Sunday 12 March 2023

ஆதரவு அதிகமாகும்!

 

பொதுவாக ஊழல் குற்றச்சாட்டில் அரசியல்வாதிகள் கைது செய்யப்படும் போது அரசியல் ஆய்வாளர்கள் சில கருத்துகளை உதிர்ப்பதுண்டு.  அதுவும் பலரது கருத்துகளை அவர்கள் உள்வாங்கி பின்னர் தங்களது கருத்துகளோடு சேர்த்து  அவர்கள் அதனை வெளியிடுகின்றனர்.

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கைது செய்யப்பட்டார். நாடே தலைகீழாக உருளப்போகிறது  என்று எதிர்பார்த்தோம். கடைசியில் ஒரு பருப்பும் வேகவில்லை! இப்போதும் அவர் சிறையில் தான் இருக்கிறார்!  முதுகலை படிப்புக்காக ஏற்பாடுகளும்  செய்து கொண்டிருக்கிறார். வெற்றி பெற வாழ்த்துகள்!

இப்போது முன்னாள் பிரதமர் முகைதீனுக்கும்  அதே நிலை தான். மாநிலத் தேர்தல் வரும்வரை "நான் குற்றவாளி அல்ல!" என்று சொல்லி மலாய்க்காரர்களின் வாக்குகளைப் பெற முயற்சி செய்வார். இது எப்போதும் நடப்பது தான்! ஆச்சரியம் ஒன்றுமில்லை!

இவரை வைத்து மலாய் வாக்குகளைப் பெறத்தான் முயற்சிகள் நடக்குமே தவிர மற்றபடி  பெரிதாக எதுவும் நடக்க வாய்ப்பில்லை!

ஆனால் எதுவும் மாறலாம். மலாய் வாக்காளர்களின் படித்தவர்கள் தொகை அதிகம். அவர்கள் அனைவரும் இலஞ்சத்தை, ஊழலை ஆதரிப்பவர்கள் என்று பொதுப்படையாக சொல்லிவிட முடியாது.  ஊழற்ற அரசாங்கமே நாட்டின் நலனுக்கு நல்லது என்பதை அனைவரும் விரும்புகின்றனர். இப்போதே மாற்றங்கள் தெரிகின்றன. இது தொடர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.

ஊழல் குற்றச்சாட்டு முகைதீனோடு நின்றுவிடப் போவதில்லை. இன்னும் துணைப் பிரதமர் சைட் ஹமிடியின் வழக்குகளும் உண்டு.  இன்னும் யார் யாரோ! பொறுத்திருப்போம்!

முகைதீனை குற்றவாளி என்பதனால் மலாய் வாக்குகள் சரிந்துவிடும் என்று சொல்லவிட முடியாது. ஏன் அரசாங்கத்தின் நடவடிக்கைகளினால் ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஆதரவும் கூடலாம்.  மலேசியர்கள் நாட்டின் நலனில் அக்கறை கொண்டவர்கள் அனைவருக்கும் நாட்டின் நலன் தான் முக்கியம்.  மலாய் வாக்காளர்களும் அதற்கு விதிவிலக்கல்ல. பொதுத் தேர்தலில் மலாய் மக்கள் சுமார் 31 விழுக்காடு நம்பிக்கைக் கூட்டணியை ஆதரித்திருக்கின்றனர். வருகின்ற மாநிலத் தேர்தலில் அந்த எண்ணிக்கை கூடும் என எதிர்பார்க்கலாம். ஒரே காரணம் தான். மக்களின்  பிரச்சனைகளைக் குறைக்க பிரதமர் ஆக்கப்பூர்வமாக செயல்படுகிறார் என்கிற எண்ணம் மக்கள் மனதில் ஏற்பட்டிருக்கிறது.

எப்படி பார்த்தாலும் மக்கள் ஆதரவு வேண்டும் என்பதற்காக கண்மூடித்தனமாக செயல்பட முடியாது. குற்றம் என்றால் குற்றம் தான். அரசியல்வாதி இலஞ்சம் வாங்குகிறான் என்பதற்காக அவனைத் தண்டிக்காமல் இருக்க முடியாது. அரசியல்வாதி மட்டும் என்ன  அந்த அளவுக்கு உயர்ந்தவனா? மக்கள் பணத்தைக் கொள்ளையடிப்பவன் தண்டனைப் பெற்றே ஆகவேண்டும். அதனால் அநியாயம் பண்ணுகிறவனைப் பார்த்துக் கொண்டிருப்பது ஆட்சியாளனுக்கு அழகல்ல!

ஆதரவு பெருகும் என்பதே நமது கணிப்பு!

No comments:

Post a Comment