பாரிசான் போய் பக்காத்தான் வந்தால் அள்ளி அள்ளி கொடுப்பார்கள் என நினைத்தோம்! இவர்களும் நாங்கள் பாரிசானின் தொடர்ச்சி தான் என்று சொல்லாமல் சொல்லுகிறார்கள்!
ஆமாம்! இந்திய மாணவர்களுக்கான மெட்ரிக்குலேஷன் கல்வி வாய்ப்புக்கள் என்ன நிலையில் இருக்கின்றன? அது தான் பெருத்த ஏமாற்றம்!
இதிலே என்ன ஒரு பெரிய ஏமாற்றம் என்றால் ஒவ்வொரு ஆண்டும் நாம் மீண்டும் ஆட்சியில் இருப்பவர்களோடு வழக்கம் போல் போராட்டம் நடத்த வேண்டும் என்று பக்காத்தான் ஆட்சியும் விரும்புகிறதோ என்று நினைக்க வேண்டியுள்ளது.
சென்ற ஆண்டு 2200 மாணவர்களுக்குக் கல்வி பயில இடம் கொடுக்கப்பட்டன என்பது மகிழ்ச்சிக்குறிய விஷயம் தான், அதனைக் கொடுத்தவர் யார்? முன்னாள் பிரதமர் நஜிப் இந்திய மாணவர்களுக்கு அதிக இடங்களை ஒதுக்கியவர் என்று கேட்கும் போது அவரைப் பாராட்டத்தான் தோன்றுகிறது.
ஆனால் நாம் விழுந்து விழுந்து ஆதரித்த பக்காத்தான் இப்போது நம்மையே பதம் பார்க்கிறதே! இதனை எங்கே போய் முட்டிக்கொள்ளுவது! மோதிக் கொள்ளுவதற்குக் கூட போக்கிடம் இல்லையே!
நாம் சொல்ல வருவதெல்லாம் இந்த மெட்ரிகுலேஷன் கல்விக்கு ஓரு நிரந்தர தீர்வு காண வேண்டும். கல்வி அமைச்சர் என்ன நினைக்கிறாரோ அதன் படியெல்லாம் நாம் தலையாட்டிக் கொண்டிருக்க முடியாது. சிறப்பான தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் இடம் ஒதுக்கி ஆக வேண்டும். அதில் எந்த பாரபட்சம் காட்டக் கூடாது. பணம் உள்ளவர்கள் வெளி நாடுகளுக்குப் போய் விடுகிறார்கள். அது எப்போதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஏழை, நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தான் இங்கு விண்ணப்பம் செய்பவர்கள். இவர்களை ஏமாற்ற நினைப்பது பெருந்துயரம்.
அதிகமான இந்திய மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தால் அவர்கள் அனைவருக்கும் இடம் ஒதுக்கப்பட வேண்டும். அது கல்வி அமைச்சின் பொறுப்பு. எந்த விதமான காரணங்களையும் ஏற்றுக் கொள்ள முடியாது.
இந்த சமூகத்தை எல்லாக் காலங்களிலும் ஏமாற்றிக் கொண்டு வருவது கல்வி அமைச்சு. எந்த அரசாங்கம் வந்தாலும் எங்களை அசைக்க முடியாது என்கிற எண்ணத்தை முதலில் இவர்கள் அகற்ற வேண்டும்.
நாம் இனி ஏமாற தயாராக இல்லை!
No comments:
Post a Comment