Tuesday 14 March 2023

திறமையானவர்கள்'ஓரம் போ'!

 

திறமையானவரா நீங்கள்?  போ! போ1 ஒரம்போ!  என்று நாட்டை விட்டே விரட்டுகிற நாடு என்றால் அது நம் நாடு தான்!

"படித்தவர்கள், மெத்த படித்தவர்கள் இங்கு வேண்டாம்! படிக்காத வங்காளதேசிகளை வைத்தே நாட்டை முன்னேற்றுவோம்!" என்று ஒரு நாடு சொல்லும் என்றால் அது நமது மலேசியாவாகத்தான் இருக்க முடியும்!

காரணம் அந்த அளவுக்கு மூளை வடிகால் நாட்டிலிருந்து ஏற்றுமதியாகிக் கொண்டிருக்கிறது!  Brain Drain என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் இந்த மூளை வடிகாலுக்கு என்ன காரணமாக இருக்க முடியும்? வேலை வாய்ப்பில்லை, பதவி உயர்வில்லை, தகுதிக்கு ஏற்ற சம்பளம் இல்லை - இப்படி  பல காரணங்கள் உண்டு.  இதில் என்ன விசேஷம் என்றால் இதனை நிவர்த்திக்க இதுவரை அரசாங்கம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பது தான்!

மூளை வடிகால் என்பது எல்லா நாடுகளிலும் உண்டு. மலேசியா அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் அது நம் நாட்டில் மற்ற நாடுகளைவிட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கிறது என்பது தான் திடுக்கிடும் உண்மை! ஆமாம் உலக அளவில் பார்க்கும் போது மற்ற நாடுகளில் சராசரியாக 3.3 விழுக்காடு தான் வெளி நாடுகளுக்கு வேலைக்காகப் போகின்றனர்.  ஆனால் நமது நாட்டிலோ 5.5  விழுக்காடு என புள்ளி விபரம் கூறுகிறது!

"வெளிநாடுகளில் வேலை செய்யும் மலேசியர்கள் சுமார்  பதினெட்டு  இலட்சம் பேர்.  இவர்களில்  சுமார் பதினோரு இலட்சம் பேர் சிங்கப்பூரில் வேலை செய்கின்றனர். மற்றவர்கள் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அமரிக்கா என்று பலவாறு பிரிந்து கிடக்கின்றனர். இப்படி வேலைக்கு என்று போனவர்கள் பலர் அப்படியே அங்கேயே தங்கிவிட்ட கதைகளும் உண்டு. அது தவிர்க்க முடியாதது!

சமீபத்தில் நாம் படித்த ஒரு செய்தியை ஞாபத்திற்குக் கொண்டு வருகிறேன். ஒவ்வொரு ஆண்டும் நமது நாடு மலாயா பல்கலைக்கழகத்தில் பயிலுகின்ற சிறந்த,  வெற்றிகரமான, திறமையான   குறைந்தபட்சம் முப்பது மருத்துவ மாணவர்களை அந்த நாடு வேலைக்கு அமர்த்திக் கொள்ளுகிறதாம்! நாம் அப்போது தான் யோசிக்கிறோம்! சிங்கப்புரோ ஏற்கனவே யோசித்து வைத்துவிட்டார்கள்! அப்புறம் எங்கே நாம் அவர்களை  ஜேய்க்கிறது?

சரியான தலைமைத்துவம் இல்லாத ஒரு நாடு என்னன்ன இழக்கிறது என்பது நம் நாட்டைப் பார்த்துக் கற்றுகொள்ளலாம்! எந்தத் திட்டமும் இல்லை. எந்தத் தூரநோக்கும் இல்லை. கொள்ளையடிப்பதையே கொள்கையாக்கிக் கொண்ட அரசியல்வாதிகளால் நாடு பலவற்றை  இழக்கிறது. அதில் ஒன்று தான் இந்த மூளை வடிகால்!

அனைத்தும் மாறும் என நம்புவோம்!

No comments:

Post a Comment