Friday 24 March 2023

தூய்மையற்ற உணவகங்கள்!

 

     நன்றி: வணக்கம் மலேசியா

மேலே பாருங்கள்! இது நமது நாட்டில் தான் நடந்து கொண்டிருக்கிறது. நமது நாட்டில் உள்ள ஏதோ ஒரு உணவகத்தில்!

இப்படியெல்லாம் உணவகங்களை நடத்திக்கொண்டு "ஆள் பற்றாக்குறை! வேலை செய்ய வெளிநாட்டினரை அனுமதியுங்கள்"  என்று ஒரு பக்கம் அங்கலாய்ப்பு!

ஆனால் உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.   இவைகள் உணவகங்களா அல்லது மரத்தடிகளில் செய்யப்படுகின்ற வியாபாரங்களா அல்லது வீட்டு ஓரங்களில் இயங்கிவரும் தகரடப்பா உணவகங்களா?  இது எந்த வகையைச் சேர்ந்தது என்பது முதலில் நமக்குத் தெரிய வேண்டும்! பொதுவாக,  பொத்தாம் பொதுவாக உணவகங்கள் என்று சொல்லப்படுவதை  நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது!  உண்மைதான்!

என்னதான் பாதையோர வியாபாரங்களாக இருந்தாலும் கொஞ்சம் சுத்தமாக இருந்தால், கொஞ்சம் மனசாட்சியிருந்தால் இப்படியெல்லாம் வியாபாரம்  செய்ய மனம் வராது. அப்படி மனசாட்சி  இல்லாதவராக இருந்தால் யார் என்ன செய்ய முடியும்?

இங்குப் பிரச்சனை என்னவென்றால் கோலாலம்பூர் மாநகர்  மன்றம் சுமார்  16 கடைகளை மூடும்படி உத்தரவிட்டிருக்கின்றது என்பது நல்ல செய்தி தான். ஆமாம், தூய்மையற்ற உணவகங்கள் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன? அவைகள் இழுத்து மூடப்பட வேண்டியவகைகள் தான். 

ஆனால் இங்கு எப்படி இப்படியொரு துர்பாக்கிய நிலைமை ஏற்பட்டது என்பது தான்.  மாநகர் மன்றம் ஏன் இத்தனை நாள் செயல்படவில்லை? என்கிற கேள்வி நமக்கு எழத்தான் செய்கிறது.  ஓர் உணவகம் அது சாலையோர உணவகமாக இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் சுத்தம் என்பது கட்டாயம். இது நாள்வரை மாநகர் மன்றத்துக்கு இது தெரியாதா? தெரியாத மாதிரி கண்ணை மூடிக்கொண்டதா? பணத்தை வாங்கிக் கொண்டு செயல்பட அனுமதி கொடுத்ததா? இப்படி பல கேள்விகள் நமக்கு எழுகிறது!

உணவகம் எப்படி இருக்க வேண்டும்  என்பதை முதலில் இந்த மன்றத்தில்  உள்ள அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும்!  இவர்களிடம் தான் நமக்குப் பிரச்சனைகள் எழுகின்றன.  இவர்கள் தங்களது பணிகளைச் செய்வதில் ஏதோ சிக்கல்கள் இருப்பதாக நமக்குப்படுகிறது.

மாநகர் மன்றப் பணியாளர்கள் தங்களது பணிகளைச் சரிவர செய்து கொண்டு வந்தால்  இன்று இப்படி ஒரு நிலைமை இந்த உணவகங்களுக்கு ஏற்பட்டிருக்காது. அவர்கள் எப்போதும், எல்லாக்காலங்களிலும் தங்களது உணவகங்களை சுத்தமாகவே வைத்திருப்பார்கள்.

மேலே படத்தைப் பார்த்தால் உணவகங்கலில் சாப்பிடவே மனம் வராது! தூய்மை உள்ள மாநகர் மன்றம் இல்லையென்றால் இது போன்ற செயல்கள் தொடரத்தான் செய்யும்!

No comments:

Post a Comment