Friday 3 March 2023

ஹாடி உங்களுக்கு இது தான் பொழப்பா!

 


நாட்டில் ஒற்றுமை அரசாங்கம் நடந்து கொண்டிருக்கிறது. நமக்குப் பிடிக்காத தேசிய முன்னணியும் அந்த ஒற்றுமை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கிறது. அதனால் நாம் கோபித்துக் கொள்ளவா முடியும்? வேறு வழியில்லை!  அரசாங்கம் நடக்க வேண்டும். அதற்கான ஒரே வழி எதிரிகளையும் இணைத்துக் கொண்டு முடிந்த வரையில் நல்லதைச் செய்து நல்லதொரு அரசாங்கத்தை நடத்த வேண்டும். அப்படி உருவானது தான் நடப்பில் இருக்கும் ஒற்றுமை அரசாங்கம்.

ஆனால் இப்படி ஒரு அரசாங்கம் நடப்பதையே வெறுக்கிறார் பாஸ் கட்சியின் தலைவர் ஹாஜி அடி அவாங்.  இந்த அரசாங்கத்தைக் கவிழ்ப்போம் என்கிறார்!  ஒழிப்போம் என்கிறார்!  ஒன்றுமில்லாமல் ஆக்குவோம் என்கிறார்! வீண் பழி போடுகிறார்!

பதினான்காம் பொதுத் தேர்தலுக்குப்பின் என்ன நடந்தது என்பதை நாம் அறிவோம். எத்தனையோ பிரச்சனைகள். எங்குப்  பார்த்தாலும் லஞ்ச லாவண்யம். கேட்க ஆளில்லை. கேட்டாலும் அதையும் கேட்க ஆளில்லை! அப்படி ஓர் அரசாங்கம். ஊழல்! ஊழல்! ஊழல்! மக்களுக்கு எதுவும் தெரியாமல் இல்லை. ஆனால் அரசாங்கம் எதனையும் இலட்சியம் செய்யவில்லை. அவர்கள் ஆட்சி நடத்த வேண்டும் என்பதைத் தவிர வேறு எந்த ஒரு கொள்கையும் அவர்களிடம் இல்லை!  இந்த அரசாங்கத்தில்  மிகவும் பயனடைந்தோர் என்றால் அது பாஸ் கட்சியினர் தான். நிறைய பதவிகள்! அமைச்சர்களுக்குள்ள சம்பளம்! 

கடந்தகால அரசாங்கத்தில் இப்படி குறுக்கு வழியில் சம்பாதித்தவர்கள் பாஸ் கட்சியினர்! அப்படியிருக்க இப்போது நடப்பு அரசாங்கத்தைக் கேவலமாகப் பேசுகிறார் ஹாடி அவாங்! எப்படி ஏற்றுக்கொள்வது?  அரசாங்கம் தவறு செய்தால் அதனைக் கண்டிக்கலாம். குறை சொல்லலாம். ஆனால் ஹாடி, அப்படி எதுவும் நடக்கவில்லையே! அப்புறம் உங்களுக்கு என்ன மனக்குறை என்று தான் கேட்கத் தோன்றுகிறது.

ஹாடி ஒன்றும் தெரியாதவரோ, அறியாதவரோ அல்ல. அவர் வெறும் அரசியல்வாதி மட்டும் அல்ல. ஆன்மீகவாதி. ஆன்மீகம் அறிந்தவர். பொய் சொல்லுவதும் அரசாங்கத்தைக் கவிழக்க நினைப்பதும் பெரும் பாவம் என்பதை அவர் அறிவார்.

நீங்கள் ஆளுகின்ற மாநிலங்களிலேயே பல குறைபாடுகள். ஏன்? இப்போது இந்த நேரத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறதே அந்த வெள்ளம் உங்கள் மாநிலத்தையும் விட்டுவைக்கவில்லையே! ஒவ்வொரு ஆண்டும் இது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.  உங்கள் அரசாங்கம் அதனை "கடவுள் செயல்" என்று கூறுவதைத் தவிர வேறு என்ன செய்திருக்கிறது? கடலில் மண்ணைப்போட்டு நிரப்பி வீடுகளைக் கட்டுகிறார்கள்.  அது முடியும் போது நீங்கள் ஏன் ஒன்றும் செய்வதில்லை? மக்களைச் சுரண்டுவதில்  காட்டும் அக்கறை அவர்களின் முன்னேற்றத்தில் மட்டும் ஏன் கட்டுவதில்லை?

ஹாடி! உங்கள் வேலையைச் சரியாக செய்யுங்கள்.  கவிழ்ப்போம்! ஒழிப்போம்! என்று உங்கள் வாயிலிருந்து வருவது என்பது உங்களின் தகுதிக்கு ஏற்புடையதல்ல! அனைவரும் ஒற்றுமையாக வாழ்வோம்! அதுவே நமது எதிர்காலம்!

No comments:

Post a Comment