Monday 6 March 2023

தாய்மொழிப்பள்ளிகள்!

 

தாய்மொழி பள்ளிகளைப்பற்றி மீண்டும்  ஒரு விதண்டாவாதத்தை கிளப்பியிருக்கிறார் முக்ரிஸ் மகாதீர்!

நமக்குத் தெரிந்ததெல்லாம் அரசியலில் மலாய்க்காரர்களின் ஆதரவைப் பெற வேண்டுமானால் முதலில் தாய்மொழிப்பள்ளிகள்  இன்னொன்று நாட்டின் பொருளாதாரம்.  அதனை அடுத்து மதம். அப்பனும் மகனும் இதைத் தெளிவாக தெரிந்து வைத்திருக்கிறார்கள்!

இத்தனை ஆண்டுகள் அரசியலில் கொடிகட்டிப் பறந்தவர் முக்ரிஸ். அப்போதெல்லாம் அவர் இதுபற்றி வாய்த்திறக்கவில்லை.  ஏன்? அவர்களுக்கான ஆதரவு நிரந்தரம் என்று நினைத்தார்கள். ஆனால் கடந்த தேர்தலில்  வைப்புத்தொகையை இழக்கும் அளவுக்கு இருவருக்கும் அடி விழுந்தது! இப்போது பழையபடி பழைய பல்லவியை ஆரம்பித்துவிட்டார்கள்!

டாக்டர் மகாதிர் எப்படி அரசியலுக்கு வந்தார்?  இனங்களுக்கிடையே ஒரு பிரிவினையை ஏற்படுத்தி தான் அவர் அரசியலுக்கு  வந்தவர்.  பொருளதார ஏற்றத் தாழ்வுகளுக்கு மற்ற இனத்தவர்களைக் குற்றம் சாட்டினார்.  தாய்மொழிப்பள்ளிகள்  வேற்றுமையை ஏற்படுத்துகின்றன என்று குற்றம் சாட்டினார். இப்படியெல்லாம் குற்றம்சாட்டித் தான் அவர் அரசியலுக்கு வந்தவர். பொருளாதார முன்னேற்றமடைய  இலஞ்சம் வாங்கியாவது  முன்னேற்றம் அடையுங்கள் என்று இலஞ்சத்தை ஊக்குவித்தவர் அவர்.

சரி இப்போது அவர் மகன் என்ன சொல்லுகிறார்? அப்பா என்ன சொன்னாரோ அதையே தான் இப்போது மகன் சொல்லுகிறார்!  அப்படி என்றால் அப்பா இத்தனை ஆண்டுகள் ஆட்சியில் இருந்த போது மலாய் மக்களுக்கு எதுவும் செய்யவில்லையா? இப்போது மகன் சொல்லுகின்ற குறைகளைப் பார்த்தால் அவரது அப்பா தான் குற்றம் சாட்டப்பட வேண்டியவர். ஆட்சியில் இருந்த போது குடும்பமே இலஞ்சத்தைத் தவிர வேறு எதையும் பார்க்கவில்லை என்று  தான் தோன்றுகிறது.

இப்போது இவர்கள் என்ன தான் சொல்லுகிறார்கள்? பழைய பல்லவியையே பாடுகிறார்கள்! அதே பொருளாதாரம், அதே மொழிப்பிரச்சனை -  இவைகள் தான் இவர்களது ஆயுதம்! ஆனால் முன்னாள் பிரதமரே, முன்னால் மந்திரி பெசாரே!  இந்த ஆயுதங்கள் இனி எடுபடாது! வேறு எதையாவது புதிதாகக் கண்டுபிடித்து அரசியல் பேசுங்கள். எத்தனை நாளைக்கு இதனையே பேசிக்கொண்டிருக்கப் போகிறீர்கள்? வருங்காலங்களில் இந்தப் பேச்சுக்கள் எடுபடாது!

தாய் மொழிப்பள்ளிகளைப் பற்றிப் பேசி இனி அரசியல் பேச முடியாது. அதே போல பொருளாதாரம் மலாய் மக்களின் கையில் பெரும் அளவில் போய்விட்டது. வணிக நிலையங்கள் பல அவர்களுடையது தான்.

அரசியல் பேசினால் நாட்டு நலனை முன்னிறுத்துப் பேசுங்கள்.  எல்லாத் தவறுகளையும் செய்துவிட்டு இப்போது மீண்டும் பழைய காலத்து அரசியலுக்குப் போகிறீர்கள்! அந்தப் பழைய காலம் மலையேறிவிட்டது! புதிதாக சிந்தியுங்கள்! செயல்படுங்கள்!

No comments:

Post a Comment