டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் பிரதமர் பதவியேற்று நூறு நாள்கள் ஓடிவிட்டன!
இந்த நூறு நாள்களில் அவர் சாதனை என்ன என்கிற கேள்விகள் எழுவது இயல்பானது தான். தமிழ் நாட்டில் திரைப்படங்கள் நூறு நாள்கள் ஓடினால் அது மாபெரும் வெற்றி என்பார்கள்.
ஆனால் திரைப்படங்கள் போல இந்த நூறு நாளை வெற்றியாகக் கொண்டாட முடியாது! என்ன சாதித்தீர்கள் என்பதைத் தவிர வேறு கேள்விகள் எழாது.
பிரதமர் பதவியை அன்வார் ஏற்றதும் அவரால் முழுமையாக செயல்பட முடியவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். செயல்பட முடியாதபடி பெரிகாத்தான் நேஷனல் முட்டுக்கட்டைகளைப் போட்டுக் கொண்டிருந்தது. அதனால் தனது ஒற்றுமை அரசாங்கம் தடை ஏதும் இல்லாமல் செல்ல சில ஆரம்பக்கட்ட வேலைகளை அவர் செய்து கொண்டிருந்தார். ஆரம்பத்தில் அவரால் கவனம் செலுத்த முடியவில்லை என்பது உண்மை தான். ஏன் பார்ப்பவர்களுக்கும் ஒரு சந்தேகம் இருக்கத்தான் செய்தது. காரணம் அவருடைய எதிரிகள் பணபலம் வாய்ந்தவர்கள்! எதனையும் செய்யக்கூடிய துர்க்குணம் படைத்த தீய சக்திகள். . அவர்களைக் குறைத்து மதிப்பிட முடியாது!
எப்படியிருப்பினும் இந்த நூறு நாள்களில் ஒரு சில வேலைகள் நடந்திருக்கின்றன. ஐந்து வெள்ளிக்கென ஓர் உணவுத்திட்டத்தைக் கொண்டுவந்து, குறைவான விலையில், பலரது பசியைப் போக்குவது வரவேற்கக் கூடிய திட்டமே. வெளிநாடுகளில் மலேசிய பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு இயல்பான குடியுரிமை - இப்படி ஒரு சில வரவேற்கக் கூடியவை.
நாம் பெரும்பாலும் இந்தியர்களின் நலனையே விரும்புவதால் அதுபற்றி நம்மால் பேசாமல் இருக்க முடியவில்லை. இந்த நூறு நாள்களைப்பற்றி பேசும் போது நம் இனத்தவருக்கு அது திருப்திகரமாக அமையவிலலை. துணை அமைச்சர் பதவி முதன் முதலாக ஒரு தமிழ்ப்பெண்ணுக்குக் கொடுக்கப்பட்டிருப்பது எதிர்பாராதது. பிரதமருக்கு நமது வாழ்த்துகள்! மற்றபடி நமது எதிர்பார்ப்புகள் எதுவும் இந்த நூறு நாள்களில் நிறைவேறவில்லை. ஒரு வேளை அடுத்த நூறு நாள்களில் நிறைவேறலாம். சாத்தியம் உண்டு.
பொதுவாக இந்தியர்களின் புறக்கணிப்பு என்பது இன்னும் தொடர்கிறது. மாற்றம் வரும் என்று நம்பினாலும் அது எப்போது என்பது தான் கேள்வி. பொறுத்திருப்போம். அறுபது ஆண்டுகள் பொறுத்திருந்தவர்கள் நாம். அந்த அளவுக்கு அடி வாங்கிய நாம் அறுபது மாதங்கள் பொறுத்திருக்க முடியாதா?
இந்த ஆட்சியில் நமக்கு நல்லது நடக்கும் என்னும் நம்பிக்கை உண்டு. சீக்கிரமாக நடந்தால் சீக்கிரம் மகிழ்ச்சியடைவோம். தாமதமானால் கொஞ்சம் தாமதித்து மகிழ்ச்சியடைவோம்! அவ்வளவு தான்!
நாட்டு நலன் என்று எடுத்துக் கொண்டால் நிலைமை சீரடைகிறது என்று சொல்லலாம். இலஞ்சம் முன்பு போல் இல்லை. தயக்கத்துடனேயே தலை காட்டுகிறது! அரசாங்க நிறுவனங்கள் தங்களது கடமையைச் செய்கின்றன. வேலைகள் நடக்கின்றன.
பொதுவாக இந்த நூறு நாள்கள் பாராட்டுக்குரியவையே!
No comments:
Post a Comment