Tuesday, 31 December 2024

ஆண்டின் கடசி நாள்!


ஆண்டின் கடைசி நாள். ஒரு வருடம் ஓடிவிட்டது. என்னத்தை  சாதித்தோம் என்று புரியவில்லை.  ஒவ்வொரு ஆண்டும் இப்படித்தான் வரும் போகும். சாதித்தது  என்ன என்பது தான் புரியாத புதிர்!

சரி அதை விடுவோம். மலேசிய இந்தியர்கள்  இந்த ஆண்டு  என்ன  மனநிலையில் இருந்தார்கள் என்பதைக்   கொஞ்சம் பார்ப்போம். 

இந்த ஆண்டு  இந்தியர்கள் அதிகமாக உச்சரித்த பெயர் என்றால்  அது பிரதமர் அன்வாரின் பெயராகத்தான் இருக்க வேண்டும்..  அவரைப்பற்றி நல்லது பேச யாருக்கும் மனம் வரவில்லை.  திட்டி தீர்த்தவர்கள் தான் அதிகம்.

"தேர்தலுக்கு முன் எம்.ஜி.ஆர். வேடம் போட்டார். தேர்தலுக்குப் பின் எம்.என்.நம்பியாராக மாறிவிட்டார்!" என்பது தான் இந்தியர்கள் அவர் மீது  வைத்த பொதுவான  குற்றச்சாட்டு.  "எண்பது விழுக்காடு ஓட்டுப்போட்டு அவரைத் தேர்ந்தெடுத்தோம்  ஆனால் பதவிக்கு வந்த பின் நம்மை அப்படியே ஒரங்கட்டிவிட்டார்!" என்கிற கோபம் இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கிறது! 

அதுவும் உயர் கல்வி,  தமிழ் கல்வி, பொருளாதாரம் என்று வரும்போது எங்கோ போய்  ஓடி ஒளிந்துகொள்கிறார் என்று  இந்தியர்கள் குற்றம்சாட்டும் அளவுக்கு அவர் நடந்து கொள்கிறார் என்பதை மறுப்பதற்கில்லை. அன்று அவர் பேசியது வேறு. இன்று அவர் அரசியலில் தொடர்ந்து பேர்போட வேண்டுமென்றால் மலாய்க்காரர்களின் ஆதரவு அவசியம் என்னும் நிலைக்கு அவர் வந்துவிட்டார்.  அதனால் அவரின் அரசியல் பாதை மாறிவிட்டது.

இப்போது முன்னாள் பிரதமர் நஜிப் கொஞ்சம் நல்லவராக இந்தியர்களின் கண்களுக்குத் தோன்ற ஆரம்பித்துவிட்டார். நிறைய நல்லது செய்திருக்கிறார் என்கிறார்கள். சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பார்கள். எல்லாம் காரணமாகத்தான் ஆடும். அப்படி ஒரு சூழல் இருந்தபோது, அவரை வைத்து, நம் அரசியல்வாதிகள் பெரிதாக அப்படி என்ன சாதித்துவிட்டார்கள்? அவர்களுக்காக சாதித்துக் கொண்டார்களே  தவிர மக்களுக்கு என்ன சாதித்தார்கள்?

நாம் குறைகளைச் சொல்லியே வீழ்ந்து போன சமுதாயம்.  இருப்புவனை வைத்துக் கொண்டே மேலே ஏறுவதற்கு  என்ன செய்யலாம் என யோசிப்போம். நமது எண்ணங்களை மாற்றி சிறப்பாக வாழ முயல்வோம்.

Monday, 30 December 2024

இன்னும் விலை கூடலாம்!

                           தே ஓ அய்ஸ் லைச்சி    விலை   RM15.00

இன்றைய நிலையில் எந்த  உணவு  அல்லது பானம் எந்த விலையில் விற்கப்படுகிறது  என்பது  யாராலும் கணிக்க முடியாத நிலைமையில் தான் நாம் இருக்கிறோம்.  எல்லாமே 100 விழுக்காடு விலையேற்றம்  என்றால் யார் என்ன செய்ய முடியும்?  யார் தான் விலைகளைக் கட்டுப்படுத்த முடியும்? அதற்கென தனி அமைச்சு  இருக்கத்தான் செய்கின்றது.  இருந்தும் இது போன்ற விலையேற்றங்கள் நடந்து கொண்டு தானே இருக்கின்றன.  

விலைகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால்  அதற்கு எதற்கு தனி அமைச்சு? தனி அமைச்சர்? வேலை செய்ய ஏகப்பட்ட வேலையாட்கள்?  பணம் வீண் விரயம் என்பதைக் கூடவா அரசாங்கம் புரிந்து கொள்ளவில்லை?

கட்டுப்படுத்த வேண்டுமென்றால் அரசாங்கம் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும். கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். எடுப்பது மாதிரியும் தெரியவில்லை. எடுப்பார்கள் எனவும் நம்பிக்கையில்லை. என்னடா இது மலேசியர்களுக்கு வந்த சோதனை!

இப்போதெல்லாம் இந்திய.  மாமாக் உணவகங்களில்  விலையேற்றம் என்பது நாம் எதிர்பாராத அளவுக்கு உயர்ந்துவிட்டது.  சொல்லுகின்ற காரணம்: விலைவாசி ஏற்றம். நமக்கும் புரிகிறது.  விலையை ஏற்றிவிட்டீர்கள்.  விலையை ஏற்றிவிட்டு தரத்தைக் குறைத்துவிட்டிர்கள். இட்டிலி சிறிதாக மாறிவிட்டது.  மீகொரங்  வாங்கினால் ஒரு கீரை கூட கிடையாது.அளவும் குறைந்து போனது. விலையை ஏற்றிவிட்ட பிறகு  ஏன் இது போன்ற தரக்குறைவான வேலையைச் செய்கிறார்கள் என்பது இன்றுவரை  நமக்குப் புரியவில்லை.

ஒன்று விலையை ஏற்றுங்கள் ஆனால் தரம், அளவு அதில் எந்த மாற்றமும் இருக்கக் கூடாது. பழைய நிலையிலேயே இருக்க வேண்டும்.  தரம், அளவு  போன்றவைகளைக் குறைத்தால் விலையேற்றம் தேவை இல்லை.  அது தான் தரம் குறைந்துவிட்டதே அப்புறம் ஏன் விலையேற்றம்?  ஆனால் இப்போது நீங்கள் என்ன செய்கிறீர்கள்?  தரம், அளவு அனைத்தையும் குறைத்துவிட்டு அங்கும் இலாபம் பார்க்கிறீர்கள்.   விலையையும் ஏற்றி இங்கும் இலாபம் பார்க்கிறீர்கள்.

எல்லாவற்றிலும் ஒரு நியாயம் இருக்க வேண்டும் உங்களுக்கும் சேர்த்துத்தான் அந்த நியாயம்!

Sunday, 29 December 2024

அதிகாரம் கொடுத்த தண்டனை!

 

         முப்தி, டத்தோ முகமட் அஸ்ரி  ஸைனல் அபிடின், பெர்லிஸ் மாநிலம்

நாம் தான் குழம்பி விட்டோமோ? பொதுவெளியில் தண்டனை  என்றால்   அதற்கும் இஸ்லாமிய ஷாரியா சட்டத்திற்கும் சம்பந்தமில்லை என்று பெர்லிஸ் முப்தி அவர்கள் சொல்லி இருப்பது  உண்மையில் நமக்கு அதிர்ச்சி அளிக்கிறது!

பொது வெளியில் தண்டனை என்றாலே அது இஸ்லாமிய சட்டம்  என்று தான்  நமக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. அதனால் தான் நாமும் இது போன்ற சட்டங்கள் வேண்டாம் என்று  சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

இப்போது முப்தி அவர்கள் நமக்கு ஒர் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார். அது இஸ்லாமிய சட்டம் அல்ல என்கிறார். அது அதிகாரத்தில் உள்ளவர்கள்  கொடுக்கும் தண்டனையே தவிர இஸ்லாமிய சட்டம் அல்ல  என்பது  நமக்கும் புதுமையாகத்தான் இருக்கிறது.

ஷரியா சட்டம் என்றால் அது இஸ்லாமிய சட்டம்  என்று தானே நாம் அர்த்தம் கொள்கிறோம்?   இஸ்லாமிய சட்டம் இல்லை என்றால்  அது எப்படி  இது போன்ற சட்டங்களை  ஷரியா நீதிமன்றம் விதிக்க முடியும் என்கிற கேள்வி எழத்தான் செய்கிறது.

ஷரியா நீதிமன்றம் சிவில் நீதிமன்றம் இரு நீதிமன்றங்களும்  ஒரே வித  சட்டதிட்டங்களைக் கொண்டிருக்கவில்லை என்பது நமக்கு மேலோட்டமாகத் தெரியுமே தவிர  அதுபற்றிய ஆழ்ந்த அறிவு நமக்கு இல்லை. ஒன்று மட்டும் நமக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. பொதுவெளியில் கொடுக்கப்படும் தண்டனைகள்  இஸ்லாமிய சட்டம் என்பதாக ஊடகங்கள் மூலமாக  நமக்குக் கொடுக்கப்பட்ட செய்தி. அவ்வளவுதான்.

முப்தி அவர்கள் சொல்லுவதைப் பார்த்தால்  அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு இது போன்ற சட்டங்களை நிறைவேற்ற  அதிகாரம் உண்டா என்பது  உண்மையில் நமக்குத் தெரியவில்லை. சிவில் சட்டம் நீதிபதிகளால் தீர்மானிக்கப்படுகிறது. ஷாரியா சட்டம் அதிகாரிகளால் தீர்மானிக்கப்படுகிறதா? புரியவில்லையே!

Saturday, 28 December 2024

பயப்படாதே! நானிருக்கேன்!

 

மின்சாரக் கட்டணம் உயரும் என்று சில நாட்களாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.  செய்தியே நமக்கு அதிர்ச்சி தருவது தான். ஷாக் அடிக்கும்  நியுஸ் என்பார்கள்!

ஆனாலும் பிரதமர் அன்வார் "பயப்பாடாதீர்கள்!  நானிருக்கிறேன்!" என்று  நமது தற்காப்புக்காககக் களம் இறங்கியிருக்கிறார். 

"மின்கட்டணம் உயரட்டும். ஆனால் அது ஏழை மக்களை எந்த வகையிலும்  பாதிக்காத வண்ணம் நாங்கள் பார்த்துக் கொள்வோம்"  என்பது தான் பிரதமர் கொடுக்கும் மக்களுக்கான செய்தி.  முடிந்தவரை அது பணக்காரர்களுக்கும் பெரும் நிறுவனங்களுக்கும்  ஒரு வேளை அது உயர்த்தப்படலாம்.  சாதாரண ஏழை மக்கள் அது பற்றி கவலைப்படத் தேவையில்லை என்கிறார் பிரதமர்

நமக்கும் சில சந்தேகங்கள் உண்டு. பெரும் நிறுவனங்களுக்கு ஏற்றுவது சரிதான் என்றாலும்  அவர்களே அந்தச் சுமைகளை எத்தனை நாளைக்குத்தான் தாங்குவார்கள்?  அவர்கள் அதனை மக்களிடம் தானே கொண்டுவந்து  சேர்ப்பார்கள்?   அது மின்கட்டண உயர்வு என்கிற பெயரில் வராமல்  அது பொருட்களின் விலை உயர்வு என்கிற பெயரில்  வரத்தானே  செய்யும்? 

இப்படி விலை உயரும் போது  அதனை எப்படி பிரதமர்  சமாளிக்கப் போகிறார்?    மின்சாரக்கட்டணத்தை எப்படி வேண்டுமானாலும் கட்டுப்படுத்தலாம். அதனை  உயர்த்தலாம் குறைக்கலாம்.  அது உங்கள் வீட்டுச் செல்லக்குட்டி மாதிரி!  ஆனால் விலைவாசி உயர்வை எப்படிக் கட்டுப்படுத்துவீர்கள்?   நீங்கள் சொல்லுவதை  எந்த வியாபாரியும் கேட்கப் போவதில்லை.  பதுக்குற வேலை ஒதுக்குற வேலை எல்லாமே நடக்கும்! அப்போதும் இந்த ஏழை மக்கள் தான் பாதிக்கப்படுவார்கள்.

இப்போதைக்கு நம்மால் எந்த ஒரு முடிவுக்கும் வரமுடியாது.  ஏதோ பிரதமர் சொல்லுகிறார். கேட்க சந்தோஷம் தான்.  ஆனால்  எப்போதும் இது சந்தோஷத்தைக்  கொடுக்குமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

நீங்கள் இருக்கும் போது நாங்கள்  ஏன் பயப்படப் போகிறோம்?

Friday, 27 December 2024

தண்டனை நிறைவேற்றப்பட்டது!

         அஃபண்டி அவாங் தண்டனையை நிறைவேற்ற பள்ளிவாசலுக்குள்                                                        கொண்டு செல்லப்படுகிறார்.

திரெங்கானு மாநிலத்தில் ஷரியா நீதிமன்றத்தில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட அஃபெண்டி அவாங் இன்று சுமார் 70 பார்வையாளர்களின் முன்னிலையில் பிரம்படி  தண்டனை இன்று  வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்னர்  வெற்றிகரமாக  நிறைவேற்றப்பட்டது.

