Saturday 18 March 2023

போகும் பாதை....!

 

பிரதமர் அன்வார் இப்ராகிம் பதவியேற்று நூறு நாள்களைத் தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது.

அவரும் இந்த குறுகிய காலத்தில் பல இடையூறுகளைச் சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறார். இத்தனை ஆண்டுகள் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் இப்போது தான் தூக்கத்திலிருந்து விழித்தவர்கள் போல குறைகளைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்!

அதுவும் டாக்டர் மகாதிர் போன்றவர்கள் பேசும்போது விஷத்தைத் தான் ஒவ்வொரு நிமிடமும் கக்கிக் கொண்டிருக்கிறார்கள்! அவர் 22 ஆண்டுகாலம் பிரதமராக இருந்தவர். என்ன சாதித்தார்?  மலாய் மக்களைப் பற்றி அதிகமாக அக்கறை உள்ளவர் போல காட்டிக் கொண்டாரே தவிர  சொல்கிற அளவுக்கு அப்படி எதனையும் அவர் சாதித்துவிடவில்லை.

பொருளாதாரத்தில்  மலாய் மக்கள் இன்னும் உயரவில்லை என்று இப்பொது சொல்லும் அவர் தனது கால ஆட்சியில் அவர் ஏன் அதனை செய்துகாட்ட முடியவில்லை? அவர்களால் பொருளாதாரத்தில் முன்னேற முடியவில்லை  என்கிற நிலை வந்த போது அவர் என்ன செய்தார்? இலஞ்சம் வாங்கினால் பொருளாதாரத்தில் முன்னேறலாம் என்கிற ஓரு புதிய பாதையை அவர்களுக்குக் காட்டினார்! இது தான் அவர் செய்த மாபெரும்  சாதனை!

அவர் காலத்தில், அவர் சார்ந்த கட்சியினர் இருந்த காலத்தில்,  இலஞ்சம் ஊழலில் ஈடுபட்டவர்கள் நல்ல சௌகரியமான  வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர். யார் மீதும் நடவடிக்க எடுக்கத் துணியவில்லை.

ஆனால் இப்போது ஆட்சி மாறிவிட்டது. புதிய பிரதமரோ ஊழல் செய்தால், இலஞ்சம் வாங்கினால் அதற்கு ஊழல் ஒழிப்பு ஆணையம் உண்டு, நீதிமன்றங்கள் உண்டு என்று சொல்லிவிட்டார்! தான் எந்த வழியிலும் உதவக்கூடிய நிலையில் இல்லை என்று கை விரித்துவிட்டார்!

இப்போது பிரதமர் அன்வார் சரியான பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறார். அது தான் இப்போது திருடர்களுக்குக் கண்ணை உறுத்துகிறது! அப்படி கண் உறுத்துபவர்களில் டாக்டர் மகாதிரும் ஒருவர்.  இப்போது வர்த்தகம் கைமாறிவிட்டது என்கிறார். அது எந்தக் காலத்திலும் கைமாறவில்லை. கைமாறாமல் அது இருந்த இடத்தில் தான் இருக்கிறது!

வர்த்தகம் செய்யுங்கள் என்று கோடி கோடியாக பணத்தை அள்ளிக் கொடுத்தும் கொள்ளையடித்தும் வளர்ந்தவர்கள் தான் பலர். வர்த்தகத்தில் முன்னேற உழைப்பு  வேண்டும். அந்த குறைபாடு ஒன்றினால் தான் இன்று பலரால் வர்த்தகத்தில் முன்னேற முடியவில்லை.

நாம் சொல்ல வருவதெல்லாம்  பிரதமர் அன்வார் சரியான பாதையில் தான் செல்லுகிறார். தீர்க்கப்படாத பல பிரச்சனைகளை இப்போது படிப்படியாக தீர்த்துவைத்துக் கொண்டிருக்கிறார்.  குறை சொல்லுபவர்கள்  பெரும்பாலும் முந்தைய ஆட்சியில் பயன்பெற்றவர்கள். அதனால் அவர்களைப் பற்றி கவலைப்பட ஒன்றுமில்லை!

நமக்குத் தேவை நல்லாட்சி. அது இப்போது நடந்து கொண்டிருக்கிறது. தொடரட்டும் அவர்களின் நற்பணி என்பதே நமது பிரார்த்தனை!


No comments:

Post a Comment