Thursday 9 March 2023

ஊழல் வேண்டாம்!

 

நாட்டில் இலஞ்ச, ஊழல் பெருகிவிட்டது என்பது தெரிந்ததுதான்!

ஆனால் பதவியில் உள்ளவர்கள் இலஞ்சம் இல்லாமல் வாழ முடியாது  என்கிற நிலைக்கு வந்துவிட்டார்கள் என்றே தோன்றுகிறது!

இலஞ்சம் வாங்குவதற்குப் பதவியில் உள்ளவர்கள்,  அமைச்சர்கள் , சாதாரண சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் இப்படி அனைவருமே இலஞ்சம் இல்லாமல் தாங்கள் வாழ முடியாது என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டதாகவே இன்றைய நிலைமைகள் சுட்டிக்காட்டுகின்றன.

முன்பெல்லாம் இலஞ்சம் என்றால் போலீஸ்காரர்கள்  பெயர்கள் தான் முன்னுக்கு வரும். அது கூட அவர்களைக் குறை சொல்ல முடியாது. உரிமம் இல்லாமல் கார் ஓட்டுபவன்,  மோட்டார் சைக்கிள் ஓட்டுபவன், அதிவேகத்தில் பறப்பவன் - இவர்கள் தான்  போலீஸ்காரர்களுக்கு இலஞ்சத்தைக் கொடுத்துப் பழக்கியவர்கள்! அப்போது அது சிறிய அளவில் இருந்தது. இப்போதும் இருக்கிறது.

ஆனால் அரசியல்வாதிகளின் அட்டூழியங்களைத் தான் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை! சகித்துக்கொள்ள முடியாத அளவுக்கு அவர்களின் செயல்பாடுகள் தொடர்கின்றன.

பள்ளி சென்று எதற்குப் படிக்கிறோம்?  சமயப்பாடங்களை எதற்காக கற்கின்றோம்?  எதற்காக இறைவழிபாட்டுத் தலங்களுக்குச் செல்கிறோம்? ஆனால் மக்கள் பணத்தை அரசிய்ல்வாதிகள்  சூறைவாடுவதைப் பார்க்கும் போது  நாம் படித்தது வீண்! சமயப்பாடங்கள் வீண்!  இறைவழிபாடு வீண்! அரசியலில் உள்ளவர்கள் அததனை விதிகளையும் மீறுபவர்களாகத் தான்  இருக்கிறார்கள். 

"பிச்சை புகினும் கற்கை நன்றே" என்கிறாள் ஒளவை. அந்த அளவுக்கு கல்வி உயர்வானது. கற்றவர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று அதற்காகத்தானே சொன்னார்கள் நம் முன்னோர்.

ஆனால் நடைமுறையில் நடப்பது என்ன?  படித்தவன் தான் கொஞ்சமும் கூசாமல் பஞ்சமா பாதகங்களைச் செய்கிறான். நாட்டை கொள்ளையடிப்பவன் யார்? அரசியல்வாதி! மக்களின் பணத்தைச் சுரண்டுபவன் யார்? அரசியல்வாதி! சாப்பாட்டுப் பொருள்களைக்கூட வாங்குவதற்கு மக்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். ஆனால் அரசியல்வாதி வெளி நாடுகளில் தனது சாப்பாட்டு பொருள்களை வாங்குகிறான்! ஏன்? நாட்டின் நிலைமை அரசியல்வாதிகளை மட்டும் பாதிக்கவில்லையா?

கற்ற் கல்வி வீணோ என்று தான் நினைக்க வேண்டியுள்லது! ஆன்மீகங்கள் அனைத்தும் வீணோ என்று தான் புலம்ப வேண்டியுள்ளது! சமய வழிபாடு என்பது வீணோ என்று தான் வசைபாட வேண்டியுள்ளது!

அரசியல்வாதிகள் திருந்தாதவரை மக்களின் வாழ்க்கைத்தரம் உயராது!

No comments:

Post a Comment