தாய்மொழிப்பள்ளிகள் இனங்களுக்கிடையே வேற்றுமையை வளர்ப்பதாக 22 ஆண்டுகளாக நாட்டின் பிரதமராக இருந்த டாக்டர் மகாதிர் ஒப்பாரி வைத்திருக்கிறார்! ஏன் அவரது மகனும் கூட அதனையே புலம்பியும் இருக்கிறார்!
இதனை நாம் எதிர்பார்த்தது தான். காரணம் அர்சியல் ஆதரவற்றவர்கள் இதனையே பிடித்துக்கொண்டு தொங்குவதை நாம் பார்க்கிறோம்! இவர்கள் அரசியல் அனாதைகள்! இன்னொன்றையும் சேர்த்துக் கொள்ளலாம். கிறிஸ்துவமதம் நாட்டை ஆளப்பார்க்கிறது என்று தேர்தல் காலங்களில் கொஞ்சம் உசுப்பிவிட்டால் மலாய் மக்கள் அதற்கு ஆதரவாக செயல்படுவார்கள் என்கிற நம்பிக்கையும் உண்டு.
ஆனால் மக்கள் தெளிவடைந்து வருகிறார்கள். அன்று எதிர்கட்சியாக இருந்த நம்பிக்கைக் கூட்டணியை சுமார் 31 விழுக்காடு மலாய்க்காரர்கள் ஆதரவு கொடுத்திருக்கிறார்கள். அதனால் தான் இன்று நம்பிக்கைக் கூட்டணி முதன்மைக் கட்சியாக இருந்து ஒற்றுமை அரசாங்கத்தை வழி நடத்துகிறது.
தாய்மொழிப் பள்ளிகளைப் பற்றி கேள்வி எழுப்பி இருக்கும் டாக்டர் மகாதிர் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். அது அவருக்கே தெரியும் ஆனாலும் தெரிந்தே விஷத்தைக் கக்குகிறார் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி சொன்னது போல சீனப் பள்ளிகளில் மலாய் மாணவர்கள் சுமார் 20 விழுக்காடு கல்வி பயிலுகிறார்களே அதற்கு மகாதிர் சொல்லுகின்ற பதில் என்ன? ஒரு சில பள்ளிகளில் 30/40 விழுக்காடு கல்வி பயிலுகிறார்களே?அது மட்டும் அல்ல ஒரு சில சீனப்பள்ளிகளில் முழுமையாக மலாய்க்கார மாணவர்களைக் கொண்டே பள்ளிகள் நடக்கின்றனவே அதற்கு அவர் பதில் என்ன?
டாக்டர் மகாதிருக்கே தெரிந்திருக்கும் காரணங்கள் தான். தேசிய பள்ளிகளில் படிப்பது அனைத்தும் குப்பை என்கிற எண்ணம் மக்கள் மனதில் ஏற்பட்டுவிட்டது! மாணவரிடையே எந்தவொரு ஒழுங்குமுறையும் இல்லை. கட்டுப்பாடுகள் இல்லை. பெரும்பாலான பள்ளிகளில் கட்டொழுங்குப் பிரச்சனைகள் உண்டு. அதனை நிர்வாகம் கெட்டிக்காரத்தனமாக அமுக்கிவிடுகிறது! அவ்வளவு தான்!
எல்லாவற்றிலும் பெருங்குப்பை, குறைவான புள்ளிகள் பெற்று பட்டதாரிகளாகி விடுவது தான். அதில் எல்லாத்தரப்பு பட்டாதாரிகளும் உண்டு. சீனப்பள்ளிகளின் தரம் தான் அதன் வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. தேசியப்பள்ளிகளில் தரம் பற்றிப் பேச ஆளில்லை. எதற்கும் இலாயக்கில்லாதவர்களை உருவாக்குகிற வேலையைத்தான் தேசியப் பள்ளிகள் செய்கின்றன!
ஒரு தராதரம் இல்லாத கல்வியைக் கொடுத்துவிட்டு தாய்மொழிப்பள்ளிகள் இன வேற்றுமையை வளர்க்கின்றன என்று சொல்லுவது நியாயமல்ல. இன்று நாட்டில் பல்துறை நிபுணர்கள் இருக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் தாய்மொழிப்பள்ளிகள் என்று அடித்துச் சொல்லலாம்!
பேராசிரியர் சொன்னது சரிதான்!
No comments:
Post a Comment