அஃபண்டி அவாங், வயது  42, கல்வத் குற்றத்திற்காக ஷரியா நீதிமன்றம் விதித்த தண்டனை ஆறு பிரம்படிகள். அந்தத் தண்டனை பொதுவெளியில் அதாவது  பள்ளிவாசலின் வளாகத்தில். சுமார் 70 பேர் முன்னிலையில் நிறைவேற்றப்பட்டது.  தண்டனையின் போது - அதாவது பிரம்படியின் போது - அவரது குடும்பம் அங்கிருந்து வெளியேறிவிட்டது.

கொடுக்கப்பட்ட ஆறு பிரம்படிகளும் - மூன்று பிரம்படிகள் முதுகிலும் மூன்று  அவரது பிட்டத்திலும்  - நிறைவேற்றப்பட்டு அவர் மீண்டும் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லபட்டார்.  பிரம்படி தண்டனை 2 நிமிடத்தில்  நிறைவேற்றப்பட்டது. அதாவது நண்பகல் 2.50 மணிக்குத் தொடங்கப்பட்டு  2.52 க்கு முடிவடைந்துவிட்டது.

திரெங்கானு  மாநிலத்தில் இது போன்று பொதுவெளியில்  கல்வத் குற்றத்திற்காக அளிக்கப்பட்ட  தண்டனை  என்பது இதுவே முதல் முறையாகும். 

பலர் இது போன்ற பொதுவெளி தண்டனைகளுக்கு எதிர்ப்புத்  தெரிவித்தாலும்  இது அவசியம் என்கிற கோணத்தில் திரங்கானு  அரசாங்கம் நிறைவேற்றியிருக்கிறது.

இனி திரங்கானு மாநிலத்தில் இது போன்ற குற்றங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.  நாமும் எதிர்பார்ப்போம்.

Thursday, 26 December 2024

பொதுவெளியில் தண்டனையா?




குற்றவாளிகளைப் பாவபுண்ணியம் பார்க்காமல்  தண்டனை பெற்றுத்தர வேண்டும்  என்பதில் யாருக்கும் எந்தவித கருத்துவேறுபாடும் இல்லை.

ஆனால் திரங்கானு   மாநிலத்தில் சமீபத்தில் ஷாரியா நீதிமன்றம் கொடுத்திருக்கும் பிரம்படி   தண்டனை மலேசியர்களான நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத, நடைமுறையில் இல்லாத,  மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய  தண்டனை என்பதில் ஐயமில்லை.

குற்றவாளி குற்றத்தை ஒப்புக்கொண்டான். அதற்கானத் தக்க தண்டனை  அவனுக்குக் கொடுக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.   அந்தத் தண்டனையை வழக்கமான சிறையில்  கொடுத்தால் நமக்கு எந்த வருத்தமும் இல்லை. ஆனால் நாலு பேர் பார்க்க வேண்டும்  என்பதற்காகப் பொது வெளியில்  தான் கொடுப்போம் என்றால் அதனை  எந்த மலேசியரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்.

ஷரியா நீதிமன்றம் கொடுத்திருக்கும் இந்தத் தீர்ப்பின் மூலம்  ஷரியா  நீதிமன்றம் தனது வரம்பை மீறிவிட்டதாகக் கூறுகிறது மனித  உரிமை ஆணையமான சுகாக்காம். நீதிமன்றம் தண்டனையைக் கொடுக்க வழக்கமான  சவுக்கடிக்கான நடைமுறையைக் கையாள வேண்டுமே தவிர  அதனைப் பொது வெளியில் கொடுக்க அதற்கு எந்த அதிகாரமும் இல்லை எனக் கூறுகிறது  மனித உரிமை ஆணையம்.

அதிகாரம் இல்லாத ஒன்றின் மேல் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி   அதனைப் பொதுவெளியில் நிறைவேற்ற நினைப்பது தான்  அதிகாரத் துஷ்பிரயோகம் என்பது.  இல்லாத சட்டத்தை இருப்பதாகக் கூறி  தண்டனையை நிறைவேற்றுவோம் என்பதே மக்களை ஏமாற்றுவது தான். ஆனால் மக்களால் எதுவும் செய்ய முடியாது  என்கிற அகங்காரம் தான் அரசியல்வாதிகளை இப்படியெல்லாம் செய்யச் சொல்கிறது.

தண்டனை பள்ளிவாசல் வளாகம் ஒன்றில் நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.  பார்வையாளர்கள்  சுமார் 70 பேர் கலந்துகொள்வர். அவர்கள் பெரும் பெரும் வி.ஐ.பி. க்களாகக் கூட இருக்கலாம்.  இவர்களைப் பாதுகாக்க காவல்துறை 40 போலிஸ்காரர்களைக் களம் இறக்கியிருக்கிறது.

இது அதிகாரத் துஷ்பிரயோகம் என்று தெரிகிறது. இந்தத் தண்டனை நிறைவேற்றப்படக்கூடாது என்பதே நமது பிரார்த்தனை.

Wednesday, 25 December 2024

கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!








கிறிஸ்துமஸ் / புத்தாண்டு வாழ்த்துகள்

 

Tuesday, 24 December 2024

பார்த்துப் போங்க சார்!

ஆண்டு கடைசி.  பண்டிகைக் காலம். பள்ளி விடுமுறை.  

புத்தாண்டு பிறக்கிறது.  புதிய ஆண்டில் பதவி உயர்வு. மக்கள் மனதிலே மகிழ்ச்சி.

எல்லாமே இருக்கட்டும். சொந்த ஊருக்குப் போகும் மகிழ்ச்சியில் கவனத்தைச் சிதறடிக்காதீர்கள். சாலையில் போக்குவரத்து நெரிசல். அதுவும் குறிப்பாக மோட்டார் சைக்கிளில் பயணிப்பவர்கள். கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும். யார் சொன்னாலும் கேட்க மாட்டேன் என்று அடம் பிடிக்காதீர்கள்.

வர வர சாலையில் விபத்துகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. சொந்த ஊருக்குப் போகிறபோது இலக்கை அடைய வேண்டியது தான் முக்கிய,ம்.   நிதானம் முக்கியம்.  கவனம்  தவறினால் மரணம் என்பார்கள். அது நமக்கு வேண்டாம். நல்லதே நடக்க வேண்டும். அதுவே நமக்கும் நமது குடும்பத்துக்கும் நல்லது.  ஆசையும், ஆர்வமுமாய் வீடு திரும்புகிறோம் அது நல்லபடியாக நடக்க வேண்டும் என்பது தான் நமது ஆசை.

சாலைகளைப் பயன்படுத்துபவர்கள் பலதரப்பட்டவர்கள். ஒன்று வேகம். இன்னொன்று குடித்துவிட்டு ஓட்டுவது. அது தண்ணியாகவும் இருக்கலாம் அல்லது கஞ்சாவாகவும் இருக்கலாம்.  போதையில் ஓட்டுபவர்களை  யார் என்னதான் செய்ய முடியும்?  பெரும்பாலான விபத்துகளுக்கு இவர்கள் தான் காரணம். அதனால் மது அருந்திவிட்டு வாகனங்களைப் பயன்படுத்தாதீர்கள். அது நடந்துகொண்டு தான் இருக்கிறது. சொன்னாலும் கேட்பதில்லை.

நண்பர்களே!  சாலைகளைப் பயப்படுத்துகிறீர்கள். நிதானம் தான் முக்கியம். சேர வேண்டிய இடத்தில் சேர வேண்டியது தான் முக்கியம்.

கிறிஸ்துமஸ் புத்தாண்டு வாழ்த்துகள்!

Monday, 23 December 2024

நம்பத்தகாதவர்கள் யார்?

அரசியல்வாதிகளை நாம் என்றுமே புனிதர்களாகக் கருதியதில்லை.  அவர்களும் அதனை அறிந்தவர்கள் தான்  

ஒவ்வொரு நாட்டிலும் ஊழலுக்குப் பேர் போனவர்கள் யார் என்றால் அவர்கள் அரசியல்வாதிகள் மட்டுமே! இதில் ஒளிவு மறைவு இல்லை! அது அவர்களுக்கே தெரியும் என்பது நமக்கும் தெரியும்.

நல்ல மனத்தோடு, சேவை செய்ய வேண்டும் என்கிற துடிப்போடு  அரசியலுக்கு வருபவர்களையும் நாம் பார்த்திருக்கிறோம்.  நல்லவன் என்று அரசியலில் பெயர் எடுக்க வேண்டுமானால்  அது மட்டும் நடக்காது. உங்களை மூட்டைக்கட்டி சிக்கிரம் வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள்!  அது தான் நல்லவனுக்கு ஏற்படும் கதி!  திருட்டுத்தனம் செய்பவன் தான்  தியாகி, தளபதி எனப் போற்றப்படுவான்!  அது தான் அரசியல்! 

நம்மைப்  பொறுத்தவரை மலேசிய அரசியலில் இந்தியத் தலைவர்களைப் பற்றித்தான்  நாம் அதிகம் பேசுகிறோம். மற்ற இனத்தவர்கள்  யோக்கியமானவர்கள் என்கிற  அபிப்பிராயம் நமக்கு உண்டு.  ஆனால் மூன்னாள் பிரதமர்களான டாக்டர் மகாதிர், நஜிப், முகைதீன் போன்றவர்கள்  அந்த நம்பிக்கையையும் உடைத்துவிட்டார்கள்!  அதனால்  அரசியல் என்றால்  'முன்ன பின்ன' இருக்கத்தான் செய்யும்  என்கிற எண்ணம்  போய்  அரசியலை அலிபாபா   அரசியலாக மாற்றி விட்டார்கள்!

சமீபத்திய   ஆய்வு ஒன்றில் உலகளவில்  அரசியல்வாதிகளே மக்களால்  வெறுக்கப்படுபவர்களாக இருக்கின்றார்கள்.  நம்பகத்தன்மை அற்றவர்களாக இருக்கிறார்கள். பதவிகளில் இருக்கும் காலத்தில்  கோடிகளைக் குவிக்கும் எண்ணம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்!  அப்பப்பா! அவர்களின் ஆசைக்கு அளவே இல்லை.  முடிந்தால் இந்த உலகத்தையே ஆள வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

நம் நாட்டைப் பொறுத்தவரை இந்தியர்கள் எந்த அளவுக்கு அரசியல்வாதிகளால் ஏமாற்றப்படுகிறார்கள்   என நாமறிவோம். இந்தியர்களின் முன்னேற்றத்துக்காக ஒதுக்கப்படும் பணம்  எதுவும் இந்தியர்களுக்குப் போய் சேருவதில்லை.  எல்லாமே  மடைமாற்றம் செய்யப்படுகிறது.  

நமது அரசியலில் நாம் சில நல்லவர்களைப் பார்த்திருக்கிறோம்.  துன்  வீ.தி சம்பந்தனைப் போல  சிலர். அவருக்குப்பின்  நல்லவர்கள் யாரும் தலை தூக்க முடியாதபடி அரசியல் அமைந்துவிட்டது!     இனி அமையும்  என்னும் நம்பிக்கையும் போய்விட்டது.  

எதிர்காலத்தை நம்பிக்கையுடன் பார்ப்போம்!

Sunday, 22 December 2024

இது தாத்தாக்களின் காலம்!

இது தாத்தாக்களின் காலமோ என்னவோ தெரியவில்லை! ஒரு பக்கம் கிறிஸ்துமஸ் தாத்தா  உலகமெங்கிலும்  ஆட்டமும் பாட்டமுமாய்  இருக்கிறார். ஸீ தமிழ் தொலைகாட்சியின் சிறுவர்  பாடல்  போட்டி நிகழ்ச்சியில்  தாத்தாவும் பேரனும் தமிழ் உலகைப் பாடிக்  கலக்கிக் கொண்டிருக்கின்றனர்.  

இன்று உல்கினர் அனைவரும் பேசுவது:  ஒரு  தாத்தா நினைத்தால்  உலகப்புகழ் பெறுமளவுக்கு ஒரு பேரனை நல்லதொரு பாடகனாக உருவாக்க முடியும் என்பது தான். இந்தப் பேரனைப் பார்த்த பிறகு அவன் பாடல்களைக்   கேட்ட பிறகு யார் தான் அதனை மறுக்க முடியும்?

தாத்தாவுக்குச் சங்கீதம் தெரியாது. முறையான சங்கீதப்பயிற்சி இல்லை. பயிற்சி பெறவும் வழியில்லை.  ஏதோ அவருக்குத் தெரிந்த பாடல்களைப் பாடத் தெரியும் என்பதைத்தவிர எந்த ஒரு வித்துவானிடமும்  சங்கீதம் கற்றதில்லை. எல்லாமே சுயம்புவாகவே கற்றுக்கொண்டது தான்.

ஏதோ  சுயம்புவாகக் கற்றுக் கொண்ட அந்தக்கலையை  பேரனும் கற்றுக்கொண்டு பாட வேண்டும்  என்று நினைத்துத்தான்  அவ்னுக்கு அவரே பயிற்சி அளித்திருக்கிறார்.  ஆமாம், எல்லாமே கசடறக்கற்று பின்னர் தான் பயிற்சி அளிக்க வேண்டும் என்றால் அதற்கு வழியில்லை. தெரிந்ததை வைத்து  பேரனைப் பெரிய பாடகனாகவே ஆக்கிவிட்டார். அது தான் தாத்தாவின் பலம். யாரையும் எதிர்ப்பார்க்கவில்லை. என்ன தெரிந்ததோ, தெரிந்ததைச் சொல்லிக் கொடுப்போம்  என்னும் தன்னம்பிக்கை தான்  அவரது  ஆற்றல்.

