அரசாங்க அலுவலங்கள் இப்போது அதிகமாக மக்கள் எப்படி உடை அணிந்து வருகிறார்கள் என்பதில் ஆர்வம் காட்ட ஆரம்பித்துவிட்டன!
இப்போது நாட்டில் உயிர் போகும் பிரச்சனை என்றால், அரசாங்க ஊழியர்களுக்கு, வருபவர்கள் எப்படி உடை அணிந்து வருகிறார்கள் என்பது தான்!
ஆனால் அரசாங்க ஊழியர்களுக்கு அதைவிட இன்னும் அதிகமாக அலுவலகத்தில் கடைப்பிடிக்க வேண்டிய வேலைகள் உள்ளன என்பதை மறந்து விடுகின்றனர்.
எப்படி உடை அணிந்து வருகிறார்கள் என்பதில் காட்டும் ஆர்வம் தங்களின் வேலைகளில் காட்டுவதில்லை. இது தான் மிகப்பெரிய பிரச்சனை. நமக்கு ஒரு வேலை ஆக வேண்டும் என்றால் அது ஒரே தடவையில் நடந்து விடுவதில்லை. இது தான் மக்கள் எதிர்நோக்கும் பெரிய பிரச்சனை.
ஒரு சாதாரண நிலையில் வேலை செய்கிறவர் என்றால் அவரால் ஒரு முறை தான் விடுப்பு எடுக்க முடியும். அரசாங்க ஊழியர்களுக்கு ஏற்ப அவர்கள் விடுப்பு எடுக்க முடியாது. முதலில் இவர்கள் இந்த மக்களின் பிரச்சனைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களைப் புரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் பிரச்சனைகளை அரசாங்க ஊழியர்களால் அறிந்து கொள்ள முடியும்.
நமக்குத் தெரிந்த மலாய் பெண்மணி ஒரு வேலையாகப் போனவர் அந்த வேலையை முடிக்க நான்கு ஐந்து முறை மீண்டும் மீண்டும் அலுவலகத்திற்குப் போக வேண்டி வந்தது. முதலில் என்னதான் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டால் அவர் புரிந்து கொள்வார். ஆனால் அவர்கள் அப்படி செய்வதில்லை. அவர்கள் சொல்லுவது எல்லாம் தவணை முறையில் தான் சொல்லுவது வழக்கம்! தவணை முறையில் பொருள்களை வாங்கி வாங்கி ஊழியர்களும் அதே முறையை அலுவலகங்களிலும் கடைப்பிடிக்கின்றனர்!
ஆனால் பொது மக்கள் தனியார் துறைகளில் வேலை செய்பவர்கள். அவர்களுக்கு அரசாங்க சம்பளம் இல்லை என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவர்கள் அங்கே உட்கார்ந்து சிரித்துக் கொண்டு ஏதோ பொழுதை போக்குபவர்கள் போல நடந்து கொள்ளுகிறார்கள்! அது அரசாங்கத்திற்கு நட்டம். ஊழியர்களுக்கு நட்டம் இல்லை! ஆனால் பொது மக்களின் நிலை அதுவல்ல. விடுமுறை எடுப்பதில் சிக்கல்கள் உண்டு. அவர்களுக்குச் சம்பளம் இல்லை. போக்குவரத்து செலவுகள். இன்னும் பல. அதனால் முடிந்தவரை விடுமுறை கிடைக்கும் அந்த ஒரு நாளில் அனைத்தையும் செய்து முடித்துவிட வேண்டும் என்று நினைப்பதில் நியாயம் உண்டு. அரசாங்க ஊழியர்கள் அதுபற்றி எல்லாம் யோசிப்பதில்லை.
அரசாங்க ஊழியர்கள் இப்படி நடந்து கொள்வதற்கு இன்னொரு காரணமும் உண்டு. அங்குள்ளவர்கள் பலருக்கு அவர்களின் வேலைகளில் பெரும்பாலும் அரைகுறை! அவர்கள் அனைவரும் தகுதி உள்ளவர்கள் என்பதாக அவர்களுடைய யூனியன் தான் மெச்சிக்க வேண்டும்! பெரும்பாலும் வேலை தெரியாதவர்கள் தான்! பிரச்சனை என்னவென்றால் தெரியவில்லை என்றால் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற முனைப்பு இவர்களிடம் இல்லை! என்ன செய்வது?
நம்முடைய குரல் என்னவென்றால் நேரத்தை வீணடிக்காதீர்கள். அன்றன்றைய வேலையை அன்றே முடித்துவிடுங்கள். நாளை வா என்று இழுத்தடிக்காதீர்கள்! என்பது தான். உங்கள் சோம்பேறி தனத்தை பொது மக்கள் மீது கடத்தாதீர்கள்!
No comments:
Post a Comment