Thursday 23 March 2023

இறந்த வீட்டிலும் வன்செயலா?

 

வன்செயல்களை யாரும் வரவேற்பதில்லை. எல்லாமே பேசி தீர்த்துக் கொள்ள முடியும். ஆனாலும் வன்செயல் என்னவோ எப்போதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. நமது இளைஞர்கள் அதை விடுவதாகவும் தெரியவில்லை. அவர்களை இளைஞர்கள் என்பதைவிட குண்டர் கும்பல் என்றால் தான்  பொருத்தம்!

இந்த குண்டர் கும்பல்  எங்கு தான் சண்டை போட வேண்டும் என்கிற ஏந்த குறிக்கோளையும் அவர்கள்  கொண்டிருப்பதில்லை. எதிரியை எங்குப் பார்க்கிறானோ உடனே வெட்டு குத்து என்று ஆரம்பித்து விடுகின்றனர். இவர்களை யார் என்ன செய்வது? 

பெற்றோர்களால் என்ன செய்ய முடியும்? எல்லாமே அளவு மீறிப் போய்விட்டன. அதுவும் இப்போது இளைஞர்கள் கஞ்சா பழக்கத்திற்கு அடிமைகளாய் மாறிவிட்டதால் யாரும் எதையும் செய்ய முடியவில்லை.

சமீபத்தில் ஒரு சம்பவத்தைப் படித்தோம். நமது நாட்டில் தான். கஞ்சாவுக்கு அடிமையாகிவிட்ட இளைஞனுக்குத் தாய் பணம் கொடுக்க மறுத்துவிட்டார். அந்த இளைஞன் தாயின் மார்பகத்தை பிளேடு கத்தியால் அறுத்துவிட்டனாம்.  இப்படித்தான் இளைஞர்கள் போய்க் கொண்டிருக்கின்றனர். 

இப்போது இன்னொரு செய்தியும் வந்திருக்கிறது. ஜொகூர் பாருவில்  ஒரு மரண சம்பவம். இறுதி சடங்குகள்  நடந்து கொண்டிருக்கின்றன. சடங்குகள் முடியும்வரை இளைஞர்கள் காத்திருக்கத் தயாராக இல்லை. அதற்குள் அந்த குண்டர் கும்பல்  தங்கள் கைகலப்பை ஆரம்பித்துவிட்டனர். சுமார் 20 பேர் அடங்கிய கும்பல் இந்த கைகலப்பில் ஈடுபட்டிருக்கின்றனர். இப்போது காவல்துறையினர் இந்த 20 பேர் அடங்கிய கும்பலை தேடும் பணியில் இருக்கின்றனர்.

நமது இளைஞர்கள்  போகும் போக்கு  நமது இனத்திற்கு மிகவும்  தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது. எல்லா இடங்களிலும் சண்டைகளை ஆரம்பித்துவிடுகின்றனர். இறப்பா? பிறப்பா? திருமணமா?  திருவிழாக்களா?  ஒன்றையும் விட்டுவைப்பதில்லை. எல்லா இடங்களிலும் சண்டை! சச்சரவு! இதைத் தவிர வேறு எதுவும் அவர்களிடம் இல்லை.  கொலை, கொள்ளைகளில் ஈடுபட்டு கடைசியில் ஜெயில் தான் அவர்களின் இலட்சியம்.

நமது அரசாங்கம் நீண்ட நாள்களாக இந்திய இளைஞர்களின் பிரச்சனைகளைக் கவனிக்கவில்லை.  அவர்களின் கைத்திறன் பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அவர்களுக்கு வேலை எதுவும் இல்லை. அரசாங்கம் வேலை கொடுப்பதும் இல்லை. தனியார் துறையும் அவர்களைப் புறக்கணிக்கின்றன. இந்த நிலையில் அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம்  அடிதடி, சண்டை சச்சரவு கடைசியில் சிறை. இது தான் அவர்களின் வாழ்க்கை.

இன்றைய அரசாங்கமாவது இவர்களைக் கவனிக்கும் என நம்புவோம்!

No comments:

Post a Comment