நமக்கு நல்லதொரு பாடத்தைக் கொடுத்திருக்கிறார்  தாத்தா.  எந்தக் கலையும் சரி பூரணமாகக் கற்ற பின்னரே பிறருக்குக் கற்றுக் கொடுக்க வேண்டுமென்றால்  எதுவும் நடக்காது.  முதலில் தெரிந்ததை கற்றுக் கொடுங்கள்.  பின்னர் அவர்களுக்கே ஆர்வம் வந்தவுடன் அவர்களே கற்றுக் கொள்வார்கள்.

மக்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். .  தாத்தாக்களிடம் நிறைய அனுபவங்கள் உண்டு. ஏதோ ஒரு வகையில்  ஒரு சில வித்தைகளை அவர்கள் தெரிந்து வைத்திருப்பார்கள். அதனை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்கிற துடிப்பு  அவர்களிடம் இருக்கும்.  அதனை முடக்கி விடாதீர்கள் என்பது தான் நமது வேண்டுகோள்.

திவினேஷ் நன்றாகப் படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும். சங்கீதக் கலையை  சிறப்பாகக் கற்று  சிறப்புற வேண்டும்  என்பதே நமது பிரார்த்தனை.

Saturday, 21 December 2024

Tik Tok நடவடிக்கை தேவையே!!


மேலவையில் செனட்டர் டத்தோ சிவராஜ் சந்திரன் நல்ல, மிகத்தேவையான கருத்தை  வலியுறுத்தியிருக்கிறார்.

இன்று டிக் டோக்கினால் பள்ளிக் குழந்தைகள் சீரழிகிறார்கள்  என்பது உண்மையே. அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளில் இறங்காவிட்டால்  நாடு நாசமாகிவிடும்.  பிள்ளைகளின் எதிர்காலம்  பெரும் பாதிப்புக்குள்ளாகும்.

டிக் டோக் நிறுவனத்தின் நலன் முக்கியம் அல்ல.  நாட்டின் எதிர்காலம் தான் இன்றைய தலைமுறை முழந்தைகள்.  அவர்கள் தான் வருங்காலத் தலைவர்கள்.   ஏற்கனவே  நமது கல்விமுறை கொள்ளையடிக்கும் கும்பலைத்தான்    உருவாக்கியிருக்கிறது!  அது போதாதென்று இப்போது டிக் டோக்!  இது மூளையையே மழுங்கடிக்கக் கூடியது. மூளையில்லாத் தலைவர்களைத்தான் உருவாக்கும்! அறிவுப் பஞ்சத்தைத்தான்  ஏற்படுத்தும்.  நாட்டிற்குப் பயன் தராதவை, மக்களுக்குப் பயன் தராதவை  என்றால்  அது நமக்கு வேண்டாம்.

இந்த நேரத்தில் ஒன்றை நாம் சொல்லித்தான் ஆக வேண்டும்.  நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள்  கொண்டு வரமுடியவில்லை  என்றால் மிகக் கடுமையான நடவடிக்கை தேவையே.  அதனை நாம் விட்டுக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை.  பாதிப்பு ஏற்படுகிற நிலைமை என்றால்  பதினாறு வயதிற்கு உட்பட்டவர்கள்  பயன்படுத்தாதபடி  தடை செய்ய வேண்டும்.   வேறு வழியில்லை.

டிக் டோக் சரியாகப் பயன்படுத்தினால்  அதனால் நமக்கு நல்ல பல பயன்கள் உண்டு.  ஆனால் பெரியவர்களோ, சிறியவர்களோ  இப்போது எல்லாருமே தவறாகப் பயன்படுத்துவதைத் தான் நாம் காண்கிறோம்.  அதனை வைத்து பலர் பல தொழில்களை வெற்றிகரமாகச்  செய்து கொண்டிருக்கின்றனர்.  ஒரு கூட்டம் அவர்களை வீழ்த்துவதற்குப் படாதபாடு படுகின்றனர்!  எல்லாவற்றிலுமே போட்டி பொறாமை.

எப்படியோ  பள்ளிக்குழந்தைகளின் எதிர்காலம் முக்கியம் என்பதால்  அரசாங்கம் இந்த டிக் டோக் விஷயத்தில்  கவனமாக இருக்க வேண்டும் என்பதே நமது  வேண்டுகோள்.


Friday, 20 December 2024

பகுத்தறிவு கருத்தரங்கு தேவையா?

                                       பினாங்கு இந்து அமைப்பினர்

 வருகிற சனிக்கிழமை  (21.12.24) நடைபெறுகின்ற பன்னாட்டுப் பகுத்தறிவு கருத்தரங்கம்  .தேவையா என்பதைச் சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும். 

தமிழ் நாட்டில் தான் என்னன்னவோ  சொல்லி தமிழர்களை வாழ விடாமல்  செய்கிறீர்கள் என்றால் இங்கேயும் அதைச் செய்ய வேண்டுமா என்று யோசித்துப் பாருங்கள்.  இந்தப் பகுத்தறிவு சிங்கங்களால்  எதுவும் ஆகப்போவதில்லை.

முதலில் தமிழ் நாட்டில் சாதிவெறியை ஒழித்து விட்டீர்களா?  சாதியை வளர்த்தவர்களே நீங்கள் தானே.  உங்களால் எந்த சாதியை ஒழிக்க முடிந்தது?  சாதியை வளர்த்துக் கொண்டே  சாதியை ஒழித்து விட்டோம் என்று நீங்களே சொல்லிக்  கொள்கிறீர்கள்.  சாதியை ஒழித்துவிட்டோம் என்று சொல்லி  தமிழ் நாட்டை,  தமிழன் கையிலிருந்து அபகரித்துக் கொண்டீர்கள்.  இன்னும் தமிழன் தலையில் மிளகாய் அரைக்க வேண்டுமா?

தம்பிகளா! உங்கள் பகுத்தறிவைக்   காட்டுவதற்கு தமிழன் தான் அகப்பட்டானா?   தமிழனை இளிச்சவாயன் என்றே முடிவுக்கட்டி விட்டீர்களா? ஏன் தெலுங்கர், மலயாளி - இவர்கள் எல்லாம்  எங்கே போனார்கள்?  அங்கே போய் உங்கள் பகுத்தறிவைக் காட்ட வேண்டியது தான?   ஏன் நாயுடு, ரெட்டி,  நாயர், மேனன் - இவர்கள் எல்லாம் பகுத்தறிவுவாதிகளாக  மாறிவிட்டார்களா?

இந்தப் பகுத்தறிவு கருத்தரங்கத்திற்கு  - தமிழர்களைப் பகுத்தறிவாளர்களாக மாற்ற  - எத்தனை  நாயுடுகள், ரெட்டிகள், நாயர்கள், மேனன்கள்   தமிழ் இனத்திற்குத்    தலைமை தாங்க, உலக நாடுகளிலிருந்து  வரப்போகிறார்கள்?  அதையும் சொல்லிவிடுங்கள்.

உங்களின் பகுத்தறிவால் தமிழ் நாட்டில் தமிழனுக்குத்தான் தலை குனிவு. இங்கே என்ன தான் உங்களுக்கு  வேண்டும்?  பொருளியல் முன்னேற்றம் தான்  எங்களுக்குத் தேவை.  அதனைத் தமிழ் நாட்டில் உங்களால் கொடுக்க முடியவில்லை.  இங்கே முடியுமா?


Thursday, 19 December 2024

இப்படியும் ஒரு நம்பிக்கையா!

என்ன தான் மனிதன்  'நாகரிகமடைந்து விட்டோம்'  என்று சொல்லிக் கொண்டாலும்  அவனிடம்  ஏதோ ஒரு மூட நம்பிக்கையாவது  இருக்கத்தான் செய்யும்.   இதில் கருப்பன் , வெள்ளையன், வெங்காயம்  என்கிற பாகுபாடு எல்லாம் இல்லை; அனைவரும் சமம்!

இந்த குறிப்பிட்ட சம்பவம் வட இந்தியா,  சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்தது. குழந்தை பாக்கியம் இல்லாத ஒரு நபர், யாரோ ஒரு மந்திரவாதி  சொன்னார்  என்பதற்காக உயிருள்ள  கோழிக்குஞ்சு ஒன்றினை  அப்படியே விழுங்கியிருக்கிறார்.   அது மேலேயும் போக முடியாமல், கீழேயும் இறங்க முடியாமல், தொண்டையில் மாட்டிக்கொண்டு,   அந்த மனிதரை மூச்சுவிடாதபடி படாதபாடுபட வைத்து அவருடைய உயிரையே போக்கிவிட்டது. 

மரணமடைந்த முப்பத்தைந்து வயதான ஆனந்த் யாதவ்  என்னும் பெயர் கொண்ட அந்நபரை உடற்கூறாய்வு  செய்தபோது  தான் அவர் தொண்டையில் கோழிக்குஞ்சு ஒன்று  உயிரோடு சிக்கிக் கொண்டிருப்பது  மருத்துவர்களை  அதிர்ச்சியடையச் செய்தது.  

மருத்துவர்களுக்கு முதலிலேயே தெரிந்திருந்தால்  ஒருவேளை அந்த மனிதர் காப்பாற்றப்பட்டிருக்கலாம்.  ஆனால்   மருத்துவமனைக்குப் போகும்போதே  அவர் சடலமாகத்தான்  கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். கோழிக்குஞ்சாவது காப்பாற்றப்பட்டதே  என்று திருப்தியடைய வேண்டியதுதான்! 

மருத்துவம், புதிய கண்டுபிடிப்புகள்  என்று எத்தனையோ ஒவ்வொரு நாளும் வெளியாகிக் கொண்டு தான் இருக்கின்றன.  சாதாரண மனிதர்களிடம் போய் சேருவதில்லை  என்கிற குறை இருந்தாலும்  இப்போதெல்லாம் அதுவும் குறைந்து பல தகவல்கள் ஊடகங்கள் மூலம் வெளியாக்கப்படுகின்றன.  தேவை என்றால் தேடத்தானே செய்கின்றோம்.

ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் மந்திரவாதிகளை மட்டும்  நம்பாதீர்கள். ஜோசியர் சொன்னார், போமோ சொன்னார்,  அவர் சொன்னார் இவர் சொன்னார் என்பதை நம்பாமல் , குறிப்பாக குழந்தை பேறு போன்ற விஷயங்களில்,   மருத்துவரை மட்டும் நம்புங்கள் என்று மட்டும் தான் நாம் ஆலோசனை  கூற முடியும்.

நம்பிக்கை வேண்டும் தான் ஆனால் இது போன்ற குருட்டு நம்பிக்கை  வேண்டவே வேண்டாம்.


Wednesday, 18 December 2024

சரியான அபராதம் தான்!

மனிதர்கள் செய்யும் கொடுமைகளுக்கு அளவே இல்லை. அது யானைகளாக இருந்தாலும் சரி பூனைகளாக இருந்தாலும் சரி  அவைகளைத் துன்புறுத்துவது  மனிதர்களுக்குக் கைவந்த கலையாகிவிட்டது!

அவர்கள் துன்புறுத்தாத மிருகங்களே கிடையாது.  அட! இந்த பூனைகள் அப்படி என்ன தான் செய்துவிட்டன?  அவைகள் மனிதர்களுடன் விளையாடும் தன்மை கொண்டவை.  நன்கு பழக்கப்படுத்தினால் பூனைகள் மனிதருடன் கொஞ்சம், கெஞ்சும்  எல்லாமே செய்யும்.

அப்படிப்பட்ட தன்மை கொண்ட பூனைகள்  எப்படியெல்லாம் துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றன என்று பாருங்கள். மேலே படத்தைப் பாருங்கள்.  ஒரு மனிதர் - மனிதர் என்று சொல்லவே அருகதையற்றவர் - அந்தப் பூனையை கழுத்தில், கட்டி,  தரையோசு தரையாக  இழுத்துக் கொண்டு போவதைப் பார்க்கும் போது  மனம் கசிந்து போகிறது.

இது போன்ற  ஜென்மங்கள் எல்லாம் பூனை  வளர்க்க வேண்டும்  என்று யார் கட்டாயப்படுத்தினார்கள்?   அது பூனை தான். ஆனால் அது துன்புறுவதைப் பார்த்து  நாம் என்ன சந்தோஷப்பட முடியுமா?  அது மிருகம் தான். ஆனால் வலி  என்பது அதுக்கும் இருக்கத்தானே  செய்யும்?

ஒன்று மட்டும் உறுதி. . இங்கு  ஹீரோ என்றால் அது நீதிமன்றம் தான்.  பாராட்டலாம்.  இனி யாரும் செய்யத் தயங்கும் அளவுக்குத் தண்டனைக் கொடுக்கப்பட்டிருக்கிறது.   ஆமாம், தண்டனையாக ரிங்கிட் 10,000 வெள்ளி   அபராதம் செலுத்தும்படி நீதிமன்றம் கட்டளையிட்டிருக்கிறது. 10,000 வெள்ளி  என்பது பெரிய தொகை தானே?  இது போன்று அபராதத்தை  மிகைப்படுத்தினால்  இனி யாரும் இது போன்ற செயல்களில் ஈடுபடமாட்டார்கள்.  ஆனால் இது பூனைக்கு மட்டும் என்பதாக இருக்கக் கூடாது நாய்களுக்கும் சேர்த்துத்தான் தண்டனைகள் இருக்க வேண்டும்.

வேறுவழி இல்லை. ஒவ்வொன்றையும் நாம் சாதாரணமாக  எடுத்துக் கொள்கிறோம்.  தண்டனை, அபராதம் எல்லாம் கடுமையாக இல்லையென்றால்  அவனவன்  சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்வான்.

