக்கு வந்தாரோ அன்றிலிருந்து நம் நாட்டிற்கு வந்தது பேராபத்து! எல்லாம் தலைகீழாக மாறிவிட்டன!
முகைதீன் தனது பதவியைத் தக்கவைத்துக் கொள்ள பல மேடை நாடகங்கள், பல அரிதாரங்களை போட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானார்!
"அவனுக்குப் பதவி, இவனுக்குப் பதவி, அவனை மந்திரியா போடு, இவனை வெளி நாட்டுத் தூதரா போடு, எல்லாருக்கும் பதவி, எல்லாரும் சமமாக கூடி வாழலாம் வாங்க! எல்லாருக்கும் அமைச்சருக்கான சம்பளம்!ஆனால் அரசாங்கத்தை மட்டும் கவிழ்த்திராதீங்க! நீங்க கேட்கறத எல்லாம் செய்யிறேன்! நான் பிரதமரா இருக்கனும்! அத மட்டும் யாரும் கேட்டுறாதீங்க!" என்று அள்ளிவிட்டே - பணத்தை அள்ளிவிட்டே - அரசாங்கத்தை நடத்தி வந்தவர் அவர்!
நிச்சயமாக நாம் அவரிடம் கேட்க வேண்டிய கேள்விகள் நிறையவே உண்டு! நாம் கேள்வி கேட்டால் நம்மை ஆள்பவர்களுக்கு எதிரிகள் என்று முத்திரைக் குத்துவார்கள்!
ஆனால் மாமன்னர் அதனைக் கூறியிருக்கிறார். பணம் 62 கோடி வீண் விரயம் செய்யப்பட்டிருக்கிறது, வீணடிக்கப்பட்டிருக்கிறது அதற்கு விசாரணை வேண்டும் என்று மாமன்னர் உத்தரவிட்டிருக்கிறார்.
தேவையான நேரத்தில் மாமன்னரின் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. நாம் நிச்சயமாக மாமன்னரின் அறிவிப்பை வரவேற்கிறோம். காரணம் இப்போது இருக்கும் அரசாங்கமும் ஏறக்குறைய முகைதீனின் அரசாங்கத்தோடு ஒத்துப்போகும் நிலையில் தான் இருக்கிறது. யாருக்காவது ஏதாவது பதவியைக் கொடுத்துத் தான் தனது நிலையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய ஒரு கட்டாயம்!
இவர்களுக்கும் அந்த அறிவிப்பு ஒரு எச்சரிக்கையைத் தரும் என நம்பலாம். இப்போது நாட்டிற்கு ஒரு சவாலான நேரம். தொற்று நோயால் ஏற்பட்ட ஒரு நெருக்கடி நிலை. மக்கள் வேலை இல்லாமல் பலர் பட்டினி கிடக்கும் நேரம். வேலை இருந்தால் அவர் அவர் பிழைப்பை அவரவர் கவனித்துக் கொள்வார்கள். வேலைக்கும் வழி இல்லை. குடும்பத்தைக் காப்பாற்றவும் வழியில்லை. வறுமை என்றால் என்ன என்பதை இப்போது தான் மக்களுக்குப் புரிய ஆரம்பித்திருக்கிறது.
ஆனால் கொழுத்துப் போன அரசியல்வாதிகளோ நாட்டைக் கவனிக்காமல் தங்களது பதவிக்காக காசை கரியாக்குகிறார்கள். பணம் கோடிக்கணக்கில் வீணடிப்பு, இவர்களின் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள! மக்களின் நலனுக்காக அல்ல!
ஆனால் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மாமன்னரின் உத்தரவு எந்த அளவுக்கு பலனளிக்கும் என்று தெரியவில்லை. ஆனால் பலனளிக்க வேண்டும் என்பது தான் மக்களின் ஆசை.
மாமன்னரோடு சேர்ந்து நாமும் "விசாரணை வேண்டும்!" என்று உரத்த குரலில் கூறுவோம்!
விசாரணை வேண்டும்! விசாரணை வேண்டும்!
Sunday, 14 November 2021
வாழ்த்துகள் தலைவரே!
