Thursday 11 April 2019

பதவித் திமிர்...!

அவனவனை வைக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டும்!  தகுதி அற்றவன் தாபோங் ஹாஜிக்குத் தலைமை தாங்கினால்  தாபோங்கையே இழுத்து மூட வேண்டி வரும்!

இன்றைய நிலையில் பெல்டா வை வழி நடத்தியவர் யார். முகமது இஸா சமாட் கடந்த பல ஆண்டுகளாக பெல்டாவை வழி நடத்தி வந்தவர். இந்த இஸா சமாட் யார்! முன்னாள் நெகிரி செம்பிலான் மந்திரி பெசாராக இருந்தவர். ஒரளவு நல்ல மனிதர் என்று பெயர் எடுத்தாலும் பொது சொத்துக்களில்  கை வைப்பதிலும் வல்லவராக இருந்தார்!. அதனாலேயே மந்திரி பெசார் பதவிலிருந்து வீழ்த்தப்பட்டார்!

இதில் என்ன அதிசயம் என்றால் இப்படி கொள்ளையடிப்பதில் கை தேர்ந்த ஒருவரை நாட்டின் மிகப்பெரிய நில அமைப்பான பெல்டாவுக்குத் தலைவராக நியமனம் செய்வதற்கு எப்படி தேர்ந்து எடுத்தார்கள்?  இதற்குப் பதில் சொல்ல வேண்டுமானால்  நமது முன்னாள் பிரதமர் நஜிப்பைத் தான் குற்றம் சொல்ல வேண்டும்.  அவர் நீதி, நேர்மை பற்றியெல்லாம்  கவலைப்படாத ஒரு மனிதர்!  நீதி, நேர்மை பற்றியெல்லாம் பேசினால்  ரோஸ்மாவை வழிக்குக் கொண்டு வர முடியாது என்று அவருக்குத் தெரியும்!  அநேகமாக முகமது இஸாவை பெல்டாவின் தலைவர் பதவிக்குக் கொண்டு வந்தவர் ரோஸ்மாவாகத்தான் இருக்க வேண்டும்! பிரதமரை விட ரோஸ்மாவின் செல்வாக்குத் தான் அரசாங்கத்தில் கொடி கட்டிப் பறந்தது என்பது ஒன்றும் புதிய செய்தி அல்ல!

சரி யார் பதவிக்கு வந்தால் நமக்கு என்ன! ஈஸாவின்  செய்த ஒரு சில  காரியங்கள் நம்மை அதிர்ச்சி அடைய வைக்கின்றன.  பெல்டாவில் உள்ள மக்கள் ஒன்றும் மகிழ்ச்சியில் மிதக்கவில்லை. அங்கும் "இழுத்துக்க, பிடிச்சிக்க" என்னும் நிலையில் தான் பெல்டவாசிகள் வாழ்கிறார்கள். அவர்கள் ஒன்று செல்வத்தில் செழிப்போடு வாழவில்லை. 

இந்த நிலையில் மிக அநாவசியமாக  உள்ளே புகுந்து விளையாடியிருக்கிறார் நமது ஈஸா!  ஒரு வலிமையான பொருளாதார நிறுவனத்தை  அதனைத் தூக்கி நிறுத்துவதற்குப் பதிலாக அதனைப் பந்தாடியிருக்கிறார்!  நம்ப முடியாத அளவுக்கு ஊழல்!  

பெல்டா நிதியில் ஹோட்டல் வாங்கியது போன்ற குற்றச்சாட்டுக்கள் அவர் மேல் இருந்தாலும்   வருங்காலப் பிரதமர் என்று வர்ணிக்கப்படும் அன்வார் இப்ராஹிம் கூறியிருக்கும் குற்றச்சாட்டுக்கள் நம்மை வியக்க வைக்கின்றன.

ஆமாம்,  பெல்டா தலைமையகத்தில்  நூற்றுக்கு மேற்பட்ட புதிய கார்களைத் தெறிக்க விட்டிருக்கிறார் ஈஸா!  ஏன், எதற்கு என்று நாம் கேள்வி கேட்டால்  அம்னோவைச் சேர்ந்தவர்கள் நம்மை "கிளிங்" என்பார்கள்!  இதோ அன்வார் மட்டும் அல்ல, பிரதமர், பொருளாதார அமைச்சர், பொருளாதார நிபுணர் என்று பலர் கேள்விகளை எழுப்பி உள்ளனர்.  ஒரு சில  விஷயங்களை மன்னிக்கலாம்.  ஆனால் இது சாதாரண விஷயம் அல்ல. மன்னிக்கக் கூடிய விஷயம் அல்ல.

நிச்சயமாக ஈஸா அதற்கான  தண்டானையை அனுபவித்துத் தான் ஆக வேண்டும்.  நஜிப் அவரை காப்பாற்றப் போவதில்லை. கை கழுவி விடுவார் என எதிர்ப்பார்க்கலாம். ஒரு நிறுவனத்தை தங்களது கையில் ஒப்படைத்தால் அதனை எப்படி குட்டிச்சுவராக்குவது  என்பதை அரசியல்வாதிகள் புரிந்து வைத்திருக்கிறார்கள்!  அதிலும் பாரிசான் அரசியல்வாதிகள் நிபுணத்துவம் பெற்றவர்கள்!

இதனைப் பதவித் திமிர் என்பதைவிட வேறு என்ன சொல்ல!

No comments:

Post a Comment