 இனி மேலாவது பிராணிகள் துன்புறுத்துவது குறைகிறதா என்று  பார்ப்போம்

Tuesday, 17 December 2024

எனக்குச் சம்பளம் வேண்டாம்!

நமது நாடாளுமன்ற உறுப்பினர்களில் பிரதமர் அன்வார் சம்பளம் வாங்குவதில்லை என்பதை அன்றே அறிவித்துவிட்டார். அதே போல பிரதமரைப் பின்பற்றி  டத்தோஸ்ரீ ரமணன் அவர்களும் தானும் சம்பளம் வாங்கப்போவதில்லை  என்பதையும்  சொல்லிவிட்டார்.

 மற்றபடி வேறு எந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் சம்பளம் இல்லாமல் நாங்கள் வேலை செய்யத்தயார் என்று சொல்ல முன்வரவில்லை.  அதற்கான பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.  மலேசியர்களில் பலர்  ஒவ்வொரு மாதமும் வாங்கிய பல்வேறு பொருள்களுக்கு மாதாமாதம்  மாதத்தவணை கட்டுபவர்களாகத்தான் இருக்கிறோம். நமது நாடாளுமன்ற உறுப்பினர்களும் அப்படித்தான் இருக்க வேண்டும்.  அவர்கள் மட்டும் வேறு விதமாகவா வாழப் போகிறார்கள்?

முதலில் ரமணன் அவர்களை வாழ்த்துகிறோம். அவருக்கு ஏதேனும் குடும்ப வருமானம் வரலாம்.  ஆனால் ரமணன் அவர்களுக்கு ஒரு சில ஆலோசனைகளை வழங்குவது நமது கடமை.  நீங்கள் உங்களுக்கான சம்பளம் வாங்குவதில்லை என்பதைப் பொதுமக்கள் பார்வையில்   யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளப் போவதில்லை.  அவர்களுக்கு அதனால்  எந்தப் பயனுமில்லை.  உங்கள் தியாகத்தை அலட்சியப் படுத்துபவர்கள் தான் அதிகம் இருப்பார்கள்.  

மக்களைப் பொறுத்தவரை  ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக  நீங்கள் செய்த, செய்கின்ற சேவை என்ன என்பது தான் முதலில் நிற்கும். அதனை நீங்கள் செம்மயாகவே செய்கிறீர்கள் என்பது  தான்  மக்கள் மத்தியில் உங்களைப்பற்றியான கருத்து நிலவுகிறது. அதனைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டுமானால்  நீங்கள் உங்கள் பயணத்தை  இப்போது போன்றே  நல்ல முறையில் தொடர வேண்டும்.

இந்தியர்களில் பெரும்பாலானோர் தொழில் செய்ய கடன் வேண்டும் என்பது  அவர்களின் நீண்டநாள் கோரிக்கை.  பார்க்கப்போனால் அவர்களில் பெரும்பாலானோர்  சிறு தொழிலுக்கான  உதவிகளை எதிர்ப்பாக்கின்றனர். பெருந்தொழிலில் உள்ளவர்கள் பெரும் கடன் உதவிகளை எதிர்பார்ப்பார்கள்.  அவர்களுக்கும் உதவ வேண்டும். இத்தனை ஆண்டுகளாக எந்த உதவியும் யாருக்கும்  கிடைக்கவில்லை.  நீங்கள் வந்த பிறகுதான் கடனுதவி  கிடைக்கிறது  என்பது பொதுவான அபிப்பிராயம்.

நீங்கள் தொடர்ந்து உங்கள் பணிகளைப் பொறுப்போடு செய்ய வேண்டும்  என்பது தான் நாங்கள் உங்களிடமிருந்து எதிர்பார்ப்பது. சம்பளம் வாங்குகிறீர்களோ வாங்கவில்லையோ அதனை யாரும் லட்சியம் செய்யப்போவதில்லை. உங்கள் பணி மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

உங்கள் பணி தொடர வாழ்த்துகள்!

Monday, 16 December 2024

அப்பாடா! கொஞ்சம் ஆறுதலடையலாம்!

நாலாபக்கமும் அடி உதை விழுந்தபிறகுதான்  மித்ரா கைகால்களை ஆட்டத் தொடங்கியுள்ளது!   இத்தனை ஆண்டுகள்  இந்தியர்களிடமிருந்து  அந்நியப்பட்டுக் கிடந்த மித்ரா  இப்போதாவது  விழித்தெழுந்ததே என்பதில் நமக்கும்  மகிழ்ச்சியே!

இந்த ஆண்டு மருத்துவ படிப்புக்காக ஐம்பது இந்திய மாணவர்களுக்கு  வாய்ப்புகள் வழங்க  பெர்டானா பல்கலைக்கழகமும்  மித்ராவும்  ஒப்பந்தம் செய்தன. ஐம்பது மாணவர்களில் பத்து மாணவர்களுக்கு முழு உபகார சம்பளமும் மற்றும் ஏனைய நாற்பது  மாணவர்களுக்குப் பகுதி  உபகார சம்பளமும் வழங்க  ஒப்புதல் வழங்கப்பட்டன.  அத்தோடு பகுதி உபகார சம்பளம் பெறும் மாணவர்களுக்கு PTPTN  கடனுதவியும் செய்து தரப்படும்.

இந்த அறிவிப்பு என்பதே  தாமதமாக வந்தது தான். விண்ணப்பம் செய்யும் கடைசி நாள் 17.12.2024.  தாமதமென்றாலும் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு  இந்த செய்தி உடனடியாகக் கிடைத்திருக்கும்  என நம்பலாம்.

இந்த செய்தியை நல்ல செய்தியாகவே நாம்  பார்க்கிறோம். ஓரளவு   மித்ரா- இந்தியர் உருமாற்றுத்திட்டத்தில் - அக்கறை எடுக்க ஆரம்பித்திருக்கிறது என்று நம்மால் உணர முடிகிறது.  பி40 மக்களுக்காகவே இந்தத் திட்டம்  உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தியர்களைப் பொறுத்தவரை பெரும்பாலானோர் பி40 யின் கீழ்தான்  வருவார்கள். அதுவும் கொரோனா பெருந்தொற்றுக்குப் பின்னர்  பலர் பி40 க்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

வருகின்ற சில செய்திகளைப் பார்க்கின்ற போது  இந்தத் திட்டத்திற்குப் போதுமான ஆதரவு கிடைக்கவில்லை என்கிற செய்திகள் வெளியாகின்றன.  ஆனால் அதற்கான காரணம்  தாமதமாக செய்தி வெளியானது தான்.  இது முதலாண்டு என்பதால் தான் இந்த சுணக்கம். வருகிற ஆண்டுகளில்  தேவைகள் இன்னும் அதிகமாகவே இருக்கும்.

எப்படியோ நல்லதே நடக்க வேண்டும். இறைவனைப் பிரார்த்திப்போம்.

Sunday, 15 December 2024

இது சுற்றுலா! இன விவகாரம் அல்ல!

   
                                              Saloma Bridge, Kuala Lumpur
சுற்றுலாத்துறை என்றால்  மற்ற துறைகளைப் போல யார் வேண்டுமானலும் அமைச்சர் ஆகலாம் என்று சொல்ல முடியாது.

அந்தத் துறையைப் பொறுத்தவரை சீனர்கள் தான் பொருத்தமானவர்கள்  என்பது  தான் அமைச்சரவையின் முடிவு. அதனால் தான் இப்போதைய சுற்றுலா அமைச்சர்  டத்தோஸ்ரீ  தியோங் கிங் சிங்  அந்தப் பதவியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்.  சமீபகாலமாக அமைச்சர் தியோங் பல வகைகளில்  தாக்குதல்களுக்கு  உள்ளாகியிருக்கிறார்.  

உண்மையைச் சொல்லப் போனால் தாக்குதல்களை ஏற்படுத்துபவர்கள்  அவருடைய  சக அமைச்சர்கள் தான்.  அவர்களுடைய எண்ணங்கள் எல்லாம் ஏதோ ஒரு இன விவகாரம் போன்ற  ஒரு தோற்றத்தை  ஏற்படுத்துகின்றனர்!  நிறைய சீனப் பயணிகள் நமது நாட்டிற்குள் வருகிறார்கள் என்றால்  அதனை சாமான்யமாகக் கருத முடியாது. அதற்கு நிறைய வேலைகள் செய்ய வேண்டும்.  சுற்றுலா அமைச்சர் அதனைச் செய்கின்றார். 

இன்றைய சீனா உலகளவில் பணக்காரர் நாடு  என்று பெயர் எடுத்திருக்கிறது. அதில் இரகசியம் ஒன்றுமில்லை. உண்மையைச் சொன்னால் பல நாடுகள் அவர்கள் கையில் தான்  இருக்கின்றன. உதாரணம் ஸ்ரீலங்கா. அது போதும். இன்று அலகளவில் சீன நாட்டவர்கள் தான் கையில் பணம் புரளும் மனிதர்களாக  உலகை வலம் வருகின்றனர். சீன சுற்றுப்பயணிகளுக்குத்தான் பல நாடுகள்  வலை வீசுகின்றன!  அந்த வகையில் நமது  நாட்டின் சுற்றுலா அமைச்சர்  சீனப் பயணிகளை நமது நாட்டிற்குள் கொண்டுவருவதில் வெற்றி பெற்றிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். இதற்காக அவரை நாம் பாராட்ட வேண்டும்.  ஆனால் நடப்பதோ அவர் மீது காழ்ப்புணர்ச்சியைக்  கொட்டுகின்றனர்.

நாடு வெளிநாட்டுப் பயணிகளை நிறையவே  எதிர்பார்க்கின்றது.  காரணம் சுற்றுலா நாட்டின் வளர்ச்சிக்கு மிகத் தேவை. அவர்கள் நாட்டில் செலவளிக்கும் ஒவ்வொரு காசும்  நாட்டின் வளர்ச்சி என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.  சீன நாட்டின் பயணிகள் நாட்டிற்கு வருகை தருகிறார்கள் என்றால் அது அமைச்சரின்  தனித்திறன். அதனை பாராட்டாமல்  அவர் மீது புழுதிவாரித் தூற்றுவது  முட்டாள்தனம்! 

இந்த அரைகுறைகள் திருந்த வேண்டும் என்பது தான் நமது எதிர்ப்பார்ப்பு!

Saturday, 14 December 2024

சிறையிலிருந்தே பி.எச்.டி. பட்டம் பெற்றார்!

                வணிகத்துறையில் முனைவர் பட்டம் பெற்ற முராட்

எத்தனையோ ஆண்டுகளாக,  அதாவது வெள்ளைக்காரன் காலத்திலிருந்தே, நாட்டில் சிறைகள் உள்ளன.  ஆனால் இத்தனை ஆண்டுகாலம் இல்லாத சிறப்பு  சிறைக்கைதி ஒருவருக்கு  இந்த ஆண்டு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

14 வயதில் செய்த ஒரு கொலை குற்றத்திற்காக  போதை பித்தர்களுக்கான காஜாங் சிறைசாலையின் மறுவாழ்வு மையத்தில் கடந்த 23 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த வந்த  முராட் என்னும் அந்தக் கைதி இன்று விடுதலை செய்யப்பட்டார்.  சிலாங்கூர் சுல்தானின் பிறந்த நாளன்று  அரச மன்னிப்பு வழங்கப்பட்டு அவர்  விடுதலையானார்.

சிறையில் இருந்த காலத்தில்  அவரின் சாதனை தான் என்ன? அவர் சிறையில் இருந்தவாரே முதலில் எஸ்.பி.எம்., டிப்ளோமா கல்வி, இளங்கலை, முதுகலை  முடித்த பின்னர்  பி.எச்.டி. என்னும் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்.  இதனை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள இயலாது.  சிறையில் இருந்து கொண்டே பல ஆண்டுகள் கல்வி மீதான உழைப்பைப் போட்டு  அதன் மூலம் இத்தகைய சாதனையை அவர் புரிந்திருக்கிறார்.   கொலைக் குற்றச்சாட்டு அவர் மீது இருந்தாலும் அவர் கல்வி பயில, திருந்தி வாழ, சிறைத்துறையும்  அவருக்கு நல்ல ஒத்துழப்பைக் கொடுத்து அவரை  இப்படி ஒரு நிலைக்கு உயர்த்தியிருக்கிறது.  நல்ல முயற்சி. பாராட்டத்தான் வேண்டும்.

மலேசிய சிறை வரலாற்றில் இப்படி ஒரு நிகழ்வு நிகழ்ந்திருப்பது  இதுவே முதல் முறை. குறைவான அளவில்  ஓரிருவர் கற்றிருக்கலாம் ஆனால் முனைவர் பட்டம் பெறும் அளவுக்கு யாரும் முனைப்புக் காட்டியதில்லை. அந்த வகையில் இப்படி ஒரு முயற்சியை மேற்கொண்டவர் இந்த மனிதர் முராட் ஆகத்தான் இருக்க முடியும்.

சின்னஞ்சிறு வயதில் இப்படி ஒரு சூழலில் சிக்கிக்கொண்ட முராட் அதனையே மாற்றி சாதனையாளராக தன்னை மாற்றிக் கொண்டார் என்பது பெருமைக்குரிய செயல் என்பதில் சந்தேகமில்லை. 

