தேசிய முன்னணி ஆட்சியில் நமது இந்தியத் தலைவர்கள் எந்த ஒரு இந்தியர்கள் பிரச்சனைக்கும் தீர்வு காண முயற்சி செய்யவில்லை!
அந்த அளவுக்கு அவர்கள் அறிவு குறைந்தவர்களா என்பதை விட அவர்கள் அம்னோ எஜமானர்களிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பதனாலோ என்னவோ ஒவ்வொரு பிரச்சனையையும் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தனர் என்பது தான் உண்மை. அவர்கள் காலத்தில் ஒவ்வொரு பிரச்சனையையும் "பார்த்தோம், பேசினோம், பேச்சு வார்த்தை நடத்துகிறோம்" என்கிற பாணியில் தான் இருந்தனவே தவிர முழுத் தீர்வு என்பதெல்லாம் ஒன்றும் இல்லை! அவர்கள் கெஞ்சிக் கூத்தாடி தான் ஏதோ ஒன்றிண்டை சாதித்தார்கள். அதனையே பெரிய சாதனை என்பதாக அவர்களே பறையடித்துக் கொண்டார்கள்!
ஆனால் இது போன்ற "கெஞ்சி, கூத்தாடி" என்கிற நிலை இப்போதைய பக்காத்தான் அரசாங்கத்தில் தொடரக் கூடாது என்பது தான் நாம் நமது இந்தியத் தலைவர்களுக்கு சொல்ல வருவது.
எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் அதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
இதோ ஒர் ஆண்டை கடக்கப் போகிறோம். நிதி சுமைகள், கடன் சுமைகள் எல்லாம் கூட வெற்றிகரமாக சமாளிக்கப்பட்டிருக்கின்றன. நிதி அமைச்சரைப் பாராட்டுவோம். அரசாங்கத்தால் முடியாதது என்று ஒன்றும் இல்லை.
இப்போது கல்வி அமைச்சர் ஒரு சரியான முடிவை எடுக்க முடியாமல் தடுமாறுகிறார்! சென்ற ஆண்டு இந்திய மாணவர்களுக்கு எப்படி 2200 இடங்கள் கொடுக்கப்பட்டனவோ அதையே கொடுத்திருந்தால் கூட இந்தப் பிரச்சனை பூதாகாரமாக வெடித்திருக்காது. ஆனால் பாரிசான் ஆட்சியில் கொடுக்கப்பட்டதை விட பக்காத்தான் ஆட்சியில் 700 இடங்களாக குறைக்கப்பட்டிருப்பது தான் இந்தியர்களிடையே கோபத்தை உருவாக்கியிருக்கிறது. இது அநீதி என்பது நமக்குப் புரிகிறது. ஆனால் அரசில் உள்ளவர்களுக்குப் புரியவில்லை!
இந்த நேரத்தில் நம் இந்திய தலைவர்களுக்கு நாம் சொல்ல வருவதெல்லாம் ம.இ.கா. பாணி அரசியல் நமக்கு வேண்டாம். நமது பிரச்சனைகளுக்குச் சரியான தீர்வு காண வேண்டும். தீர்க்கப்பட வேண்டும். சும்மா பேச்சு வார்த்தை என்று சொல்லி இழுத்தடிக்கும் போக்கு வேண்டாம். ஒன்று சட்டமாக கொண்டு வர வேண்டும். இல்லாவிட்டால் பேச்சு வார்த்தை மூலம் அதற்கு ஒரு தீர்வு காண வேண்டும். அந்த முடிவையே பின் வரும் காலங்களில் பின்பற்றப்பட வேண்டும்.
இந்த மெட்ரிகுலேஷன் வாய்ப்புக்களில் ஒன்று: கோட்டா முறை பயன்படுத்த வேண்டும் அல்லது ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை பின்பற்றப்பட வேண்டும் அதுவும் இல்லையா தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். முந்தைய அரசாங்கத்தில் கோட்டா முறையில் நாம் ஏமாற்றப் பட்டிருக்கிறோம் என்பதையும் நினவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த முறை சரியான வழி முறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம். இதுவே கடைசி பேச்சு வார்த்தையாக இருக்க வேண்டும். ஒவ்வொரும் ஆண்டும் என்னும் போக்கு வேண்டாம். எல்லா இழுத்தடிப்புக்களுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
நாம் ஒரு வெட்கங்கட்ட இனம் என்பதாக ம.இ.கா.வினர் சொல்லி வைத்திருக்கிறார்கள். அதனை மாற்ற வேண்டும். இனி ஒவ்வொரு ஆண்டும் அதிகாரிகளுக்குக் காவடி எடுக்கும் பழக்கத்தை அறவே ஒழிக்க வேண்டும்.
இனி வேண்டாம்! அற்வே வேண்டாம்!
No comments:
Post a Comment