Saturday, 13 November 2021
நீதியரசர் 'ஜேய்பீம்' சந்துரு
நீதியரசர் சந்துரு
ஜேய் பீம் திரைப்படம் வெளியான பின்னர் உலகத் தமிழர்களால் அறியப்படாத ஒரு மனிதர் தீடீரென அறியப்பட்ட ஒரு மனிதராக இன்று வலம் வருகிறார் என்றால் அது நீதியரசர் சந்துரு.
ஆமாம்! அதற்கு முன்னர் நாம் அவரைப்பற்றி கேள்விப்பட்டதில்லை. ஒரு திரைப்படம் உலகெங்கிலும் அவரைக் கொண்டு போய் சேர்த்துவிட்டது.
ஒரு மனிதர், தான் வாதாடும் வழக்குகளில், அதுவும் பழங்குடி மக்களின் வழக்குகளில் பணம் வாங்காமல் வாதாடுவது என்பது மனிதாபிமானத்தால் மட்டும் தான். அந்த மனிதாபிமானம் என்பதெல்லாம் இப்போதும் பல வழக்கறிஞர்களிடம் இல்லை!
அப்படியெல்லாம் மனிதாபிமானம் பேசினால் நம்மை "பிழைக்கத் தெரியாத பைத்தியக்காரன்!" என்பார்கள்! அந்த அளவுக்கு நாம் மிகக் குறுகிப் போய்விட்டோம்.
அவர் எல்லாக் காலங்களிலும் ஓர் இலட்சியத்தோடு வாழ்ந்தவர். அன்று அவர் பைசா வாங்காததினால் தான் இன்று இந்த உலகம் அவரைக் கொண்டாடுகிறது. இந்திய நாடு அளவில் அவர் பேசப்படுகிறார். உலகளவில் இன்று அவரிடம் பலர் பேசுகின்றனர். தமிழர்கள் பலர் அவரிடம் தொடர்பு கொள்கின்றனர். நிறைய பாராட்டுதல்களும் வாழ்த்துகளும் தொடர்கின்றன.
அன்று அவர் செங்கேணிக்காக (பார்வதி) வழக்காடி வெற்றி பெற்றாலும் அந்த வெற்றி வெளி உலகத்திற்குத் தெரியவில்லை. அந்த வெற்றியை யாரும் கண்டு கொள்ளவில்லை. ஒரு இருளர் பெண் தானே என்கிற அலட்சியம் மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை பேசுவதற்குத் தடையாக இருந்தது.
ஆனால் சந்துரு அது பற்றிக் கவலைப்படவில்லை. அவரது கடமையை அவர் செய்தார். கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே என்கிறது பகவத் கீதை. அவரைப் போல ஒரு சிலராவது செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். நேரம் வரும் போது அதற்கான பலன் ஏதோ ஒரு வகையில் அவர்களுக்குக் கிடைக்கத்தான் செய்யும். அதனை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.
அவர் வழக்கறிஞராக இருந்த போது வழக்குகள் எந்த அளவு இழுக்கடிக்கப்படுகின்றன. அதனால் நீதி கிடைக்காமல் போனவர்கள் பலர் என அறிந்திருந்தார். அதனால் தான் நீதியரசராக இருந்த போது அனைத்து வழக்குகளும் ஒரு வாரம், இரண்டு வாரம் அல்லது மூன்று வாரத்திற்குள் முடிக்கும்படியான ஒரு சூழலை உருவாக்கினார். அவர் தனது சுமார் ஏழாண்டுகாலம் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த போது ஏறக்குறைய 96,000 வழக்குகளுக்குத் தீர்ப்பு வழங்கியிருக்கிறார்! எந்த நீதிபதிகளும் செய்ய முடியாத ஒரு சாதனை!
நீதியரசர் சந்துரு இப்போது ஓய்வு பெற்ற நீதிபதி. வேலை வெட்டி இல்லாதவர் என்று நினைக்கக் கூடாது. மாணவப் பருவத்திலிருந்தே போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என்று தொடர்ந்து சமூக நீதிக்காகப் போராடியவர். இப்போது மட்டும் என்ன அவருடைய கையும் காலும் சும்மாவா இருக்கப் போகிறது!
