Wednesday 22 March 2023

ஏன் நாம் மகிழ்ச்சியற்றவர்கள்?

 

உலகில் மிகவும் மகிழ்ச்சியான நாடுகளில் முதல் நாடாக பின்லாந்து நாடு விளங்குகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக பின்லாந்து நாடு தான் முன்னணியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அது சரி நமது நாட்டில் நிலைமை என்ன? மலேசியர்கள் மகிழ்ச்சியாக வாழ்கின்றனரா என்பதைத் தெரிந்து கொள்ள நமக்கும் ஆசையாக இருக்கத்தான் செய்யும்!

உலகப்பட்டியலில் நமது நாடு 79-வது இடத்தில் இருப்பதாகக் காட்டுகிறது அந்தப் பட்டியல். அதே பட்டியலில் நமது அண்டை நாடான சிங்கப்பூர் 32-வது இடத்தை வகிக்கிறது.

நாம் இந்த இரண்டு நாடுகளுக்கிடையே  உள்ள வேறுபாடுகளைப் பார்ப்போம்.  சிங்கப்பூர் நாட்டின் பணம் என்பது நமது நாட்டைவிட உயர்ந்து நிற்கிறது! இப்போது என்று சொல்ல முடியாது. அது எல்லாக் காலங்களிலும் உயர்ந்து தான் நிற்கிறது! அதனால் தான் வேலை என்று வரும்போது  நமது இளசுகள் சிங்கப்பூரைத் தேர்ந்து எடுக்கிறார்கள்.  அங்கு பணம் சம்பாதித்துவிட்டு இங்கு வந்து தொழில்களை ஆரம்பிக்கிறார்கள். நல்லது தானே! தொழில்களுக்கான முதலீடுகளை அவர்களே சம்பாதித்துக் கொள்கிறார்கள்! பின்னே இங்கு உதவ யார் இருக்கிறார்கள்?

நமது இரு நாடுகளுக்கிடையே  நாம் ஒப்பிட வேண்டிய  முக்கிய விஷயம் என்றால் அது ஊழல் என்பது தான்.  ஊழல் இருந்தாலே  எந்த நாடாக இருந்தாலும் மகிழ்ச்சியை இழந்துவிடும். அதாவது அந்த நாட்டு மக்கள்  மகிழ்ச்சியாக இருக்க வாய்ப்பில்லை. ஓர் அரசு அலுவலகத்திற்குப் போனால் ஒரு வேலை நடக்க நாலைந்து தடவை  நடையாய் நடக்க வேண்டும் என்றால்  அதுவும் ஊழல் தான்!  அது நமது நாட்டில் தாராளமாய் நடந்து கொண்டிருக்கிறது!

நமது நாட்டில் ஊழல் என்பது டாக்டர் மகாதிர் பிரதமராக இருந்த காலத்திலேயே  ஆரம்பித்துவிட்டது. ஊழலுக்குப் பிள்ளையார் சுழி  போட்டவரே அவர் தான்! அதன் பின்னர் அது செழித்து வளர்ந்து இப்போது ஆலமரமாக  உயர்ந்து  நிற்கிறது! ஊழல் தாராள மயமாக்கப்பட்டப் பிறகு  அனைத்தும் உயர்ந்து நிற்கின்றன.

சமீப காலமாகத்தான் ஊழல் பற்றி நம்மால் அதிகம் தெரிந்து கொள்ள முடிகிறது. அப்படியென்றால் இதுநாள் வரை அனைத்தும் மறைக்கப்பட்டிருக்கின்றன. காரணம் அரசாங்கம் அவர்கள் கையில் இருக்கும் போது அவர்கள் அனைவரும் உத்தமராகவே இருந்திருக்கின்றனர்!

ஆனால் சிங்கப்பூரில் இது போன்ற ஊழல் வழக்குகள்  பொதுவாகவே ஒன்றையும் காணவில்லை! இது ஒன்றே போதும், சாட்சியம் சொல்ல! நமது நாடு ஏன் மகிழ்ச்சியற்ற  நாடாக இருக்கிறது என்பதற்கும் சிங்கப்பூர் ஏன் உயர்ந்து நிற்கிறது என்பதற்கும்  இப்போது நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

நம் நாட்டில் ஊழல் ஒழியும்வரை நாம் மகிழ்ச்சியற்றவர் என்கிற நிலையில் தான் அந்தப்பட்டியல் அமையும்! ஊழலை ஒழிக்கும் போது தான் நாம் முன்னேற்றம் காண முடியும்!

அதுவரை நாம் மகிழ்ச்சியற்றவர்கள் தான்!

No comments:

Post a Comment