இதில் நமக்குக் கிடைக்கும் பாடம் தான் என்ன?  எந்த மூலை முடுக்குகளில் இருந்தாலும் கல்வி ஒன்று தான் நமது ஆயுதம். கல்வி இருந்தால் பல கதவுகள் நமக்காகத் திறக்கும். அதில் பெண் கல்வி இன்னும் முக்கியம். ஒரு குடும்பத்தின் அடுத்தக்கட்ட உயர்வுக்குக்  கல்வியில் பெணகளின் பங்கு என்பது மிகவும் முக்கியம்.

இதோ முராட் சிறைக்கதவுகளையெல்லாம்  உடைத்தெறிந்துவிட்டு  வெளியே வந்துவிட்டார். அதற்குச்  சிறையில் இருந்து கொண்டே  அவர்  பெற்ற  கல்வி தான்  வழிவகுத்தது!  வாழ்க வளமுடன்!



Friday, 13 December 2024

முக்கிய பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை!

ஆசிரியர் பற்றாக்குறை என்றால் நாம் யாரைக் குற்றம் சொல்வோம்? பொது மக்களாகிய நம் கண்களுக்குப் பளிச்சென தெரிபவர்கள் கல்வி அமைச்சின் அதிகாரிகள் தான்.  காரணம் அவர்கள் தான் அதன் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்.

குறிப்பிட்ட சில பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை என்றால் ஏற்கனவே அவர்கள் தயார் நிலையில் இருந்திருக்க வேண்டும்.  அதெப்படி அவர்களுக்குத் தெரியாமல் போகும்?  அதற்குத்தானே கல்வி அமைச்சு  என்று ஒன்று இயங்கிக் கொண்டிருக்கிறது?

இன்று பற்றாக்குறை என்றால் அன்று அவர்கள் வேலையை அவர்கள் ஒழுங்காகச் செய்யவில்லை என்று பொருள். அதுமட்டும் அல்ல. அவர்கள் வேலை என்னவேன்றே தெரியாமல் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தான் நாம் நினைக்க வேண்டியுள்ளது.

பொதுவாகவே அரசு ஊழியர்களுக்கு அவர்கள் வேலை  என்ன என்பதே அவர்களுக்குத் தெரியாமல் இருக்கின்றனர் என்று தான் சொல்ல வேண்டும்.  அரசாங்கத்தில் ஏதாவது வேலை ஆகவேண்டுமானால்  அது உடனடியாக நடக்கக்கூடிய வாய்ப்பே இல்லை.  இது சரியில்லை  அது சரியில்லை என்று இழுத்தடிக்கும் போக்கு அதிகளவில் உள்ளது.  அதற்குக் காரணம் அவர்களுக்கே அந்த வேலை தெரியாத போது அதனை அவர்கள் மக்கள் பக்கம்  திருப்பி விடுகின்றனர்!

ஆனால் கல்வி அமைச்சு நிலைமை அப்படியல்ல.   மக்களுடனான தொடர்பு அவர்களுக்குக்  குறைவு.   கல்வி அமைச்சர் இது போன்ற செய்திகளை - ஆசிரியர் பாற்றாகுறை - முக்கிய பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை - என்று சொல்லுவதே  மிகக் கேவலமான செயல்.  அப்படியென்றால் கல்வி அமைச்சுக்கு ஏன்  அத்தனை பணியாட்கள் என்று தான் கேட்க வேண்டியுள்ளது.

ஒன்று மட்டும் உறுதி.  அரசாங்கம் தனது பணியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையே சரியில்லை என்பதில் கொஞ்சமேனும் ஐயமில்லை.  அதனால் தான் இத்தனை குளறுபடிகள்!  அரைகுறை படிப்பு எல்லாவகையிலும் மக்களைப் பாதிக்கிறது. அரைகுறை படிப்பு அரசியல்வாதிகளைத் தான் உருவாக்க முடியும். திறமையாளர்களை உருவாக்க முடியாது.  குறிப்பாக  தகுதிப்பெற்ற ஆசிரியர்களை உருவாக்க முடியாது.

என்ன செய்ய? காலத்தின் கோலம் என்பதைத்தவிர சொல்ல வேறொன்றுமில்லை!

 

Thursday, 12 December 2024

அரச மாநகரில் தூய்மைக்கேடா?

சிலாங்கூர் மாநில  அரச மாநகரில் தூய்மைக்கேடு பற்றி  தனது கவலையைத் தெரிவித்திருக்கிறார் சிலாங்கூர் சுல்தான் அவர்கள்.

யார் யாரோ குறை சொன்னார்கள் எதுவும் எடுபடவில்லை.  இப்போது ஆட்சியாளர்களே  களத்தில் இறங்கிவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது!  யார் சொன்னாலும் காதில் போட்டுக் கொள்ளாத  அரசாங்க ஊழியர்களை என்ன செய்ய முடியும்?

சில நாள்களுக்கு முன்னர் தான் சுல்தான் அவர்கள் பள்ளிவாசல்களில்,  வெள்ளிக்கிழமை தொழுகைகளில், சமய நல்லிணக்கத்தைக் கெடுக்கும் வகைகளில்  பேசாதீர்கள் என தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார். இப்போது மீண்டும் ஒரு பிரச்சனையைக் கிளப்பியிருக்கிறார் சுல்தான் அவர்கள்.  அரசு ஊழியர்கள் யார் பேசினாலும் காதில் போட்டுக் கொள்வதில்லை  என்று உறுதி பூண்டிருக்கிறார்கள்.  ஆனால் சுல்தான் குரலுக்குச் செவி சாய்க்காமல்  இருக்கச் முடியுமா?  அதனையும் பார்த்து விடுவோம்.

சிலாங்கூர்மாநிலம் மட்டும் அல்ல மலேசியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் சுத்தத்தோடும், சுகாதாரத்தோடும்  இருப்பது தான் குடிமக்களாகிய நமக்குப் பெருமை.   நகரங்கள் சுத்தமாக இருந்தால், சுகாதாரத்தோடு இருந்தால்  நமக்கு மட்டும் பெருமை அல்ல வெளிநாட்டவரும்  இந்நாட்டிற்கு வருகைதர விரும்புவார்கள்.  இன்றைய நிலை என்ன? நம் அருகில் இருக்கும் சிங்கப்பூரைத் தான் யார் வந்தாலும் பெருமையாகப் பேசுகிறார்கள்.  நம் பக்கத்தில் இருக்கும் நாட்டை அலட்சியப்படுத்துகிறோம்.

நாட்டின் தூய்மைக்காக  கோடிக்கணக்கில் பணம் கொடுத்து பெரும் படையையே வைத்திருக்கிறோம்.  அவர்களை வேலை செய்ய   வைக்க வேண்டும்.  அதைச் செய்யத்தான் யாராலும் முடியவில்லை.  சரி,  உள்ளூர்க்காரன் தான் வேலை செய்ய சோம்பறித்தனம் பண்ணுகிறான். என்றால் இப்போது வேலை செய்யும் வங்காளதேசியும் அதையே தான் பண்ணுகிறான்! எங்கே போய் முட்டிக்கொள்ள!

ஒன்று மட்டும் உறுதி. அவரவர் தனது கடமையைச் செய்ய வேண்டும். அது தான் இன்றைய பிரச்சனை. எல்லாரும் கடமையைச் செய்ய வேண்டும் என நினைக்கிறோமே தவிர  நாமும் தான் செய்ய வேண்டும் என்பதை மறந்து விடுகிறோம். இது ஒரு கூட்டு முயற்சி.  ஊர் சேர்ந்து தான் தேர் இழுக்க வேண்டும். அறிவுரை மற்றவருக்கு மட்டும் அல்ல நமக்குந்தான்!


Wednesday, 11 December 2024

வங்காள தேசத்தில் என்னதான் நடக்கிறது?

                                         வங்காள தேசத்தில் இனப்படுகொலையா?

வங்காள தேசத்தில் நடைபெறுவது  சிறுபான்மை  மக்களின் மீதான இனப்படுகொலை என வர்ணித்திருக்கிறார்  அந்நாட்டின் முன்னாள் பிரதமர்  ஷேக் ஹசினா வாஜிட்.  பாம்பின் கால் பாம்பு அறியும் என்பது போல வங்காளதேசத்தின் அரசியலை தனது நுனிவிரலில் வைத்திருப்பவர்  தான் ஷேக் ஹசினா.

அது இனப்படுகொலை தான் என அந்த முன்னாள் பிரதமர் உறுதிப்படுத்துகிறார்  என்றால் நிச்சமாக அது நூறு விழுக்காடு உண்மையாகத்தான் இருக்க முடியும். அந்த இனப்படுகொலைக்கு இலக்கான  அந்த சிறுபன்மையினர் யார்?  அவர்கள் இந்துக்களும் மற்றும் கிறிஸ்துவர்களும் அடங்கும்.  வங்காள தேசத்தின் மக்கள் தொகையின் 8  விழுக்காட்டினர் சிறுபான்மையினர்.

நமது நாடாளுமன்ற இந்து   சமயத்தைச் சார்ந்த  உறுப்பினர் ஒரு சிலர் ஒன்று சேர்ந்து  அவர்கள் நடத்திய  செய்தியாளர் கூட்டத்தில்  மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம்  இதன் தொடர்பில் குரல் கொடுக்க வேண்டும் என   வலியுறுத்தியிருக்கின்றனர்.

இங்கு நடப்பது இனப்படுகொலை மட்டும் அல்ல வழிபாட்டுத்தலங்களும்  உடைக்கப்படுகின்றன.  இது அரசாங்கத்தின் ஆதரவுடன்   அதாவது இடைக்கால  பிரதமர் முகமட் யூனூஸ்  ஆசியுடன் தான் நடப்பதாகக் கூறப்படுகின்றது.  இடைக்கால பிரதமர் போய் நிரந்தர பிரதமர்  என்கிற நிலை வரவேண்டுமானால்  இது போன்ற  மதக்கலவரங்கள் அரசியல்வாதிகளுக்குத் தேவைப்படுகின்றன.  ஏன் இந்துக்களின் தாயகமான  இந்தியாவிலும்  இது தான் நடந்து கொண்டிருக்கிறது!

இவர்களுடைய நோக்கமெல்லாம்  அரசியல்வாதிகள் வாழவேண்டுமானால்  மதக்கலவரங்கள்  அவசியம் தேவை என்பது தான்! நம்முடைய நோக்கமெல்லாம்  மதக்கலவரங்கள் என்கிற பெயரில் எதுவும் வேண்டாம். அது கண்டிக்கப்பட வேண்டும்.  அதற்குச் சரியான நபர் நமது பிரதமர் தான்.  இஸ்லாமிய உலகில் மேல் மட்டத்தில் இருப்பவர். அவர் குரல் எழுப்பும் போது அதற்குப் பலம் அதிகம்.

நமது நாடாளுமன்ற இந்து உறுப்பினர்களின் குரல் எடுபடுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.  பாலஸ்தீனத்திற்கு மட்டும் தான் குரல் கொடுப்பாரா? பார்ப்போம்!

                                     

Tuesday, 10 December 2024

வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்

உணவகத் துறையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு நல்லதொரு வாய்ப்பை வழங்கியிருக்கிறது  பிரபல India Gate நிறுவனம்.

உணவகத் துறையில் வருங்காலத்தை அமைத்துக் கொள்ள    விரும்புவோர்க்குப் பல சலுகைகளை அறிவித்திருக்கிறது India Gade.  ஆறு மாத பயிற்சியுடன், பயிற்சியில் போது மாத அலவன்ஸ் தோகையும், பயிற்சியின் போது தங்குவதற்கான இடவசதியும் அளிக்கப்படுமென அறிவித்திருக்கிறார்கள்.

இந்தப் பயிற்சியின் போது உணவகத்துறை, ஹோட்டல் துறை  ஆகியவற்றுக்கான  வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கிறது இந்தியா கேட். `உணவு பரிமாறுவதிலிருந்து உணவக உரிமையாளராக எட்டும் அளவுக்குப் பயிற்சிகள் அமைந்திருக்கும்.  சமையலறைப் பணியாளர் பின்னர்  தலைமைச் சமையல்காரர் போன்று உணவகத்துறை சார்ந்த அனைத்துப் பயிற்சிகளும் தரப்படும்.

பயிற்சிக்கு விண்ணப்பம்  செய்யும் மாணவர்கள் எஸ்.பி.எம். கல்வி கற்றவர்களாக  இருக்க வேண்டும்.  பயிற்சியின் முதல் கட்டமாக 50 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.  பயிற்சி முடிந்த பின்னர் சான்றிதழ்கள் வழங்கப்படும். இந்தியா கேட் நிறுவனத்தில் வேலை செய்ய விரும்புவோர் தொடர்ந்து நிறுவனத்திலேயே பணி புரியலாம். அதற்கான வாய்ப்புக்களும் உண்டு.

நம்முடைய ஆலோசனை  எல்லாம் எஸ்.பி.எம். வரை கல்வி கற்றவர்கள், உணவகத்துறையில்  விரும்பும் இளைஞர்கள்,  எந்தவித  தயக்கமுமின்றி இந்தப்பயிற்சிகளில் கலந்து கொள்ளலாம்.  கிடைக்கின்ற வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால்  வங்காளதேசிகள் நடத்தும் உணவகங்களுக்குத்தான் போக வேண்டி வரும்!

