Monday 20 March 2023

ஊழியர் சேமநிதி வாரியம்

 

சமீபகாலமாக ஊழியர் சேமநிதியிலிருந்து தனது உறுப்பினர்கள்  கடன் வாங்குவது பற்றியான செய்திகள் நிறையவே பேசப்படுகின்றன.

சட்டம் அதற்கு எதிராக இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் இயற்கையாகவே நமக்கு ஏற்படுகின்ற பயத்தை அவ்வளவு எளிதில் போக்கிவிட முடியாது.

ஆமாம்,  கடைசி காலத்தில் நாம் என்ன செய்வோம் என்கிற எண்ணம் சராசரியாக எல்லா மனிதருக்கும் உண்டு.  சேமிப்பை எடுத்துவிட்டால் கடைசியில் எதுவும் மிஞ்சாது என்பது நமக்குப் புரிகிறது. 

பண நிர்வாகம் தெரிந்தவர்களுக்கு அது ஒரு பிரச்சனை அல்ல. அவர்கள் அதனையே முதலீடாக வைத்து பணம் சம்பாதிக்கும்  திறமை அவர்களிடம்  உண்டு. ஆனால் இங்கு நாம் பெரும்பாலும்  அவர்களைப்பற்றி பேசவில்லை. சராசரி மனிதர்கள், நடுத்தர வர்க்கம், தொழிலாளர்கள்  - இவர்களைப் பற்றி தான் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.

இவற்றை எல்லாம் விட வங்கிகளின் நம்பகத்தன்மை திருப்திகரமாக இல்லை என்பதும் கவனிக்கப்பட வேண்டியுள்ளது. சட்டங்கள் எல்லாம் சரியாகத்தான் இருக்கின்றன. ஆனால் அங்கு வேலை செய்யும் ஊழியர்களின் நம்பகத்தன்மை சரியாக இல்லை. எல்லாருக்கும் வங்கிகளின் சட்டதிட்டங்கள் தெரியாது. அதுவே  வங்கி ஊழியர்களுக்கு லாட்டரியில் பரிசு விழுந்த மாதிரி! அவர்களுக்குச் சட்டம் தெரியும். ஆனால் அதனை அவர்கள் தங்களது வாடிக்கையாளரிடம் சொல்லுவதில்லை.  அதனால் வாடிக்கையாளர்  அவர் பாட்டுக்கு எதனையும் கேட்காமல் கடனைக்கட்டிக் கொண்டு வருவார். அவருக்கு வங்கி ஊழியர்கள் சரியான ஆலோசனை அளித்திருந்தால் கடனை எப்போதோ கட்டி முடித்திருப்பார்.  அவர்கள் சொல்லமாட்டார்கள்!  முடிந்தவரை கடைசி காசு வரை பணத்தை வங்கிகள் காலி செய்துவிடும்!

அரசாங்கத்தின் பரிந்துரையைக் குறை சொல்ல ஒன்றுமில்லை. ஆனால் வங்கிகளைக் குறைசொல்ல நிறைய உண்டு. அவர்கள் எந்தக் காலத்திலும் நீதி, நேர்மை பற்றி பேச மாட்டார்கள். எந்த அளவுக்கு வாடிக்கையாளரிடம் கசக்கிப்பிழிய முடியுமோ அந்த அளவுக்கு மனசாட்சி இல்லாமல்  கசக்கிப்பிழிவார்கள்!

என்னைக் கேட்டால் கடன்வாங்க ஊழியர் சேமநிதியைப் பயன்படுத்தக் கூடாது என்று தான் சொல்லுவேன். நான் சொல்லுகின்ற காரணம் வங்கிகளின் நேர்மையற்ற போக்கு தான்!

No comments:

Post a Comment