Friday, 12 November 2021
செட்டித்திடல் பெயர் தொடர வேண்டும்!
ஒரு விஷயம் நமக்குப் புரியவில்லை. "செட்டித் திடல்" என்னும் பெயரை ஏன் கிள்ளான் நகராண்மைக் கழகம் மாற்ற வேண்டும் என்பது நமக்குப் புரியாத புதிர்.
நினைத்தால் நாங்கள் சரித்திரத்தை மாற்றுவோம் என்கிற ஆணவப் போக்கு என்பது சரியான போக்கு அல்ல. ஏற்கனவே இந்த சமுதாயம் பல வழிகளில் நமது சரித்திரத்தை இழந்திருக்கிறது. சரித்திரத்தை அப்பால் தூக்கி வீசிவிட்டு நாங்கள் சரித்திரமே இல்லாதவர்கள் என்று நிருபிக்க முயலுகிறதோ நகராண்மைக் கழகம்?
150 ஆண்டு கால பழமை வாய்ந்த ஸ்ரீநகர தண்டாயுதபாணி இந்து ஆலயத்தினர் இந்தப் பெயர் மாற்றத்திற்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அவர்களின் எதிர்ப்பு என்பது சரியானது தான். காரணம் அந்த நிலத்திற்குச் சொந்தக்காரர்கள் நாட்டுக்கோட்டை செட்டியார் சமூகத்தினர். அந்தக் காலத்தில் வெள்ளைக்காரர்களுக்கு அந்த நிலத்தை தானமாகக் கொடுத்தனர். அந்த நேரத்தில் அவர்களுக்கு அந்த நிலம் தேவைப்பட்டது.
அந்த நிலம் அந்தக் காலத்திலிருந்தே "பாடாங் செட்டி" அல்லது செட்டித் திடல் என்கிற பெயரிலேயே அழைக்கப்பட்டு வந்தது. விளையாட்டுத் திடலும் அருகே இருந்ததால் அப்படி அழைக்கப்பட்டது.
ஆனால் எந்த சம்பந்தமுமில்லாமல் ஏன் இந்தப் பெயர் மாற்றம் இப்போது தேவைப்படுகிறது என்பதே நமது கேள்வி. அந்த நிலம் அரசாங்கத்திற்குச் சொந்தமானது அல்ல. பிரிட்டிஷாருக்கு அந்த கோவில் நிர்வாகம் தானமாக கொடுத்த நிலம்.
இந்த விஷயத்தில் கோவில் நிர்வாகம் மட்டுமே அந்த எதிர்ப்பைத் தெரிவிக்கிறது. நமக்கு உள்ளூர் அரசியல் தெரியவில்லை. மலேசிய சீனர் சங்கமும் பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறது. மற்றபடி நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் யாரும் வாயைத் திறக்கவில்லை!
பெயர் மாற்றம் தேவை இல்லாத மாற்றம்! செட்டித்திடல் என்கிற பெயரே நிலைக்க வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்!
அந்த கொடூரம் வேண்டாம்
உலகமே மரண தண்டனை வேண்டாம் என்று உரத்தக் குரலில் குரல் எழுப்பிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் சிங்கப்பூர் அரசாங்கம் மட்டும் அதனை விடாப்பிடியாக 'யார் பேச்சையும் கேட்க மாட்டேன்!" என்று அடம் பிடிப்பது சரி எனத் தோன்றவில்லை.
ஒரு மலேசியரான நாகேந்திரன் தர்மலிங்கம் கஞ்சா கடத்தலின் பேரில் குற்றஞ்சாட்டப்பட்டு, விசாரணை செய்யப்பட்டு, மரண தண்டனை என்று தீர்ப்பளிக்கப்பட்டு இப்போது மரண தண்டனையை எதிர் நோக்கியிருக்கிறார். நவம்பர் 9-ம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டிய நாள். ஆனால் அதற்குள் அவருக்கு ஏற்பட்ட கோரோனா பாதிப்பினால் அவருடைய தூக்குத் தண்டனை தள்ளி போடப்பட்டிருக்கின்றது. இதற்கிடையே அவருடைய மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையையும் உயர்நீதி மன்றம் ஒத்தி வைத்திருக்கின்றது. விசாரணைக்கான தேதி நாகேந்திரன் குணம் அடைந்த பின்னரே தெரியவரும்.