நம் இளைஞர்கள் ஏதாவது ஒரு துறையில் பயிற்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். எந்தவொரு பயிற்சியும் இல்லாமல்  வெறுமனே போனால் உங்களுக்கான சம்பளத்தில் கை வைப்பார்கள். உணவுத்துறை என்பது மிகவும் வேகமாக வளர்ந்து வருமொரு துறை.  வேலை செய்வது மட்டும் அல்ல, உரிமையாளராகவும் ஆக முடியும்.

தொடர்புக்கு: 012-4551930, 012-4311930,  012-7501930, மின்னஞ்சல்: jobs@indiagate.my அல்லது அவர்களின் India Gate  உணவகங்களைத் தொடர்பு கொள்ளலாம்.
 

Monday, 9 December 2024

இதுதான் மடானி அரசாங்கத்தின் கொள்கையா?

                                                        Malaysian Indian Students

இந்திய மாணவர்களுக்குக் கல்லூரிகளில்   குறைந்த அளவே இடங்கள் ஒதுக்கப்படுகின்றன  என்பதை இதோ கண்கூடாகக் காண்கிறோம்..

இது இன்று நேற்றல்ல காலங்காலமாக நடப்பவை தான்.  அன்று கோட்டையில் இருந்தவர்கள் ம.இ.கா.வினர். அனைத்தையும் கோட்டைவிட்டு  கொட்டாவி விடக்கூட நேரமில்லாமல் தூங்கிக் காலத்தைக் கழித்தனர்.  அவர்கள் தான் இப்போது மார்தட்டுகின்றனர்! காலத்தின் கொடுமை என்பதைத் தவிர சொல்ல வேறு என்ன?

செனட்டர்  டத்தோ சிவராஜ் கேட்ட கேள்விக்குச் சுகாதார அமைச்சு கொடுத்த பதில் நமக்கு அதிர்ச்சியை அளிக்கிறது.  மருத்துவ உதவியாளர் பயிற்சிக்கு விண்ணப்பம் செய்த இந்திய மாணவர்களின் எண்ணிக்கை  72208  பேர்.   ஆனால் அவர்களில் பயிற்சிக்கு எடுக்கப்பட்டோர் எண்ணிக்கை  71 பேர்   மட்டுமே என்பது  நிச்சயம் அதிர்ச்சி அளிக்கக்கூடிய  செய்தியாகத்தான் பார்க்கிறோம்.

இன்றைய நிலையில் இந்திய மாணவர்களுக்கு உயர்கல்விக் கூடங்களில்  இடங்கள் மறுக்கப்படுகின்றன  என்பது மட்டும் அல்ல அவர்கள் விரும்பும் துறைகளும் கொடுக்கப்படுவதில்லை.  அவர்களுக்குக் கொடுக்கப்படும் துறைகளும்   பெரும்பாலும்  டிப்ளோமா அளவுக்கு மட்டுமே.  இதோ மேலே குறிப்பிட்ட  மருத்துவ  உதவியாளர்  பயிற்சி என்பது மருத்துவருக்கான கல்வி அல்ல. அப்படியிருந்தும் உதவியாளர் பயிற்சிக்குக் கூட நமது மாணவர்கள்  ஒதுக்கப்படுகின்றனர்.

விண்ணப்பம் செய்த மாணவர்கள் 72,000 பேர் என்றால் இவர்கள் அனைவரும்  தகுதி இல்லாதவர்களா? இவர்களால் மெரிட், கோட்டா என்று எப்படிப் பார்த்தாலும் தடுப்புச் சுவர் பலமாக நிற்கிறது. உள்ளே நுழைய முடியவில்லை.  இதனிடையே உயர்கல்வி அமைச்சரும்  தனது பங்குக்கு மலாய் மாணவர்கள் மெரிட் அடிப்படையில் தான் சேர்க்கப்படுகிறார்கள் என்கிறார்!  அப்படியென்றால் இந்திய மாணவர்கள் நிலை என்ன?   இவர்கள் மெரிட், கோட்டா எதிலுமே வருவதில்லை!

மடானி அரசாங்கம் இந்தியர்களை வீழ்ச்சி நிலைக்குக் கொண்டு செல்கிறது   என்பதில் ஐயமில்லை. கல்வி வாய்ப்பு, வேலை வாய்ப்பு எதிலுமே முன்னேற வாய்ப்பில்லாமல்  தடை போடுவதாகத்தான் நமக்குத் தோன்றுகிறது. பிரதமர் அன்வார் இந்தியர்களையும் பூர்வகுடிகளின் நிலைக்கு  மாற்றிவிடுவார் போல் தோன்றுகிறது!

Sunday, 8 December 2024

MyKad தரவுகள் திருடப்பட்டனவா?






கள்ளச் சந்தைகளில்  பொது மக்களின் விபரங்கள் எப்படியெல்லாம் களவாடப்படுகின்றன என அறியும்போது நமக்கு வியப்பை அளிக்கிறது!

ஒன்றல்ல இரண்டல்ல பதினேழு மில்லியன் மலேசியர்களின் தரவுகள்  வெளியாக்கப்பட்டிருக்கின்றன.  

இந்தத் தரவுகள் எங்கிருந்து வெளியாகின்றன? பதில் சொல்ல வேண்டியவர்கள் மறுக்கின்றனர்.   தேசிய பதிவு இலாகா  அப்படியெல்லாம் வெளியாகக் கூடிய சாத்தியமில்லை என்று கூறுகிறது. அவர்களின் வேலையாட்கள் சொக்கத்தங்கம் என்று அவர்கள் நம்புகிறார்கள்.  சைபர் பாதுகாப்பு முகமையும்  அதையே தான் கூறுகின்றது.  ஆனாலும்  இது ஒரு பெரிய பிரச்சனை என்பதாக இரு தரப்பும் ஒப்புக்கொள்கின்றனர்.  ஒப்புக்கொண்டது மட்டும் அல்லாமல்  அதுபற்றி  உடனடியாக நடவடிக்கை  எடுக்க  களத்தில் இறங்கிவிட்டன.  காவல்துறையின் உதவியை  நாடியுள்ளன.

ஆனால் ஒன்றை மட்டும் என்னால் சொல்ல முடியும்.  எனது மகன் ஒருவனுடைய பெயர் எங்கேயும் கண்டுபிடிக்க முடியாது என்பது எனக்குத் தெரியும்.  ஆனால் இர்ண்டு மூன்று முறை அவனுக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. அது  FAKE Call  என்பது எனக்குத் தெரியும்.  காரணம் அதே எண்ணிலிருந்து எனக்கு இதற்கு முன்  அழைப்பு வந்து நான் அதனை நிராகரித்து விட்டேன்.  ஆனால் எப்படியோ கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர்களின் முயற்சியைக் கைவிடவில்லை!  இப்போது என மகனுக்கு அதனை மாற்றிவிட்டார்கள், அவ்வளவு தான்!  அவனுடைய பெயர் விபரங்கள்     எங்கியிருந்து பெறப்பட்டிருக்கும்?   ஒன்று தேசிய பதிவிலாகா மற்றொன்று வங்கிக்கணக்கிலிருந்து  அதாவது  பேங்க் நெகாரா மலேசியா.  வேறு வாய்ப்பில்லை.

இன்றைய நிலையில் மலேசியர்கள் பெரும் அளவில்  Fake  நிறுவனங்களினால் பாதிக்கப்படுகின்றனர்.  வாழ்நாள் சேமிப்புகளை அப்படியே  வழித்து எடுத்து விடுகிறார்கள். வேலை தருகிறோம் என்று சொல்லி  இளைஞர்களின் எதிர்காலத்தையே சிதைத்து விடுகின்றனர்.  பலப்பல மோசடிகள்!  காவல்துறையினரால் அவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை.  அவர்களின் கை தான் ஓங்கி நிற்கிறது!  எங்கிருந்து செயல்படுகிறார்கள் என்பதும் புரியவில்லை.

இப்போது அனைத்தும் காவல்துறையினரின் கையில்  ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன.  இன்னும் எத்தனை நாளைக்கு இவர்களின் அட்டூழியங்கள் தொடரும் என்று பார்ப்போம்.  அதுவரை எச்சரிக்கையாய் இருங்கள் என்பதைத்தவிர  வேறு என்ன சொல்ல?

Saturday, 7 December 2024

வெள்ளிக்கிழமை தொழுகைகளிலுமா?

வெள்ளிக்கிழமை தொழுகைகளில் பிற மதங்களை இழிவுபடுத்துவதைத் தவிர்க்க வேண்டுமென   சிலாங்கூர் சுல்தான் மீண்டும்  கடுமையான எச்சரிக்கை விடுத்திருக்கின்றார்.

சிலாங்கூர் சுல்தான் இதனை மீண்டும்  மீண்டும் வற்புறுத்துவதும்  ஆனால் சமய சொற்பொழிவார்கள் அதனை  மீண்டும் ,மீண்டும் மீறுவதும்  அது எப்படி என்பதை நம்மாலும் புரிந்து கொள்ள முடியவில்லை.

நாட்டின் ஆட்சியாளர் ஒருவர் நாட்டில் அமைதி நிலவ வேண்டும்;  சமயப் பிரச்சனைகள் எழக்கூடாது; மக்கள் சமாதானத்தோடு வாழ வேண்டும் என்கிற உயரிய நோக்கத்தோடு  சமயவாதிகளுக்கு  ஆலோசனைக்  கூறுகிறார்.  அறிவுரைக் கூறுகிறார்.  எதுவும் எடுபடவில்லை.

அப்படியென்றால்  இப்போது யார் பெரியவர் என்று  நினைக்கத் தோன்றுகிறது!  ஆட்சியாளர் சொல்வதை  சமயவாதிகள் கேட்கமாட்டார்களோ?  ஆட்சியாளர்களுக்கு மக்கள் நலன் தான் முக்கியம். நாட்டில், மாநிலங்களில் அமைதி என்பது முக்கியம்.  நாட்டின் சுபிட்சம் என்பது முக்கியம்.  நாட்டில் அமைதி நிலவினால்தான்  நாட்டின் முன்னேற்றம், வளர்ச்சி அனைத்தும் சிறப்பாக அமையும்.

ஆனால் சமய போதகர்களுக்கு நாட்டின் நலன் முக்கியமா என்றால் அங்கு தான் பிரச்சனை எழுகிறது. அதுவும் பல நாடுகளில் குழப்பங்களை ஏற்படுத்துபவர்களாகவே இருக்கின்றனர். அமைதியின்மைக்குக் காரணமானவர்களாகவே இருக்கின்றனர்.  அவர்கள் பெரும்பாலும் ஆட்சி அதிகாரங்களைப் பிடிக்க வேண்டும் என்கிற நோக்கத்தைக் கொண்டவர்களாகவே இருக்கின்றனர்.

சிலாங்கூர் சுல்தான் அவர்கள் நல்லதையே கூறியிருக்கிறார். அவருடைய கோபம் நியாயமானது. நாடு வளர்ச்சியை நோக்கி போகின்ற நேரத்தில்  தடைக்கற்களாக இருப்பவர்கள் சமயவாதிகள். இவர்களிடம் பிற்போக்குத்தனம்  அதிகம்.  இவர்கள் அரசாங்கத்தில் சம்பளம் வாங்கிகொண்டு வளர்ச்சிக்கு எதிராக இருப்பவர்கள். சம்பளம் இல்லையென்றால் இவர்கள் அனைவரும் வலைச் சுருட்டிக்கொண்டு தங்களது குடும்பத்துக்காக உழைக்க வேண்டி வரும்.

எப்படியோ சமயவாதிகளுக்கு நல்லதொரு எச்சரிக்கையை விடுத்திரார் சுல்தான் அவர்கள். நல்லதே நடக்க பிரார்த்தனைசெய்வோம்.

Friday, 6 December 2024

எகிறிய காய்கறி விலைகள்!

மழை எப்போது வரும், வெள்ளம் எப்போது வரும்  என்று ஒரு கூட்டம்  எப்போதும் எதிர்பார்த்துக்  கொண்டிருக்கும்.   அப்போது தான் பழைய விலைக்கு வாங்கிய காய்கறிகள் கூட புதிய விலையில்  விற்பதற்கு சந்தைக்கு வரும்.  அப்போது தான் அவர்களும் கொஞ்சம் அதிகமாகவே காசு பார்க்கலாம்.   ஆசை யாரை விட்டது?

யாரையும் குற்றம் சொல்லிப் பயனில்லை.  ஒருபக்கம் பற்றாக்குறை என்றால்  இன்னொரு பக்கம்  வியாபாரிகளுக்கு அதிக இலாபம் என்பது உள்ளே புகுந்து விடுகிறது!  எதுவும் புதிதல்ல. நாம் எல்லாவற்றுக்கும் பழக்கப்படுத்திக் கொண்டோம்.  வேறு வழியில்லை.

அப்போது தான்  ஒரு சிலருக்குப் போதிமரத்து ஞாபகம் வரும்.  வீட்டு முன் இரண்டு மூன்று காய்கறி செடிகளை நட்டுவைத்திருந்தால் கூட இந்த நேரத்தில்  நமக்கு உதவுமே  என்று!  நாம் எப்போதும் இப்படித்தான். இருக்கும் போது சட்டை செய்வதில்லை இல்லாத போது நாலாப்பக்கமும் கண்கள் அலையும்!  சொல்லிப் பயனில்லை.  இப்படியே நாம் பழக்கப்படுத்திக்  கொண்டோம்.

