Friday 17 March 2023

உணவகங்களில் சண்டை வேண்டாம்!

 

உணவகங்களில் சண்டை போடுவது என்பது மிகவும் அருவருக்க வேண்டிய ஒரு செயல்.

கைகலப்பில் ஈடுபட்டுவிட்ட பிறகு "ஒன்றும் தெரியாத பாப்பா" வைப் போல எந்த ஒரு சலனமுமின்றி தப்பிப் போய்விடலாம். 

 இதனால் அந்த உணவகங்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்பு பெரிய பாதிப்பாகவே அமையும்.  இது போன்ற ரகலைகளைச் செய்பவர்கள்  ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி அந்த ரகலைகளில் ஈடுபடுகின்றனர்.

தவறுகள் இரண்டு பக்கமும் இருக்கலாம்.  ஆனால் அதனைச் சகிப்புத்தன்மையோடு  பெரிதுப் படுத்தாமல் அதனை முடித்துக்கொள்ள வேண்டும்.

ஒரு உணவகம் நிறுவ எத்தனையோ சிரமங்களை ஒருவர் எதிர்நோக்குகின்றார். அதற்கான செலவுகள் அதிகம். அங்குத் தேவையான வேலை செய்ய ஆள்கள் தேவை.  அதற்குத் தனியாக ஒரு போராட்டம். வேலைக்கு ஒருவர் வந்தாலும்  அவர் நீண்ட நாள் நீடிப்பதில்லை.  பல போராட்டங்களைக் கடந்து தான் உணவகங்கள் திறக்கப்படுகின்றன.

இப்படியெல்லாம் செலவு செய்து உணவகங்கள் ஆரம்பிக்கும் போது இது போன்ற அடாவடி செயல்களால்  மீண்டும் அவர்களுக்கு இது போன்ற சில்லறை பிரச்சனைகள்.

இது போன்ற அடாவடி செயல்கள் நடைபெறுவதை  எந்த ஓர் உணவகத்தினரும்  விரும்புவதில்லை.  வாடிக்கையாளர்கள் அந்த உணவகங்களுக்கு அடுத்த முறை போவதை விரும்பமாட்டார்கள். போனால் அங்குக் கைகலப்பு ஏற்படும் சாத்தியம் உண்டு என்கிற எண்ணம் ஏற்படத்தான் செய்யும். 

சமீபத்தில் நடந்த அந்த உணவகக் கைகலப்பில் யார் குற்றவாளி என்று நாம் முடிவு செய்ய முடியாது.  தெரியாத ஒன்று பற்றி நாம் தீர்ப்பிட முடியாது.  ஆனால் செய்திகளின்படி குடித்துவிட்டு வந்த இருவர் உணவகத்தில் பணிபுரிவர்களிடம் கைகலப்பில் ஈடுபட்டிருக்கின்றனர். காரணம் தெரியவில்லை. ஒரு பக்கத்து நியாயம் தான் நமக்குத் தெரியும்.  அது  இப்போது காவல்துறையின் கையில். அவர்களிடமே விட்டுவிடுவோம்.

உணவகங்களில் நடக்கும் இது போன்ற கைகலப்புகளால்  நட்டம் என்பது உணவகங்களுக்குத்தான்  அதிகம்.  நமது இளசுகளோ, பெரிசுகளோ இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதைவிட வேறு ஒன்றும் சொல்ல இயலவில்லை.

நம்மால் செய்ய முடிந்ததெல்லாம் சண்டை போடுவதற்கு உணவகங்களைப் பயன்படுத்தாதீர்கள் என்று தான் சொல்ல முடியும். . எங்கும் தேவை சமாதானம் தான், சண்டை அல்ல!

No comments:

Post a Comment