நாகேந்திரன் குறைந்த அறிவாற்றல் உடையவர் என்பதோடு மனநலமும் குன்றியவர் என்று சொல்லப்படுகிறது. அது மட்டும் அல்லாமல் அவரது விசாரணை ஆங்கில மொழியில் நடபெற்றதாகவும் அந்த அளவுக்கு ஆங்கில புலமை பெற்றவரா என்பதும் ஐயத்திற்குரியதே. அதனால் தமிழ் மொழிபெயர்ப்பாளரைக் கொண்டு அவர் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அவரது வழக்கறிஞர் கூறுகிறார்.
மேலும் நாகேந்திரன் மனநலம் குன்றியவர் என்பதால் சட்டப்படி அவருக்கு மரண தண்டனை கொடுக்க முடியாது என்று சட்டம் கூறினாலும் நீதிமன்றம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் நல்ல மனநிலையில் உள்ளவர் என்பதாகவே நீதிமன்றம் கூறுகிறது.
இப்போது சிங்கப்பூர் அரசாங்கத்திற்குப் பல்வேறு தரப்பிலிருந்து கருணை மனுக்கள் போய்க் கொண்டிருக்கின்றன. உலகளவிலும் பலர் 'மரண தண்டனை வேண்டாம்!' என்று வேண்டுகோள் விடுத்துக் கொண்டிருக்கின்றனர். நமது மலேசிய பிரதமரும் அந்த இளைஞனுக்குக் கருணை காட்டுமாறு சிங்கப்பூர் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
ஆனால் இதுவரை சிங்கப்பூர் அரசாங்கம் எந்த கருணையும் காட்டுவதாகத் தெரியவில்லை. மரண தண்டனையை நிறைவேற்றுவதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பதாகத் தெரிகிறது. யாருடைய குரலுக்கும் அவர்கள் செவி சாய்ப்பார்கள் என்று நம்ப முடியவில்லை!
இந்த வழக்கு மட்டும் அல்ல பொதுவாகவே மரண தண்டனை வேண்டாம் என்பதே நமது நிலைப்பாடு! அந்தக் கொடூரமே வேண்டாம்!
Thursday, 11 November 2021
ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை!
மலேசியர்கள் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதாக சுகாதார அமைச்சர், கைரி ஜமாலுடின் ஒர் அதிர்ச்சி தகவலை ஒரு ஊடகப் பேட்டியில் கூறியிருக்கிறார்!
ஆரோக்கியமாக வாழவும், உடலை கட்டுப்கோப்பாக வைத்துக் கொள்ளவும், ஆண்டுக்கு ஒருமுறையாவது மருத்தவரிடம் உடம்பை பரிசோதனை செய்யவும் - பொதுவாக மக்கள் யாரும் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. அது நமக்கே தெரியும். நாமும் அப்படித்தான் இருக்கிறோம்!
இன்றைய நிலையில் மலேசியா ஆரோக்கிய மற்ற மக்களைக் கொண்ட ஒரு நாடு என்பதாகத்தான் ஒரு கருத்து நிலவுகிறது. உடல்பருமன் அதிகமாக உள்ளவர்கள், இருதய பாதிப்பு நோய் கொண்டவர்கள் அதிகம் என்பது தான் நமது நிலை.
"மலேசியாவில் இருவருக்கு ஒருவர் உடல்பருமன், அதிக எடையைக் கொண்டவர்கள். அதே போல நான்கு பேரில் ஒருவர் எந்த உடல் உழைப்பும் இல்லாதவர்கள். இருபது பேரில் ஒருவர் தான் சரியான உணவு பழக்கத்தை உடையவர்களாக இருக்கிறார்கள்" என்கிறார் சுகாதார அமைச்சர்.
