Tuesday 7 March 2023

இயக்கங்கள் கூறுவது சரியே!

       நன்றி: வணக்கம் மலேசியா  

முப்பத்தாறு இந்திய இயக்கங்கள் ஒன்று கூடி அரசாங்கத்திற்கு அறைகூவல் விடுத்திருக்கின்றன.

ஆம், தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலம் குறித்து விவாதங்கள் நடைப்பெற்று  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. இந்த விவாதத்தில் கலந்து கொண்டவர்கள்  அனைவரும் தமிழ்ப்பள்ளிகளில் பணியாற்றியவர்கள்.  தமிழ்த்துறை சார்ந்த நிபுணர்கள்.

அதில் முக்கியமான தீர்மானம் என்பது  எக்காரணத்தைக் கொண்டும் தமிழ்ப்பள்ளிகள் மூடப்படக் கூடாது. அத்தோடு  அருகிலுள்ள பள்ளிகளுடன் இணைக்கப்படவும் கூடாது என்பது ஒரு முக்கியமான தீர்மானமாகும்.

பள்ளிகள் மூடப்படக் கூடாது என்னும் போது,  நான் புரிந்து கொள்வது என்னவெனில்,  அந்தப் பள்ளிகளின் உரிமம் இந்தியர்கள் வாழும் இடங்களில் தமிழ்ப்பள்ளிகள் கட்டுவதற்கு  அந்த உரிமத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் அதனால்   எந்தவொரு பிரச்சனையும் எழாது என்பது தான்.   காரணம் புதிய உரிமம் கிடைப்பதில் பல சிக்கல்கள் உள்ளன. அதனைத் தவிர்க்கவே பள்ளிகள் மூடப்படக் கூடாது  என்னும் கோரிக்கை என நான் நம்புகிறேன்.

அதே போல  தேசிய கல்வி ஆலோசனை மன்றத்தில் தமிழ் தெரிந்த, தமிழ் அறிந்த ஒருவர்  நியமிக்கப்பட வேண்டும் என்பது பலரது கோரிக்கை. துணை அமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி  அவர்களின் சமீபத்திய பேட்டி ஒன்றில் இது உடனடியாக நடக்கும் என்று உறுதி அளித்திருக்கிறார்.  இது எப்படி நடந்தது என்பது நமக்கும் புரியாத புதிர். நடக்கும் என நம்புவோம்.

கல்வி அமைச்சிலும் தமிழ் அறிந்த ஒருவர் இருக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கை. இதனை ஏன் அவர்கள் புறக்கணிக்கிறார்கள் என்பது நமக்குப் புரியவில்லை. அப்படியே புரிந்தாலும் அந்தப் பதவிக்கு ஏன் தமிழறியாத  ஒருவரை நியமிக்கிறார்கள் என்பதும் புரியவில்லை. ஆனால் இந்த நிலை இப்படியே நீடிக்கக் கூடாது என்பது தான் நமது விருப்பம்.

ஆக, மேலே உள்ள இயக்கங்கள் ஒன்று கூடி தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு சில கோரிக்கைகளை அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். இந்த கோரிக்கைகள் நிறைவேறும் என்னும் நம்பிக்கை நமக்கு உண்டு.

நல்லதே நடக்கும் என எதிர்பார்ப்போம்!

No comments:

Post a Comment