Wednesday 8 March 2023

ஊழல் குற்றச்சாட்டு!

 

முன்னாள் பிரதமர் முகைதீன் யாசின், ஊழல் குற்றச்சாட்டின் பேரில், கைது செய்யப்படுவார் என்கிற ஆருடம் வலுத்து வருகிறது!

அந்த செய்தி எந்த அளவுக்கு உண்மை என்பது நமக்குத் தெரியவில்லை. காரணம் இதனை எப்படி ஏற்றுக்கொள்வது  என்பது நமக்குப் புரியவில்லை. 

முகைதீன் நாட்டின் முன்னாள் பிரதமர், ஜொகூர் மாநிலத்தின்  முன்னாள் முதலமைச்சர் - இவர் வகித்த பதவிகளை வைத்துப் பார்க்கும் போது  அவர் மீது உள்ள குற்றச்சாட்டுக்களை எப்படி ஏற்றுக்கொள்வது?

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீது குற்றச்சாட்டுகள் வந்தன. அவரின் மனைவி பற்றிய செய்திகள், அவரைவிட,  நீண்ட நாள்கள் ஊடகங்கள் வெளியிட்டுக் கொண்டு வந்தன.   அதனால் நஜிப் மீதான குற்றச்சாட்டு மக்களுக்குப் பழகிப்போன ஒன்றாகிவிட்டது! அதனை ஏற்றுக் கொள்ளும்படியாகவும் ஆகிவிட்டது!

ஆனால் முகைதீன் எந்த குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகதவர். அதாவது பொது மக்களின் பார்வைக்கு அவர் ஒரு வில்லனாகத் தெரிந்தாரே தவிர ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகதவர் என்பது பொது மக்களின் கருத்தாக இன்னும் இருக்கிறது.

சுமுகமாக நடந்து கொண்டிருந்த ஆட்சியைக் கவிழ்த்தார் என்கிற கெட்ட பெயர் அவருக்கு உண்டு. அவரும் நாட்டின் பிரதமர் ஆனார். ஒரு பிரதமராக அவரால் வெற்றி பெற முடியவில்லை! தன்னை நிலைநிறுத்திக் கொள்ள ஏகப்பபட்ட பேர்களுக்குப் பதவிகளைக் கொடுத்தார்! ஆயினும் அது நீண்ட நாள் நீடிக்கவில்லை. பிரதமர் பதவி பறிபோயிற்று. இப்போதும் முன்பு செய்த அதே கவிழ்ப்பு வேலையில் ஈடுபட்டிருக்கிறார்  என்று நம்மால் ஊகிக்க முடிகிறது! ஆனாலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறமுடியாதபடி சட்டம் கடுமையாக இருப்பதால் இதுவரை அவரால் ஆட்சியை அசைக்க முடியவில்லை!  ஆனால் முயற்சிகளை அவர் கைவிடவில்லை என்பதை அவரின் சகா ஹடி அவாங் நடவடிக்கைகளின் மூலம் நமக்குத் தெரிய வருகிறது.

இப்போதுள்ள இந்த ஊழல் குற்றச்சாட்டு எந்த அளவுக்கு உண்மை என்பது சீக்கிரம் தெரியவரும். ஆனானப்பட்ட முன்னாள் பிரதமர் நஜிப் ஊழல் குற்றச்சாட்டை வைத்து உள்ளே தள்ளப்பட்டிருக்கும் போது இனி யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது என்கிற நம்பிக்கை பிறந்திருக்கிறது.

குற்றம் என்றால் குற்றம் தான். அதுவும் பொது மக்களின் பணத்தின் மீது கைவைப்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

எது எப்படியிருப்பினும் ஒருவர் குற்றம் சாட்டப்படும்வரை நம்மால் எந்த முடிவுக்கும் வரமுடியாது. இலஞ்ச ஊழல் ஆணையம் உறுதிப்படுத்தும் வரை பொறுத்திருப்போம். அது மட்டும் அல்ல.  நீதிமன்றமும் உறுதி செய்ய வேண்டும். அப்போது தான் அவர் குற்றவாளி என்பது உறுதியாகும். அதுவரை அவர் நிரபராதி தான்!

No comments:

Post a Comment