எந்தக் காலத்திலும், இது போன்ற நேரங்களில்,  நாம் பாடம் படிப்பதில்லை.  கையில் காசு இருக்கும் போது  படோடாபம் காட்டுவதும் காசு இல்லாத போது  அரசாங்கத்தைக் குறை சொல்லுவதும் நமக்குப் பழக்கமான ஒன்று!  நடப்பவை இயற்கைப் பேரிடர்.  யார் என்ன செய்ய முடியும்? நாம் தான், குறைந்தபட்சம், கொஞ்சமாவது, தயார் நிலையில் இருக்க வேண்டும்.

என்ன செய்யலாம்? வழக்கம் போல எல்லாரும் சொல்வது தான். இட வசதி இருந்தால் அதனை முழுமையாகப்  பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு சில காய்கறிகளை  நட்டு வையுங்கள்.  கஷ்ட நேரத்தில் அந்த செடிகள் நமக்குக் காய்கறிகளைக் கொடுத்து உதவும்.  பிரமாண்ட காய்கறித் தோட்டமாக இல்லையென்றாலும்  உங்கள் வீட்டுக்குத் தேவையான  ஓரளவு காய்கறிகளை  அது ஈடுசெய்யும்.

அரசாங்கத்தைக் குறை கூறுவதில் பயனில்லை.  யாரும் உதவப்போவதில்லை. நம் கையே நமக்கு உதவி. பிறர் கையை எதிர்பார்க்காதே என்பது தான் அதன் பொருள்.  விலைவாசி ஏற்றம் எல்லாரையும் தான் பாதிக்கிறது. நம்மை மட்டும் அல்ல.  அரசாங்கம்  செய்ய வேண்டிய வேலையைச் செய்யத்தான் செய்கிறது.  நம் பங்குக்கு நாம்  என்ன செய்கிறோம்?  நம் கடமையை நாம் செய்ய வேண்டும்.

எல்லாவற்றுக்கும் வழிகள் உண்டு. குறைகளையே சொல்லிக் கொண்டிருக்காமல்  நாம் என்ன செய்ய முடியும் என்பதை யோசியுப்கள்.

Thursday, 5 December 2024

யார் தருவார் இந்த அரியாசனம்?

                                                         திரு.ஆனந்த கிருஷ்ணன்
தமிழர்களுக்குப் பெருமைதரும் விதத்தில் உலகப் பணக்காரர் வரிசையில் இருந்தவர் தான் திரு ஆனந்த கிருஷ்ணன் அவர்கள். அவர் மலேசிய நாட்டின் முதல் பத்துப் பணக்காரர்களில்  ஒருவராக இருந்தவர். நீண்ட நாள்களாக இரண்டாம் நிலையிலிருந்து மூன்றாம்  நிலைக்குத் தள்ளப்பட்டவர். 

அவரின் இந்திய முதலீடுகள் அவரைப்  பின்னுக்குத் தள்ளிவிட்டது என்று சொல்லப்படுகிறது. இதெல்லாம் வர்த்தக உலலில் சகஜமான ஒன்று தான். நம் நாட்டில்  அவர் பெரும்பாலும் அஸ்ட்ரோ தொலைகாட்சி,  தொலைத் தொடர்பு நிறுவனமான மேக்சிஸ்  - இரண்டும் தான் அவருக்கு அடையாளமாக விளங்குகிறது.  ஆனால் அதைவிட பெரும் நிறுவனங்களையும் அவர் வெளிநாடுகளில் நடத்திவருகிறார்.

இவருடைய வாரிசுகளில் அவரது மகன் புத்த பிக்குவாக மாறிவிட்டார். அது நடந்துது சுமார்  முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர். அவருடைய இரண்டு பெண் வாரிசுகளைப்பற்றி  எந்த  செய்திகளும் இல்லை. அதனால் அவருடைய நிறுவனங்கள் எந்த திசையை நோக்கிச் செல்லும்  என்பதைப் பொறுத்திருந்து தான்  பார்க்க வேண்டும்.

நம்மைப்  பொறுத்தவரை நமது மலேசிய மண்ணில் அந்த இரண்டாவது அல்லது மூன்றாவது இடத்தை ஓரு தமிழரோ அல்லது ஓர் இந்தியரோ பிடிப்பதைத் தான் விரும்புகிறோம்     ஆனால் கண்ணுக்கு எட்டிய தூரம்  யாரும் அகப்படவில்லை!  இனி அது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது.

வர்த்தக உலகில் எதுவும் நடக்கலாம்.  கீழே இருப்பவர் மேலே போவதும்  மேலே இருப்பவர் தீடீரென  கீழே இறங்குவதும்  அது இயல்பாக நடக்கும் காரியம் தான்.  அதுவும் அரசியல் தொடர்பு  உள்ளவர்கள்  வெகு விரைவில்  கோட்டையைப் பிடித்து விடுவார்கள்.

ஒரு காலத்தில் சீனரோடு போட்டிப்போட முடியுமா என்று  பேசினார்கள். அப்படிப்பட்ட காலகட்டத்தில் மலேசிய பணக்காரர்களில் இரண்டாவது இடத்தில் இருந்தவர்  தான் ஆனந்த கிருஷ்ணன்.  ஆனால் இன்றைய காலகட்டம்  முழுமையாக சீனர்களின் ஆக்கிரமப்பில் இருக்கிறது. நம்மால் முடியுமா என்கிற நிலைமையில் தான் இருக்கிறோம். எதுவும் முடியும்! எதுவும் சாத்தியமே!

Wednesday, 4 December 2024

இது தான் சில்லறைத்தனம் என்பது!


 பினாங்கு மாநிலத்தின் முன்னாள்  துணை முதலமைச்சர்  பேராசிரியர் இராமசாமி  வெளிநாடு போவதற்குத்  தடை செய்யப்பட்டிருக்கிறார். அதற்கு முந்தைய வாரம் தான் அவர் தாய்லாந்து போய் வந்திருக்கிறார். அப்போது எந்தத் தடையும் அவருக்கு இருக்கவில்லை. அப்போது  எந்தக் குற்றச்சாட்டும் அவர் மீது சுமத்தப்படவில்லை.

அவர் இந்தோனேசிய, ஆச்சேயில் அவருக்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த  சமாதான விருது விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளதற்காக  பயணம் செய்யப்படவிருந்த நேரத்தில்  இந்த்த் தடை உத்தரவு, அதுவும் விமான நிலையத்தில், அவருக்கு அறிவிக்கப்பட்டிருப்பது  ஏன் என்பது நமக்குப் புரியவில்லை.

கோடிக்கணக்கில் அசாங்கத்தை ஏமாற்றியவர்கள் கூட வெளிநாடு போக  அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் பேராசிரியர் அப்படியெல்லாம்  ஏமாற்றியவர் என்று சொல்லுவதற்கு வழியில்லை.  அவர் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யக் கூடாது என்பதாக நீதிமன்றம் தடை விதிக்கவில்லை.

இந்தத் தடைவிதிப்புக்கு  யாரோ பின்னால் இருந்து செயல்படுகிறார்கள்  என்பதாகச் சொல்லப்படுகிறது,  அந்தப் 'பின்னால் இருப்பவர்கள்'  ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.  யார் இதைச் செய்திருந்தாலும் கெட்ட பெயர் வாங்குபவர் என்னவோ பிரதமர் அன்வார் தான்.  இந்திய சமூகம்  பிரதமர் அன்வார் மீது  நம்பிக்கை இழந்து வருகிறது  என்பது அனைவருக்கும் தெரியும்.  இந்த நேரத்தில் இது போன்ற சில்லறைத்தனமான  வேலைகள் எல்லாம்  பிரதமருக்குத் தான்  கெட்ட பெயரை வாங்கிதரும் என்பதை உணர வேண்டும்.

பேராசிரியர் இராமசாமி அவர்களைச் சிறுமைபடுத்த வேண்டும்  என்று நினைப்பவர்கள்  ஒன்றை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். அரசியல்வாதிகள் அவரை எதிரிகளாக நினைக்கலாம்.  ஆனால் அவர் தமிழர்களின் தலைவராகத்தான் கருதப்படுகிறார். என்ன தான் அவதூறுகளை அவர் மீது பரப்பினாலும்  அதனை யாரும் நம்பப் போவதில்லை.

பேராசிரியருக்கு அமைதிக்கான பரிசு பெறுவதில் யாருக்கோ குத்துகிறது, குடைகிறது  என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.

Tuesday, 3 December 2024

ஏன் இந்தப் பற்றாக்குறை?


 வேறு துறைகளில் பற்றாக்குறைகள் வரலாம்.  ஆனால் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை  எப்படி வரமுடியும் என்பது நமக்குப் புரியவில்லை.

அதற்குத்தான் கலவி அமைச்சு என்று ஒன்று இருந்துகொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.  அவர்களுக்குப் பள்ளி சம்பந்தமான அனைத்தும் தெரிந்திருக்க வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் எத்தனை ஆசிரியர்கள் ஒய்வு  பெறும் வயதை எட்டிவிட்டார்கள் அல்லது சீக்கிரமாகவே ஒய்வு பெற விண்ணப்பங்கள் செய்திருக்கிறார்கள்  அல்லது நோயின் காரணமாக வேலையை விடுகிறார்கள்  போன்ற அனைத்து விஷயங்களும்  கல்வி அமைச்சுக்கு அத்துப்படி.   காலியாகும் இடங்களை உடனடியாகப் பூர்த்தி செய்வது கலவி அமைச்சின் முக்கிய கடமை.

இது போன்ற காலியாகும் இடங்களுக்கு  ஆசிரியர்களைத் தயார் செய்வது கல்வி அமைச்சின் கையில் உள்ளது. கல்வி அமைச்சர் இந்த ஆண்டு இதுவரை சுமார் 14,000 ஆசிரியர் பணியில் சேர்க்கப்பட்டிருப்பதாகக் கூறியிருக்கிறார்.  தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கமோ  ஆசிரியர் பணிக்குச் சுமார்  20,000 காலி இடங்கள் இருப்பதாகக் கூறுகிறது.

எது சரி, எது தவறு என்று பொது மக்களுக்குத் தெரிய நியாயமில்லை. கல்வி அமைச்சு சொல்வது உண்மை என நாம் எடுத்துக் கொள்கிறோம். நம்முடைய கவலை எல்லாம் மாணவர்களின் கல்வி எந்த வகையிலும்  பாதிக்கப்படக் கூடாது  என்பது மட்டும் தான்.

இந்த நேரத்தில் ஒன்றைக் குறிப்பிட வேண்டும். காலியாக இருக்கும் இடங்களில்  தகுதியான ஆசிரியர்களை நியமிப்பதைவிட  பயிற்சி பெறாத தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் போக்கும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது.  அதனால் கல்வித்தரம் குறையுமோ என்கிற அச்சமும்  நமக்கு உண்டு. ஆனாலும் ஆசிரியர் பற்றாக்குறையைச் சமாளிக்க பயிற்சி பெறாத தற்காலிக ஆசிரியர்கள்  தான் கை கொடுக்கின்றனர் என்பதையும் மறந்துவிட முடியாது.

பற்றாக்குறைக்குக் கல்வி அமைச்சு தான் பொறுப்பு ஏற்க வேண்டும். கல்வித்துறையில் நடக்கும் நல்லது கெட்டது அனைத்துக்கும் கல்வி அமைச்சு தான் பதில் சொல்ல வேண்டும்.

எப்படியோ நல்லதே நடக்கட்டும்!

Monday, 2 December 2024

இனி குப்பைகளைப் பார்த்துக் கொட்டுங்கள்!

இனி குப்பைகளைப் பார்த்துக் கொட்டுங்கள்!   வருங்காலம், சென்றகாலம் போல் இருக்கப்போவதில்லை.

எங்கே வேண்டுமானாலும் குப்பைகளைக் கொட்டலாம், கேட்பார் யாருமில்லை,  நான் செய்வதைச் செய்வேன், எவன் கேட்பது?, போன்ற திமிரான பேச்சுக்களைப் பேசாமல், திமிராக நடந்து கொள்ளாமல், காரில் போகும் போது குப்பைகளைச் சும்மா தூக்கி எறிந்துவிட்டுச் செல்வேன் என்கிற நினைப்பையெல்லாம் ஒரு பக்கம் மூட்டைக்கட்டி வையுங்கள்.

வரப்போகிறது சட்டம். நமக்கு அது இன்னும் முழுமையாகத் தெரியவில்லை.  என்றாலும்  வருவதற்கு முன் இப்போதே உங்களுடைய  நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளுங்கள். பணத்தைக் கொடுத்து எதனையும் சாதித்து விடலாம்  என்கிற எண்ணத்தை  இப்போதே கைவிடுங்கள்.  காரணம் இந்த முறை இது கொஞ்சம்  கடுமையாகத்தான் இருக்கும்.

காரில் போகும் போது எதையோ தின்றுவிட்டு, பாதி சாப்பிட்டும் பாதி  சாப்பிடாமலும்  அதனை அப்படியே சாலைகளில் தூக்கி எறிவதும், சாலைகளை ஏதோ  குப்பைத் தொட்டிகளைப் போல பயன்படுத்துவதும்  அதை எப்படி பார்த்துக் கொண்டே இருப்பது?  மேல்நாடுகளில் இப்படி, அப்படி என்று கதை அளப்பவர்கள்  இங்கே வந்த பிறகு ஏன் அதனை இங்கே செயல்படுத்த முடிவதில்லை? 

