Tuesday 21 March 2023

மகிழ்ச்சி நிறைந்த நாடு!

 


மகிழ்ச்சி நிறைந்த நாடென்றாலே ஒரு கேள்வி எழுகின்றது.  'அப்படின்னு ஒரு நாடு இருக்கா' என்கிற ஓர் அதிசயம்  எழாமல் இல்லை!  

நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ அதையெல்லாம் கணக்குப்பண்ணித் தான் இப்படி ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள்! நாம் எதையெல்லாம் விரும்பவில்லையோ அதற்கெல்லாம் ஒரு கணக்கு வைத்து புள்ளி விபரங்களோடு வெளியிடுவார்கள்!  நாம் ஏற்பதைத் தவிர வேறு வழியில்லை!

சரி, இந்த உலக நாடுகளில் மகிழ்ச்சியால் ததும்பி  வழிகின்ற நாடு எதுவாக இருக்கும் என்று  பார்த்தால் ஒரு சில ஆண்டுகளாகவே (Finland) பின்லாந்து என்கிற நாடு தான் முன்னணியில் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறது.   அவர்கள் தான் சந்தோஷமாக வாழ்கிறார்களாம்! நமக்குத்தான் வக்கில்லை அவர்களையாவது மனமாற வாழ்த்துவோம்!

இந்த மகிழ்ச்சியை  எப்படி அளந்து பார்க்கிறார்கள்   என்று கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.   முக்கியமாக,  தனிநபர் வருமானம்,  சமூக ஒத்துழைப்பு,  ஆரோக்கியமான வாழ்க்கைமுறை,  வாழ்வினைத் தேர்ந்தெடுத்தல்,  பெருந்தன்மையான போக்கு,  ஊழலைப்பற்றியான புரிதல் - இவைகளை எல்லாம் வைத்துத்தான் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்களா இல்லையா என்று  ஆய்வாளர்கள் ஒரு முடிவுக்கு வருகிறார்கள்.  எப்படியோ ஓர் அளவுகோள் வைத்து இந்தப் பிரச்சனையை வெளி உலகிற்குக் கொண்டு வருகிறார்கள். பாராட்டுவோம்!

இந்த மகிழ்ச்சி நிறைந்த முதல் பத்து நாடுகளில் நிச்சயமாக நமது மலேசியா நாடு இல்லை! ஏன் சிங்கப்பூர் கூட இல்லை! நாம் எப்போதுமே சிங்கப்பூரைத் தானே முதலில் பார்ப்பது வழக்கம்! இல்லையென்றாலும்  சிங்கப்பூரியர்கள் நம்மைவிட அதிக மகிழ்ச்சியாகத்தான் வாழ்கிறார்கள்!

இந்த ஆய்வில் ஆகக்கடைசியாக,  மக்கள் மகிழ்ச்சியற்று வாழ்கின்ற  ஒரு நாடு என்றால்  அது தான் ஆப்கானிஸ்த்தான் என்கிற நாடு. இந்த நாட்டின் பெயரைச் சொன்னாலே  பலருக்கு வயிற்றைக் கலக்கிவிடும்! கையில் துப்பாக்கி இல்லாமல் அந்த நாட்டை ஆள வழியில்லை என்று சொல்லப்படுகிறது. கையில் துப்பாக்கியோடு தான் அங்கு ஆட்சி நடக்கிறது. பெண் பிள்ளைகளுக்குக் கல்வி மறுக்கப்படுகிறது. இந்த நாட்டைப் பற்றி மலேசியாவில்  பெருமைப்படுகிறவர்கள் என்றால்  அது இங்குள்ளை இஸ்லாமிய பாஸ் கட்சியினர் தாம்! அவர்களின் நோக்கம் என்னவோ யாருக்குத் தெரியும்?

எப்படியோ  ஒவ்வொரு நாடும் மக்கள் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் என்கிற  கொள்கையைத்தான் கடைப்பிடிக்கின்றன. மக்கள் மகிழ்ச்சியோடு இல்லையென்றால் அதற்கும் அரசியல்வாதிகள் தான் காரணம். ஊழல் பற்றியான சரியான புரிதல்  மக்களிடையே சென்று சேர முடியாதபடி அரசியல்வாதிகள் தடையாக இருக்கிறார்கள்!

நமது நாடும் முதல் பத்து இடத்துக்குள் வரும் என எதிர்பார்ப்போம்!

No comments:

Post a Comment