நன்றி: வணக்கம் மலேசியா
நல்லதுக்குக் காலமில்லே என்பார்கள்! அப்படி ஒரு நிகழ்வு சமீபகாலமாக நடந்து வந்திருக்கிறது. ஆனால் நம்மால் தான் புரிந்து கொள்ள முடியவில்லை. வெளுத்ததெல்லாம் பால் என்று நினைக்கும் சமூகம் நாம்.
இந்தியாவுக்குப் படிக்க சென்ற தனது மகளுக்குக் கர்ப்பப்பை புற்று நோய் என்று கூறி அவர் திருச்சியில் மருத்துமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்த சிகிச்சைக்காக நான்கு இலட்சம் வெள்ளி தேவை என்பதாகவும் வசூல் வேட்டையில் இறங்கியிருக்கிறார்கள் ஒரு குடும்பத்தினர்!
இந்த வசூல் வேட்டை 2014 ஆண்டு தொடங்கி சமீபகாலம்வரை தொடர்ந்து நடந்து வந்திருக்கிறது! பல பெரிய மனிதர்களும், அரசியல்வாதிகளும், பொது மக்களும் பலவாறாக உதவிகளும் செய்திருக்கின்றனர். இதனைத் தவறு என்று யாரும் சொல்லவில்லை. ஆனால் பெண்ணின் பெயரைச் சொல்லி இப்படியெல்லாம் வசூல் செய்வது பாவம் என்பது அந்தக் குடும்பத்தினர் உணரவில்லை.
உண்மையில் ஒரு சிலருக்குப் பணம் தேவை என்பது நமக்குத் தெரியும். வெளிநாடுகளில் குறிப்பாக மருத்துவம் படிக்கும் நமது மாணவர்களில் கடைசி நேர வேண்டுகோள் வைப்பதை நாம் பார்க்கிறோம். அவர்களுக்கு அரசாங்கமும் உதவுகிறது. பொது மக்களும் உதவுகிறார்கள். கல்விக்காக மட்டும் அல்ல மருத்துவத்திற்காகவும் பெரும் அளவில் மக்கள் உதவுகிறார்கள். அதுவும் குறிப்பாக இருதயம் சம்பந்தமாக நோய்களுக்குச் சிகிச்சை பெற - ஐ.ஜே.என். போன்ற மருத்துவமனைகள் பெரிய அளவில் கட்டணங்கள் வாங்குகின்றன. அதையெல்லாம் சதாரண குடும்பத்தினர் நினைத்துக்கூட பார்க்க முடியாது. அதற்கெல்லாம் மக்கள் உதவத்தான் செய்கிறார்கள்.
இந்த நேரத்தில் இது போன்ற செய்திகள் வரும்போது நமக்கும் மனக்கஷ்டம் ஏற்படுகிறது. பிறருக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணமும் போய்விடுகிறது. இப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்களே என்கிற வருத்தமும் ஏற்படுகிறது.
இப்படி ஒரு செய்தியை இது நாள் வரை நமது நாட்டில் நாம் கேள்விப்பட்டாதில்லை. யாரும் செய்ததில்லை. யாரும் செய்யத் துணியவில்லை.
இந்தக் குடும்பத்தினரின் பின்னணி நமக்குத் தெரியவில்லை. வெளி நாட்டிலிருந்து வந்து இங்கு இது போன்று செயலில் ஈடுப்பட்டிருக்கிறார்களோ என்கிற சந்தேகத்தையும் இது எழுப்புகிறது.
எப்படிப் பார்த்தாலும் இது போன்ற செயல்கள் நமக்குப் பின்னடைவே. உண்மையாகவே தேவை என்று நினைப்பவர்களுக்கும் ஆப்பு அடித்துவிட்டார்கள்! நம் மக்களுக்கு ஏகப்பட்ட துன்பங்கள். அதில் இதுவும் ஒன்று!
No comments:
Post a Comment