உண்மை தான். அவரின் கருத்தை எதிர்த்துப் பேச யாரும் ஆளில்லை. நாம் அப்படித்தான் இருக்கிறோம். புள்ளி விபரங்கள் அதைத்தான் கூறுகின்றன.
கோவிட்-19 தொற்றை எடுத்துக் கொள்ளுங்கள். அரசாங்கம் நமக்குக் காதில் ஓதிக் கொண்டே இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. கூட்டம் கூடும் இடங்களில் போவதை நாம் தவிர்த்துக் கொள்ளலாம். வெளியே அதிகம் சுற்றுவதைக் குறைத்துக் கொள்ளலாம். உணவகங்களில் புகைப்பதை நிறுத்திக் கொள்ளலாம். இவைகள் எல்லாம் அரசாங்கம் சொல்லித் தான் அல்லது சட்டம் போட்டுத்தான் நிறுத்த வேண்டும் என்கிற அவசியமில்லை. ஆனால் நாம் அதைத்தான் எதிர்பார்க்கிறோம்!
ஜப்பான் நாட்டில் உலகளவில் நடைபெறும் மாபெரும் ஒலிம்பிக் விளையாட்டை நடத்தியது. அப்போதும் கூட கோவிட்-19 பெரிய அளவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அதற்கு என்ன காரணம்? ஜப்பானிய மக்கள் அரசாங்கம் சொன்னதை கடைப்பிடித்தார்கள். யாரும் எந்த அபராதத்தையும் கட்டவில்லை. தினசரி வாழ்க்கையை சரியான முறையில் கடைப்பிடித்தாலே போதும். பெரிதாக எதனையும் செய்ய வேண்டிய அவசியமில்லை.
எல்லா நிலையிலும் நாம் ஒழுக்க நெறியைக் கடைப்பிடிக்க வேண்டும். சரியான உணவு முறைகளை மேற்கொள்ள வேண்டும். தேகப்பயிற்சிகளைச் செய்ய வேண்டும். உடல் பருமன், அதிக எடை ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.
எல்லாவற்றையும் விட "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்பதை மறக்காமல் இருக்க வேண்டும்! அது போதும்!
வீரமங்கை மலாலா மணம் புரிந்தார்!
Malala Yousafzai married to Asser Malik
மலாலா யார் என்று பெரும்பாலும் தெரிந்திருக்க வேண்டும். தாலிபான் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டவர் - மன்னிக்க - சுட்டுக்கொல்லப் பட வேண்டியவர் - அந்தத் தூப்பாக்கிச் சூட்டிலிருந்து தப்பித்திக் கொண்டவர்! பின்னர் படு காயங்களுடன் இங்கிலாந்து சென்று அங்குள்ள மருத்தவர்களால் காப்பாற்றப்பட்டவர். துப்பாக்கி சூடு நடந்த போது அவருக்கு வயது 15.
தாலிபான்கள் மாலாலாவைக் கொடூரமான முறையில் கொலை செய்ய முயற்சித்ததற்கான காரணங்கள் என்ன? தனக்கும் தன்னைப் போன்ற பெண் பிள்ளைகளுக்கும் கல்வி வேண்டும் என்று அடம் பிடித்தது தான். பெண் கல்வி தாலிபான்கள் கொள்கைக்கு எதிரானது! பாக்கிஸ்தானின் ஒரு சில எல்லைப் பகுதிகள் தாலிபான்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. மலாலா வாழ்ந்த பகுதியும் அதில் அடங்கும்.
மாலாலா உலகெங்கிலும் பல நாடுகளுக்குச் சென்று பெண்கள் கல்வி கற்க வேண்டும் என்கிற அவசியத்தை வலியுறுத்தியவர். ஐக்கிய நாடுகள் சபையில் பெண்கள் உரிமைக்காக குரல் கொடுத்தவர். அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கப்பட்டிருக்கின்றது. மிக இளம் வயதில் நோபல் பரிசு பெற்ற ஒரே நபர் இவர்தான். அப்போது அவருக்கு வயது 17. இன்றளவும் மனித உரிமைக்காகவும், பெண்கள், குழந்தைகளின் கல்வி என்று தொடர்ந்து போராடிக் கொண்டிருப்பவர்.
