பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி அவர்களைப்பற்றி அவருடைய அரசியல் எதிரிகள் வேண்டுமானால் வலிந்து கட்டிக்கொண்டு ஏதாவது குற்றங்குறைகளைச் சொல்லலாம்.
பினாங்கு மாநிலத்தில் பேராசிரியர் சிறப்பாகவே செயல்படுகிறார் என்பது தான் வெளிமாநிலங்களில் உள்ள தமிழர்கள் நினைக்கின்றனர். பொதுவாக அவரிடம் உள்ள சிறப்பு என்றால் கல்விக்கு அவர் முக்கியத்துவம் கொடுக்கிறார். தமிழ்ப்பள்ளிகளுக்கு அவர் முக்கியத்துவம் கொடுக்கிறார். கோவில்களுக்கு அவர் முக்கியத்துவம் கொடுக்கிறார். இந்தியர் சம்பந்தப்பட்ட எந்தவொரு பிரச்சனையாக இருந்தாலும் உடனடியாக அதற்கானத் தீர்வைக் காண்கிறார். இவைகள் எல்லாம் அவர் சிறப்பாகச் செயல்படுகிறார் என்பதைத்தான் குறிக்கின்றன.
அவர் சிறப்பாக செயல்படுகிறார் என்பதுவே பொதுவான கருத்து. அதற்குள் என்ன ஆயிற்று என்பது நமக்குப் புரியவில்லை. நம்மிடையே ஒரு சிலர் இருக்கின்றனர். சமூகத்திற்கு ஏதாவது நல்ல காரியங்கள் செய்யும் போது அவர்களால் அதனைப் பொறுத்துக்கொள்ள முடியாது என்பது தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. அதிலும் பலர் தமிழர் அல்லாதவர்கள் ஆனால் தமிழர் என்று சொல்லிக்கொள்பவர்கள்!
அதனால் தான் ஒரு சில அரசியல்வாதிகள் யாரையும் நம்புவதில்லை! தனக்கு எதிரி என்று யாரை நினைக்கிறார்களோ அவர்களை உடனடியாக தூக்கி எறிந்து விடுவார்கள்! தன்னை தட்டிக்கேட்க யாரும் இருக்கக் கூடாது என்பது தான் அவர்களின் எண்ணமாக இருக்கும். கடைசியாக அவர்கள் தான் சமுதாயத்தின் எதிரிகளாக இருப்பார்கள்! டாக்டர் மகாதீர், துன் சாமிவேலு போன்றவர்கள் இப்படித்தான் சொந்த சமுதாயத்திற்கே எதிரிகளாக மாறினார்கள்!
ஆனால் இராமசாமி அவர்கள் அப்படி ஏதும் சித்து விளையாட்டுகள் விளையாடியவராகத் தெரியவில்லை. சமுதாய நலன் அவரிடம் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அவரது பேச்சில், அவரது எழுத்தில் சமுதாய நலன் தான் தெரிகிறது.
அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம், போகலாம்! ஒருவர் போனால் ஒருவர் அந்த இடத்தை நிரப்பிவிடுவார். அது தான் ஜனநாயகத்தின் சிறப்பு. ஆனால் சமுதாய எண்ணம் உள்ளவர் வந்தால் அது இன்னும் சிறப்பு. அப்படி எல்லாம் நல்ல எண்ணம் கொண்டவர்களைக் கண்டுபிடிப்பது தான் கொஞ்சம் சிரமமான விஷயம்.
பேராசிரியர் தனது பணியைத் தொடர வேண்டும் என்பது தான் மக்களின் எண்ணமாக இருக்கிறது. ஆனால் இது அரசியல். அவருடைய கட்சியின் தலைமைத்துவம் என்ன முடிவு எடுக்கிறதோ அது தான் கடைசி முடிவு. தமிழர்களைப் பொறுத்தவரை ஒரு நல்ல சேவையாளரை இழக்கிறோம் என்பது தான் வருத்தத்திற்குரியது.
ஆனாலும் எதுவும் உறுதியாகத் தெரியவில்லை. ஒரு வேளை அவர் இன்னும் ஒரு தவணை கூட தொடரலாம். சாத்தியம் உண்டு. நல்லது நடக்க எதிர்பார்ப்போம்!
No comments:
Post a Comment