நாம் எல்லாவற்றிலும் அலட்சியம் காட்டுகிறோம். குப்பைகளை அதற்கானத் தொட்டிகளில் கூடவா போட  அலட்சியம்?  வீடுகளில் குப்பை வேண்டாம்  என்று நினைத்து, கடைப்பிடிப்பது  நல்ல செயல் அதே போல வீட்டுக்கு வெளியேயும்  கடைப்பிடிப்பதும் கட்டாயம்.  அது பொது மக்களின் நலனுக்காக. நாய், பூனை,பறவைகள் நலனுக்காக.  எல்லாமே ஒன்றுக்கொன்று  சேர்ந்து தான் வாழ வேண்டியிருக்கிறது.

எப்படியோ சட்டம் வரப்போகிறது.  தண்டனை என்பது சமூக சேவை என்கிறார்கள்.  அது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.  சட்டம் நடைமுறைக்கு வரும் போது தான் தெரியவரும். அரசியல்வாதிகளின் பிள்ளைகளுக்கு எதுவும் சலுகைகள் இருக்கின்றனவா என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

குப்பைகள் இல்லா சாலைகளை இனி பார்க்கலாம். நம்புங்கள். 

Sunday, 1 December 2024

அதிலென்ன தரக்குறைவு?

பொதுவாக மலேசியாவில் 'கச்சாங் புத்தே' என்று சொல்லுகிறோம். அதனைத் தெரியாதவர்கள் யாரும் இல்லை.  ஏன்,  அதனைச் சாப்பிடாதவர்களும்  யாருமில்லை.   அந்த அளவுக்கு கச்சாங் புத்தே பிரபலம்.

சமீபத்தில் நடைப்பெற்ற வழக்கு ஒன்றில்  கச்சாங் பூத்தே இன்னும் பிரபலமாகி விட்டது.  அதன் கதாநாயகன் டாக்டர் மகாதீர்.  கச்சாங் புத்தே என்றால் சாலை ஓரங்களில் விற்கப்படும்  ஏதோ ஓர் அற்ப உணவுப் பொருள்  என்பது போல  அவர்  குறிப்பிட்டிருந்தார். 

லச்சாங் புத்தே எந்த சாலை ஓரங்களில் விற்கப்படுகிறது?  அவர் வாழும் பகுதிகளில் சாலை ஓராங்களில் விற்பதை அவர் பார்த்திருக்கிறாரா? நாசி லெமாக் சாலை ஓரங்களில் விற்கப்படுகிறது என்றால் நம்புவார்கள். அதனை நான்  தரக்குறைவாக நினைக்கவில்லை.  எனது பள்ளிக்காலத்தில்  நாசி லெமாக்கை அரை காசுக்கு வாங்கிச் சாப்பிட்டவன் நான்.  வீடு போய் சேரும் வரை அது தாங்கும்.

ஆனால் டாக்டர் மகாதிர் எப்போதுமே கோணல் புத்தி உள்ளவர்.  அவர் ஓர் இந்திய வம்சாவளி என்பதை மறந்து இந்தியர்களைக் கேவலமாகக் கருதுபவர்.  அப்போது தான் மலாய் சமூகம் அவரை மதிக்குமாம்! குட்டி என்றால் அவருக்குக் கோபம் வருகிறது., ஆனால் இந்தியர்களை  அவர்  எப்படி வேண்டுமானாலும் பேசுவார். 'கிளிங். என்ற சொல்லை இவரே பலமுறைப் பயன்படுத்தி மற்ற மலாய்க்காரர்களுக்கு  வழிகாட்டியாய்   இருந்திருக்கிறார்.  என்ன தான் அவர் குட்டிக்கரணம் போட்டாலும் அவருடைய 'குட்டி' அடையாளம்  எந்தக் காலத்திலும் போகாது என்பது நிச்சயம்.  அவர் இந்தியர் என்பதை அவருடைய  அந்தக்கால அடையாளக்கார்டு காட்டிக்கொடுக்கிறது. அவர் ஓர் இந்தியர் என்கிற அடையாளத்தில் தான் பலகலைக்கழகத்தில்  மருத்துவம் படித்தவர்.

அவர் கேவலமாகக் குறிப்பிட்டாரே அந்த கச்சாங் பூத்தே இன்று உலக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பது அவருக்குத் தெரியவில்லை  என்றால்  அவருக்கு நெருங்கியவர்கள் தெரியப்படுத்துங்கள்.  எந்த வியாபாரமாக இருந்தாலும் அதில் சிறுமை இல்லை. சீனர்களைப் பார்த்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.  சிறு, குறு, பிரமாண்ட அத்தனை வியாபாரங்களும்  சீனர்கள் தான் ஆக்கிரமித்துக்  கொண்டிருக்கின்றனர். நாட்டின் பொருளாதாரம் அவர்கள் கையில்.

இன்று நாங்கள் கச்சாங் பூத்தே விற்கலாம். அல்லது நாசி லெமாக் விற்கலாம், பூ வியாபாரம் செய்யலாம்.. ஒன்றை மறந்து விடாதீர்கள். நாளையப் பொருளாதாரம் எங்கள் கையில்!

Saturday, 30 November 2024

அடித்துக் கொல்வதா?

நாய்களை அடித்துக் கொல்வது என்பது சாதாரண தினசரி வாழ்க்கையில்  ஓர் அங்கம்  என்கிற நிலைமைக்க்ப் போய்விட்டது.

மனித நேயம் இருந்தால் யாரும் இது போன்ற மிருகச் செயல்களைச்  செய்துவிட முடியாது. ஏதோ தப்பித் தவறி பள்ளியின் உள்ளே வந்துவிட்டது  என்பதற்காக இப்படி அடித்தே கொல்வது  எத்தகைய  மிருகத்தனம்?

நீங்கள் யாரும் நாய்களைக் கொஞ்சுங்கள்  என்று சொல்ல வரவில்லை.  உங்களின் அனுதாபத்தையாவது காட்டுங்கள் என்று தான் சொல்லுகிறோம். நாய்களைக் கொல்வதால்  அப்படி என்ன பெருமை உங்களுக்கு வந்துவிட்டது?

நாய்கள் அடக்கமான பிராணிகள்.  அடித்தால் வாங்கிக் கொள்ளும் அவ்வளவுதான். அதனை அடித்தே கொல்வதா?  நினைத்துக் கூட  பார்க்க முடியவில்லை.

நாய்கள், பூனைகள் நம்மைச் சுற்றி வாழ்பவை.  நம்மைச் சுற்றி வருபவை. அது ஒர் உயிருள்ள  ஜீவன் என்று நினைத்தால் போதும். அதனைத் தெரு நாய் என்கிறோம். தெருவில் தான் சுற்றித் திரிகின்றன.  அது எப்படியோ எதனையோ தின்று  வாழ்கிறது.  விரட்டினால் பயந்து ஓடிவிடுகிறது. யாருக்கு என்ன தீங்கை அது செய்கிறது?

மனிதனுக்கு யாரிடமும் எந்த அன்பும் இல்லை அக்கறையும் இல்லை. மனித நேயமும் இல்லை.  அன்பு இருந்தாலே போதும்.  எந்த மிருகத்தையும் கொல்லத் துணியாது.  மனித வக்கிரத்தோடு வாழ்பவன் எதனையும் செய்யத் துணிவான்.

அரசாங்கம் இது போன்ற செயல்களுக்குத் தக்க தண்டனை கொடுக்க வேண்டும்  என்பது தான் நமது கோரிக்கை.  அது நாயாக இருக்கலாம், பூனையாக இருக்கலாம்  அவைகளை சித்திரவதை செய்து  கொல்வதை யாராலும்  ஏற்றுக்கொள்ள முடியாது. சும்மா நூறு, இருநூறு தண்டனையெல்லாம் போதுமானது அல்ல என்பதை நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.

இதை நிறுத்த கடுமையான தண்டனை தான் ஒரே வழி. வருங்காலங்கலில் கடுமையான தண்டனை வழி தான் இது போன்ற செயல்களைக் கட்டுப்படுத்த முடியும். 

அடித்துக் கொன்றவனை கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும். வேறு எதுவும்  மனதைத் தேற்றாது.

Friday, 29 November 2024

மூன்று ஆண்டு த்டையை தகர்த்தார்!

                                                  டத்தோஸ்ரீ எம்.சரவணன்

மூன்று ஆண்டு தடையை  முறியடித்தார்  டத்தோஸ்ரீ சரவணன். நெஞ்சாராப்  பாராட்டுகிறோம்.

பள்ளிவாசல்களைத் தவிர,  அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு  எந்த ஒரு வழிபாட்டுத் தளங்களுக்கும் பொருளாதார உதவி இல்லை என்று கைவிரித்தார்  துணை அமைச்சர் ஒருவர். எந்தவொரு பி.கே.ஆர். நாடாளுமன்றத் தலைவர்களோ, ஜ.செ.கெ. தலைவர்களோ   மூடிய வாயைத் திறக்கவில்லை!  வாய்க்கு  அணை போட்டுவிட்டனர்!

இந்த நேரத்தில் பொங்கி எழுந்தவர் தான் டத்தோஸ்ரீ சரவணன்.  கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தார். தொடர்ந்து பலர் எதிர்ப்புகளைத்  தெரிவித்து வந்தனர், இந்த நிலையில் வீடமைப்பு அமைச்சர்,    ங்கா  கோர் மிங்   மானியங்கள்  தொடர்ந்து கிடைக்கும், தடையேதுமில்லை என்கிற  அறிவிப்பைச் செய்திருக்கிறார்.  வாழ்த்துகிறோம்.

வெளியே பார்ப்பதற்கு எல்லாம் வெகு விரைவில் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது  என்று தோன்றலாம்.  ஒன்றை யோசித்துப் பாருங்கள்.  அரசியல்வாதிகள் கண்டு கொள்ளாத நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்விகள் எழுப்பாத நிலையில் இந்தப் பிரச்சனை  என்ன ஆகியிருக்கக் கூடும் என்று  யோசித்துப் பாருங்கள்.  அதுவும் இந்து கோவில்கள் மட்டும் தான் என்கிற நிலை இருந்திருந்தால்......? இந்நேரம் மூட்டையே கட்டியிருப்பார்கள்!  எல்லா வழிபாட்டுத் தளங்கள்  என்பதால்  எதுவும் செய்ய முடியவில்லை.

ஆனாலும் இது ஓர் எச்சரிக்கை மணி என்பதாகத்தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். பிரதமர் அன்வாரின் பட்டியலில் இதுவும் ஒன்றாக இருக்கலாம். யார் கண்டார்?

நல்ல வேளை சரவணன் அவர்கள் எந்தப்பதவியுலும்  இல்லை. அதனால் இந்தச் சமுதாயம் தப்பித்தது!

Thursday, 28 November 2024

பணிப்பெண்கள் என்ன கேவலமா?


வீட்டு வேலை செய்யும் பணிப்பெண் ஒருவரைத் துன்புறுத்தியதாக ஒரு தம்பதி கைது செய்யப்பட்டு இப்போது சிறை தண்டனையும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதில் ஆச்சரியம் என்னவேன்றால் குடும்பத்தலைவர் காவல்துறையில் உள்ளவர்.  அது தான் நம் மனதைச் சங்கடப்பட வைக்கிறது.  இப்படிக் காவல்துறையில் உள்ளவர்களே சட்டத்தை மீறினால்  யாரை நொந்துகொள்வது?

காவல்துறையில்  உள்ளவர்கள் சட்டத்தை  மீறும்போது  தண்டனை அதிகமாகத்தான் இருக்கும்; இருக்க வேண்டும். அதனால் தான் அதிகாரியான அவருக்குப் பன்னிரெண்டு ஆண்டுகளும் அவரது மனைவிக்குப் பத்து ஆண்டுகளும்  சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.

அதில் ஏதும் தவறு இருப்பதாகத் தோன்றவில்லை.  அதிகாரத்தில் உள்ளவர்களே  குற்றங்களைப் புரியும் போது  அவர்களுக்குக் கடும் தண்டனை அளிக்கப்படும்  என்பது அவர்களுக்குத் தெரியும்.  ஆனாலும் பலர் காலம்பூராவும் ஏமாற்றியே கல்லந்தள்ளிவிடுகின்றனர்.  அதுவே ஒரு சிலருக்கு முன்னுதாரணமாகப்  போய்விடுகிறது.  தவறான நுன்னுதாரணம்,  தவறான வழிகாட்டி அனைத்தும் தவறில் போய் முடியும்.

காவல்துறை இலஞ்சத்திற்குப் பேர் போனது.  அவர்களுடைய அடிதடியெல்லாம்  சிறைகளின் உள்ளே தான் இருக்க வேண்டும்.  வெளியே  வீட்டுப் பணிப்பெண்களிடம்  தங்களது வீரத்தைக் காட்டுவது  காட்டுமிராண்டித்தனம்.  ஒரு அப்பாவிப் பெண்ணை  அடித்து உதைத்து நாற்பதுக்கு  மேற்பட்ட  தையல்களைப் போட வைத்து - இறைவா இவர்களை என்ன செய்யலாம்?  ஓர் ஆண் தான் மிருகத்தனமாக நடந்து கொள்கிறான் என்றால் ஒரு பெண்ணுமா அப்படி?

நம்மால் இவர்களை ஒன்றும்  செய்யும் முடியாது.  நீதிமன்றம் கொடுத்த தண்டனை போதுமானதா  என்று நம்மால் முடிவுக்கு வரமுடியாது.  நீதியின் கண்களில் அது சரியாகத்தான் இருக்க முடியும்.

ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். பணிப்பெண்களைக் கேவலமாக நினைக்க வேண்டாம். அயோக்கியத்தனம் பண்ணாதவரை எந்த வேலையும் உயர்வானதுதான்.