இப்போது மலாலாவுக்கு வயது 24. அவர் திருமணம் செய்து கொண்டவரின் பெயர் அசர் மாலேக். அவர் பாக்கிஸ்தானில் பெரும் புள்ளி, தொழிலதிபர் என்று சொல்லப்படுகிறது. ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் பற்றி அவரது கருத்து கொஞ்சம் கலக்கலாக இருந்தது! "ஏன் திருமணம்? இருவருக்கும் பிடித்திருந்தால் சேர்ந்து வாழ வேண்டியது தானே!" என்றெல்லாம் பேட்டி கொடுத்திருந்தார். இப்போது அவரது கருத்தை அவர் மாற்றிக் கொண்டார் என்றே தெரிகிறது.
அவரது திருமணம் மிக எளிய முறையில், உறவினர்கள் புடைசூழ, அவரது பெர்மிங்ஹாம் இல்லத்தில் நடந்தேறியது. கோரோனா காலக்கட்டத்தில் உலகளவில் புகழ்பெற்ற ஒரு வீர மங்கையின் திருமணம் இது.
நாமும் அவரை வாழ்த்துவோம்! அவரின் சிறப்பான இல்லற வாழ்க்கைக்காக இறைவனைப் பிரார்த்திப்போம்!
Wednesday, 10 November 2021
இது சரியான முடிவா?
Idris Haron Nor Azman Hassan
பக்காத்தான் ஹராப்பான் (அன்வார் இப்ராகிம்) செய்தது சரியான முடிவா என்கிற விவாதம் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. அது பற்றி பேசுவதும் புண்ணியமில்லை. அவர்கள் கட்சியில் ஏற்றுக் கொள்ளப்பட்டு இப்போது அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட தொகுதிகளும் வழங்கப்பட்டுவிட்டன.
கட்சியின் இந்த முடிவை பக்காத்தான் கட்சியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பைத் தெரிவித்த போதிலும் அன்வார் அந்த எதிர்ப்புக்களை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் நமக்கு எதிரிகள் அல்ல நமது நண்பர்கள் என்பதாக அவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டி அவர்களை ஏற்றுக் கொண்டார்!
"ஓடுகாலிகளுக்கு ஓடுபாதையா?" என்று சொல்லி அவர்களை ஒதுக்க வேண்டிய அவசியம் நமக்கும் இல்லை. அன்வார்க்கு ஏதோ ஒன்று அவர்கள் நல்லவர்கள் என்று சொல்லுகிறது. பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல ஓர் அரசியல்வாதியை இன்னொரு அரசியல்வாதி தான் அறிவான் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
தலைவன் வழி நம் வழி. அவ்வளவு தான்! தலைவன் இட்ட பாதையை ஏற்றுக் கொள்வோம். இது தனிப்பட்ட அன்வாரின் கருத்தாக இருந்தாலும் அவர் முறைப்படி அதனை பக்காத்தான் கூட்டணியரோடு பேசி முடிவெடுத்திருக்கிறார். அதனால் நாம் அலட்டிக்கொள்ள ஒன்றுமில்லை!
அன்வாரின் கருத்து சரியா தவறா என்பது தேர்தல் முடிவுகள் தான் காட்ட வேண்டும். அதுவரை பொறுமை காப்போம்.
இந்த இருவரும் வெற்றி பெற்றால் - வெற்றி பெற்ற பின்னர் தான் அவர்களின் உண்மை சொரூபம் நமக்குத் தெரிய வரும். அவர்கள் பரம்பரைத் திருடர்களா அல்லது அரசியல் திருடர்களா என்பது நமக்குத் தெரியும்.
அதுவரை நாம் பொறுமை காப்போம். அவர்களை நாம் நம்புவோம். அவர்கள் நல்லவர்கள் என்பதாகவே நாம் நம்புவோம். அன்வார் சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும் என நம்புவோம்.
அன்வார் அல்லது பக்காத்தான் எடுத்த முடிவு சரியான முடிவு தான்! இனி மக்களின் முடிவை நாம் தெரிந்து கொள்வோம்!
