Sunday 26 March 2023

ஏன் இவர்கள் இப்படி?

 

ஓரிரு தினங்களுக்கு முன்னர்  கல்வியாளர் ஒருவரது பேச்சைக் கேட்க நேர்ந்தது. மனதிலே சொல்ல முடியாத துயரம்.

நமது மாணவர்கள் தமிழ்ப்பள்ளிகளில் படிக்கும்வரை அவர்களால் எந்தப் பிரச்சனையும் எழவில்லை. உண்மையைச் சொன்னால் அவர்கள் திறமையான மாணவர்களாகவே இருக்கிறார்கள். உலக அளவில் கூட சிறப்பான பரிசுகளைப் பெறுகின்றனர்.

இடை நிலைப்பள்ளிகளுக்க்குப் போகும் போது ஏனோ அவர்கள் தடம் புரண்டு  விடுகின்றனர். அதனைத்தான் அந்தப் பெண்மணி சொல்லிக் கொண்டிருந்தார்.

இடைநிலைப்பள்ளிகளில் படிக்கும் இந்திய மாணவர்கள் செய்கின்ற வன்முறைகளைப் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம்.  இந்த மாணவர்கள் மேற்கல்வி பயில தனியார் கல்லூரிகள் இந்திய மாணவர்களைச் சேர்த்துக்கொள்ள விரும்பவில்லை என்பதாக அவர் கூறினார்.

அரசாங்க கல்லுரிகளில் இடம் கிடைக்காத மாணவர்கள் தனியார் கல்லுரிகளைத்தான் நாட வேண்டும். வேறு வழியில்லை. அந்தக் கல்லூரிகளும் இந்திய மாணவர்களைப் புறக்கணித்தால் அவர்கள் வேறு எங்குப் போவார்கள் என்பது கேள்விக்குறி தான்.

நமக்கு ஒன்று புரியவில்லை. இடைநிலைப்பள்ளிகளில் அவர்கள் ஒருவேளை தவறாக நடந்து கொள்ளலாம். ஆனால் கல்லூரிகளிலும் அப்படி செய்வார்களா என்பது உண்மையில் நமக்குப் புரியவில்லை. கல்லூரிகள்  என்பது கொஞ்சம் பெரிய படிப்பு. அது அவர்களின் எதிர்காலம். அங்கும் அப்படித்தானா என்பதைக் கேட்கும் போது நமது மனதைக் கலங்கடிக்கிறது. ஒரு வேளை டிப்ளோமா, டிகிரி என்கிற போது அவர்கள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள் என்பதுதான் நமது மதிப்பீடாக இருக்கின்றது. ஆனால் கல்லூரிகளிலும் வன்முறை தான் என்னும்போது  என்ன சொல்லுவது என்று புரியவில்லை. கல்லூரிகள் வேண்டாம் என்றால் அதற்கான காரணங்கள் இருக்க வேண்டும். ஏற்கனவே அங்கு வன்முறைகள் நடந்திருக்க வேண்டும்.

நமது மாணவர்களின் பிரச்சனை என்னவென்பது நமக்குத் தெரியவில்லை. அவர்கள் இப்படி நடந்து கொள்வதற்குப் பெற்றோர்களைத்தான் நாம் குறை சொல்லி வருகிறோம். இன்றைய நிலையில் பெற்றோர்களே வன்முறையாளர்களாக இருக்கின்றனர். அது தான் பிரச்சனை! 

கொஞ்சம் ஆழமாகப் போனால் ஒழுங்கு என்பது வீட்டிலிருந்து துவங்க வேண்டும். அங்கே ஒழுங்கு இல்லாத போது வேறு எங்கே போய் முட்டிக்கொள்வது? 

நமது கரிசணையெல்லாம் ஒரு சில மாணவர்கள் செய்கின்ற தவறுகளினால்  அனைத்து இந்திய மாணவர்களும் பாதிக்கப்படுகின்றனர். இந்த தனியார் கல்லூரிகள் இவர்களைப் புறக்கணித்தால் வேறு வழிதான் என்ன? 

வருங்காலங்களில் இதற்கும் நல்லதொரு தீர்வு பிறக்கும் என நம்புவோம்!

No comments:

Post a Comment