Wednesday 1 December 2021

விமான நிலையம் சீனாவின் வசமா?

 

                         உகாண்டாவின் ஒரே விமான நிலையம் சீனாவின் கையிலா!

நமது தமிழ் திரைப்படங்களில் இதனைப் பார்த்திருக்கிறோம். கிராமங்களில் உள்ள பணக்காரர்கள் ஏழைகளுக்குக் கடன் கொடுப்பதும் பிறகு பல இலட்சம் பெறுமானமுள்ள அவர்களின் சொத்துக்களை அபகரிப்பதும்  நாம் பார்த்திருக்கிறோம். உண்மையாகவே அது நடப்பது தான்.

ஆனால் இது கிராமத்து வில்லன்கள்  செய்கின்ற வேலை! பெரும்பாலும் உள்ளூர்களில் நடக்கும்!

ஆனால் சீனா எல்லாவற்றையும் மிஞ்சிவிட்டது. எல்லா நாடுகளையும் மிஞ்சிவிட்டது! எந்த ஒரு நாடும் செய்யாத, செய்ய விரும்பாத, சில செயல்களைச் செய்து வருகிறது.  கிராமத்து வில்லன்கள் செய்கின்ற வேலையை இப்போது சீனா உலகளவில் செய்து வருகிறது!

கடைசியாகக்  கிடைத்த செய்தி இது. கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டா நாட்டில் உள்ள ஒரே சர்வதேச விமான நிலையம் எண்டெபே விமான நிலையம் ஆகும்.  இந்த விமான நிலையத்தின் விரிவாக்கதிற்காக சீனாவிடமிருந்து அந்நாடு கடன் வாங்கியிருந்தது. தவணைக் காலம் முடிந்தும் உகாண்டா தனது கடனைச் செலுத்த முடியவில்லை.

இரு நாடுகளுக்குமுள்ள ஒப்பந்தத்தின் படி குறிப்பிட்ட காலத்திற்குள் தவணையைக் கட்ட முடியவில்லையென்றால் சீனா அந்த விமான நிலையத்தைக் கையகப்படுத்திக் கொள்ளலாம் என்று ஒப்பந்தம் கூறுகிறது. ஆனால் உகாண்டா குறிப்பிட்ட  அந்த விதியை ஏற்றுக்கொள்ளவில்லை.  அந்த விதியை நீக்குமாறு உகாண்டா வலியுறுத்தியும் சீனா மறுத்து வந்துள்ளது.

இப்போது உள்ள நிலையில் ஒப்பந்தம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது. அதனால் சீனா ஒப்பந்தத்தில் உள்ளபடி  உகண்டாவின் சர்வதேச விமான நிலையத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்தாற் போலவே சீனா பல ஏழை நாடுகளை, தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, இந்த முறையைக் கையாண்டு வருகிறது. மலேசியாவிலும் இது நடந்திருக்கும். ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதன் போக்கை மாற்றிவிட்டது. ஸ்ரீலங்காவில் இரண்டு துறைமுகங்கள் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளன என்று கூறப்படுகிறது.

உலகில் எந்த ஒரு நாடும் செய்யத் துணியாத இப்படி ஒரு செயலை சீனா செய்கிறது. கடன் கொடுப்பது வாங்குவது சரி.  அப்படித் தவறினால் அதனை வாங்க வேறு பல வழிகள் உள்ளன. 

ஆனால் சீனா பின்பற்றும் வழி என்பது புதுவிதமான வன்முறை!

No comments:

Post a Comment