பத்மஸ்ரீ ஹரேகலா ஹஜப்பா
நம் நாட்டில் இது போன்ற விருதுகள் ஏழை எளிய மக்களுக்குக் கிடைக்குமா என்று தெரியவில்லை; கேள்விப்பட்டதில்லை. ஆனால் இந்தியா, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மிக உயரிய பத்மஸ்ரீ விருது கொடுக்கப்பட்டிருக்கிறது.
அவரது பெயர் ஹரேகலா ஹஜப்பா. வயது 66. ஆரஞ்சு பழங்கள் விற்பனைச் செய்பவர். அது தான் அவரது தொழில். 1977 முதல் மங்களூரு பேருந்து நிலையைத்திலும் தெரு ஓரங்களிலும் இந்த தொழிலை செய்து வருகிறார்.
ஹஜப்பா எழுத படிக்கத் தெரியாதவர். ஒருமுறை வெளியூர்க்காரர் ஒருவர் இவரிடம் பழங்கள் வாங்கியிருக்கிறார். விலை என்ன என்று வெளியூர்க்காரர் ஆங்கிலத்தில் கேட்க இவரால் பதில் சொல்ல முடியவில்லை. அந்த ஒரு நிகழ்வே அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கிறது.
கன்னடம் மட்டுமே பேசத் தெரிந்த அவருக்கு தனது ஊரில் வாழும் பிள்ளைகள் தன்னைப் போல கல்வி அறிவு இல்லாதவர்களாக இருக்கக் கூடாது என்பதற்காக அன்றே சபதம் எடுத்திருக்கிறார். ஒரு பள்ளிக்கூடம் கட்ட வேண்டும். அது தான் அவரது சபதம்.
ஹரேகலா நியுபட்பு என்னும் தனது கிராமத்தில் கனவை நிறைவேற்ற அவருக்கு இருபது ஆண்டுகள் பிடித்தன. பள்ளி கட்ட அனுமதி கிடைத்தது 2000-மாவது ஆண்டு. முதன் முதலாக பள்ளி ஆரம்பித்த போது சுமார் 28 பிள்ளைகள் பள்ளியில் சேர்ந்தனர். அதன் பிறகு பல நூறு பிள்ளைகள் அங்குக் கல்வி கற்றிருக்கின்றனர். இப்போது அங்கு பத்தாம் வகுப்புவரை கல்வி கற்க வசதிகள் உண்டு. சுமார் 175 ஏழைப் பிள்ளைகள் கல்விப் பயிலுகின்றனர்.
ஹஜப்பாவுக்கு இன்னும் பல பள்ளிகள் வேறு ஊர்களில் திறக்க வேண்டும் என்கிற ஆசைகள் எல்லாம் உண்டு. வேறு பல ஊர்களிலிருந்து பள்ளிகள் திறக்க அவருக்கு அழைப்புக்களும் வருகின்றனவாம். பள்ளிகள் கட்ட நிலங்களும் கொடுக்கின்றனராம்.
தனக்குக் கிடைக்கும் பரிசுகள், பணம் அனைத்தையும் சேர்த்து வைத்து இன்னும் பள்ளிகள், கல்லூரிகள் திறக்க வேண்டும் என்பதையே இலட்சியமாகக் கொண்டிருக்கிறார்.
பிரதமர் மோடியிடம் தனது ஊரில் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே உள்ள பள்ளியை பன்னிரெண்டாம் வகுப்பு வரை உயர்த்தமாறு வேண்டுகோளும் விடுத்திருக்கிறாராம் ஹஜப்பா.
அவரது வேண்டுகோளை பிரதமர் நிறைவேற்றுவார் என நிச்சயம் நம்பலாம்.
பத்மஸ்ரீ போன்ற விருதகளை வாங்க எத்தனையோ பேர் தவம் கிடக்கின்றனர். மாபெரும் சபையில் வெறுங்கால்களுடன் நடந்து சென்று பத்மஸ்ரீ விருதை வாங்கியிருக்கிறார் ஹஜப்பா!