ரந்தோ இடைத் தேர்தலில் ஒரு தேவையற்ற கலாச்சாரத்தை பக்காத்தான் கட்சியினர் அறிமுகப் படுத்தியிருக்கின்றனர்.
ஆமாம் ஒரு பிரச்சார மேடையில் தமிழக சினிமா நடிகர்களை வைத்து நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கின்றனர். இது தேவையற்ற கலாச்சாரமாகவே நான் கருதுகிறேன்.
ஏற்கனவே ம.இ.கா. வினர், தமிழக பிரபல நடிகர்களை வைத்து கலை நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கின்றனர். அவர்கள் அப்படித்தான் செய்தாக வேண்டும். வேறு வழியில்லை. அவர்களிடம் சேவை இலை. அரசாங்கத்தின் பணம் இருந்தது. சேவை இல்லாதவர்கள் தான் சினிமா நடிகர்களின் பின்னால் போக வேண்டும்.
ஆனால் பக்காத்தான் அந்த நிலையிலா இருக்கிறது? பக்காத்தான் அரசியல்வாதிகளிடம் நாங்கள் சேவையைத் தான் எதிர்பார்க்கிறோம். சினிமா நடிகர்களை வைத்து தங்களைப் பிரபலப்படுத்திக் கொள்ளுவதை நாங்கள் ஆதரிக்கவில்லை.
ஒரு தேவையற்ற கலாச்சாரத்தை ம.இ.கா. வினர் பின் பற்றினர். அதன் மூலம் அவர்களுக்கு இலாபம் இருந்தது. மக்களுக்கு எந்த இலாபமும் இல்லை. ம.இ.கா. வினர் தான் மக்களைப் பார்க்காமல் ஓடி ஒளிந்தனர். அல்லது குண்டர்களை ஏவிவிட்டு குண்டர்த்தனம் செய்தனர். அந்தக் கலாச்சாரம் அவர்களோடு போகட்டும்; ஒழியட்டும். இனி அவர்கள் தலை தூக்கப் போவதில்லை. ம.இ.கா. மக்களுக்கான கட்சி அல்ல! அது ம.இ.கா. தலைவர்களுக்கான கட்சி!
பக்காத்தான் கட்சி ம.இ.கா. வினரைப் பின் பற்ற வேண்டிய கட்சி அல்ல. அது நமக்கு வேண்டாம். இந்தியர்களுக்கு உதாரணமான கட்சி அது அல்ல!
பக்காத்தான் கட்சிக்கு ஒரு புதிய பாதை வேண்டும். அது ஒரே பாதை தான். மக்களுக்குச் சேவை செய்வது. இந்தியர்கள் பல வழிகளில் பின் தங்கியிருக்கின்றனர். ஒன்று இரண்டு அல்ல. குடியுரிமை, அடையாளக்கார்டு, அரசாங்க வேலை வாய்ப்பு, தனியார் துறை வேலை வாய்ப்பு, வங்கிகளில் வேலை வாய்ப்பு, பல்கலைக்கழகங்களில் மாணவர் புறக்கணிப்பு, வர்த்தகத்தில் பின்னடைவு என்று தொடர்கிறது பட்டியல்.! இதனை எல்லாம் சரி செய்யத்தான் நாம் அவர்களைத் தேர்ந்து எடுத்திருக்கிறோம்.
கலை நிகழ்ச்சிகள் நடத்தி மக்களை மகிழ்ச்சி படுத்துகின்ற அளவுக்கு நமது நிலை உயரவில்லை! மேற்கூறிய நமது அனைத்து பலவீனங்களையும் களைந்துவிட்டு அப்புறம் நாம் ஆடலாம், பாடலாம்!
இந்த தேவையற்ற கலாச்சாரத்தை விட்டொழிப்போம்!
No comments:
Post a Comment