சமீபத்தில் படித்த ஒரு செய்தி. மனதுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. அதனைத் தான் நான் விரும்புகிறேன்.
பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி யை வாழ்த்துகிறேன். மக்கள் தன்னை நோக்கி வர வேண்டும் என்பதை விட மக்களை நோக்கி நம் போக வேண்டும் என்று மற்ற மாநில அரசியல்வாதிகளுக்கு எடுத்துக் காட்டாக விளங்குகிறார்.
இந்தியர்களிடையே உள்ள பிரச்சணைகளில் தலையாயது நீல அடையாள அட்டை. நீல அடையாள அட்டை என்றால் இந்நாட்டுக் குடிமகன். அவனுக்கு வேலை வாய்ப்புக்கள் இன்னும் பல வசதிகள் உண்டு.
நமது பேராசிரியர் என்ன செய்கிறார்? மாநிலத்தில் உள்ள அடையாளக்கார்டு இல்லாதவர்களின் கணக்கெடுப்பை நடத்தி அடையாள அட்டை பிரச்சனைக்கு ஒரு தீர்வைக் காண முயற்சி செய்கிறார். அதே போன்று இந்தியர்கள் எதிர்நோக்கும் மற்றும் பல பிரச்சனைகளைக் களைவதற்கும் முயற்சிகள் எடுத்திருக்கின்றார். இவைகள் பாராட்டுக்குறிய விஷயங்கள். மற்ற மாநில சட்டமன்ற- நாடாளுமன்ற உறுப்பினர்களும் பின்பற்ற வேண்டியவை.
ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பினாங்கு மாநிலத்தைப் போன்று செயல்பட ஆரம்பிக்க வேண்டும். சான்றுக்கு நான் எடுத்துக் கொண்டால் நெகிரி மாநிலத்தைப் பற்றி சொல்லலாம். இது பெருமை மிக்க மாநிலம். அதிகமான இந்திய சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். வெறும் பெருமை நமக்குத் தேவை இல்லை. இவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது தான் கேள்வி. அவர்கள் பிழைப்பு நடத்த இது அவர்களுக்கு ஏற்ற வேலை அல்ல! இங்கு தொண்டு தான் முக்கியம்.
மாநிலத்தில், பிற மாநிலத்தவர் போல, இங்கும் அடையாள அட்டை பிரச்சனை உண்டு. இங்கும் தமிழ்ப்பள்ளிகளில் பிரச்சனைகள் உண்டு. இந்தியரிடையே வேலை இல்லாப் பிரச்சனை உண்டு. அர்சாங்க வேலை, வங்கிகளில் வேலை காவல்துறையில் வேலை, இராணுவத் துறையில் வேலை என்று தொடர்ந்து கொண்டே போகலாம்.
எனக்குத் தெரிந்து பொது இயக்கங்கள், முந்தைய அரசாங்கத்தில் என்ன நடந்ததோ, அதையே இப்போதும் மானியம் வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றன. மானியம் கொடுப்பது மட்டும் தான் ஆட்சி குழுவில் உள்ளவர் வேலை அல்ல! மக்களுக்கு என்ன தேவை என்பதையும் தெரிந்து கொள்ள களத்தில் இறங்க வேண்டும்.
உணவகங்களில் புகை பிடிக்க வேண்டாம் என்று அரசாங்கம் தடை விதித்தது. அதன் அறிவிப்புக்கள் ஆங்கிலம், மலாய், சீனம் என்று மூன்று மொழிகளிலும் வெளியாயின. ஆனால் தமிழ் மட்டும் இல்லை. மாநில சுகாதாரத் துறையில் இருக்கும் இந்திய ஆட்சிகுழு உறுப்பினர் தனது கடமையைச் செய்யவில்லை!
இப்படித்தான் நமது உரிமைகளை ஏற்கனவே இழந்து வந்தோம். இனியும் அது தொடரக் கூடாது என்பதே நமது வேண்டுகோள்.
பேராசிரியர் இராமசாமியை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். யாருக்காகவும் காத்திராதீர்கள். இந்தியர்களின் தேவை என்ன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களுக்குள்ளே குழு அமைத்துச் செயல்படுங்கள். எங்களுக்காகக் காத்திருக்க வேண்டாம்.
பேராசிரியரை வாழ்த்துகிறேன்!.
No comments:
Post a Comment