Saturday 11 March 2023

குட்டை ஆடைகள் வேண்டாம்!

 

கடந்த சில வாரங்களாக குட்டை ஆடைகள் அணியும் பிரச்சனை தொடர்ந்து மக்களிடையே பேசுபொருளாக மாறியிருக்கிறது!

திடீரென்று ஒரு நாள் போலிஸ்காரர் ஒருவர் போலிஸ் ஸ்டேஷனுக்குள் குட்டை ஆடை அணிந்து கொண்டு வரக்கூடாது என்று உத்தரவு போட்டார். அதுவே இப்போது எல்லா அரசாங்க அலுவலகங்களும் கடைப்பிடிக்க ஆரம்பித்துவிட்டன என்றே தோன்றுகிறது.

அது தவறு என்று நான் சொல்லவரவில்லை. மக்களுக்கு அது முன்கூட்டியே சொல்லப்பட்டிருக்க வேண்டும். அரசாங்க ஊழியர்கள்  எப்படி உடைகள் அணிய வேண்டும் என்பதற்குச்  சட்டங்கள் உண்டு.  அதனை அவர்கள் தவறாமல் கடைப்பிடிக்கிறார்கள். 

ஆனால் மக்கள் எப்படி உடைகள் அணீய வேண்டும் - அதாவது அரசாங்க அலுவலகங்களுக்குச் செல்லும் பொது மக்கள் எப்படி உடை அணிய வேண்டும் என்பதற்கு ஏதேனும் வரைமுறைகள் இருக்கின்றனவா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன்  என்கிற நிலைமை தான் இப்போது நிலவி வருகிறது! பல மைல்கள் அப்பாலிலிருந்து  ஒரு வேலையாக அரசாங்க அலுவலகத்திற்கு வருபவர்களை ஆடை சரியாக அணியவில்லை என்று அவர்களைத் துரத்தியடிப்பது நியாயமற்ற செயல். 

மக்கள் முன்னரே அறிந்திருந்தால் சரியான உடைகளை  அணிந்தே வருவார்கள். இத்தனை ஆண்டுகளாக  ஆடாமல் அசையாமல் அப்படியே இருந்து இரசித்துவிட்டு  இப்போது திடீரென "அது தான் சட்டம்! இது தான் சட்டம்!" என்று உத்தரவு போடுவது அறிவில்லாதார் செயலாகவே தோன்றுகிறது.  

சட்டம் அப்படியே தானே இருக்கிறது? இத்தனை ஆண்டுகள் ஏன் அதனை அமலாக்கத்திற்குக் கொண்டு வரவில்லை? யார் தடுத்தது? இத்தனை ஆண்டுகள் உங்கள் தவற்றினை உணரவில்லை. இப்போது என்ன செய்யலாம்? எடுத்த எடுப்பில் உங்கள் புத்தியைக் காட்டாமல் கொஞ்ச விட்டுக் கொடுத்து பிறகு உங்களின் புத்தியைக் காட்டலாம்! முன் கூட்டியே அபாய அறிவிப்பைச்  செய்துதான் ஆகவேண்டும். அதன் பின்னர் யாரும் உங்களைக் குறை சொல்லப் போவதில்லை.

குட்டை ஆடைகளைப் போடுவதை யாரும் விரும்புவதில்லை. அரசாங்க அலுவலகங்கள் அதனை விரும்பினால் மக்களுக்கு அதனை அறிவித்துவிட வேண்டும். ஆமாம் இந்த உத்தரவு பெண்களுக்கு மட்டுமா அல்லது ஆண்களுக்குமா? ஆண்களும் அரை சிலுவாரோடு அலுவலகங்களுக்கு வருகிறார்களே! அவர்களுக்கு இந்த உத்தரவு பொருந்துமா? தெளிவாகச் சொல்லி விடுங்கள். மீண்டும் மீண்டும் மக்களைத் துன்பத்திற்கு உள்ளாக்காதீர்கள்.

குட்டை உடைகள், குட்டைப் பாவடைகள் வேண்டாம் என்பதே நம் வேண்டுகோள்!

No comments:

Post a Comment