Sunday 7 April 2019

ஊழல் குறைந்திருக்கிறதா..?

பக்காத்தான்  புதிய அரசாங்கத்தை அமைத்த பிறகு  ஊழல் நடவடிக்கைகள் குறைந்திருப்பதாகக்  கூறுகிறார் பிரதமர் டாக்டர் மகாதிர். அதுவும் தொண்ணூறு விழுக்காடு குறைந்திருப்பதாக அவர் கூறுகிறார்.

ஆமாம்! நாம் நம்புகிறோம்! நான் மற்றவர்களைச் சந்திக்கும் போது அதையே தான் கூறுகிறார்கள்.  இப்போதெல்லாம் அரசாங்க அதிகாரிகள் இலஞ்சம் வாங்கவே பயப்படுகிறார்கள் என்பதாக நான் அறிகிறேன். ஏன்? இப்போது இலஞ்சம் கொடுக்க  நினைப்பவர்கள் கூட  பல முறை யோசிக்கிறார்கள்!  காரணம் நாளை அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படலாம்!

பக்காத்தான் அரசாங்கம் தனது நூறு நாள் தேர்தல் வாக்குறுதிகளில் எது நடந்ததோ நடக்கவில்லையோ இந்த ஊழல் ஒழிப்பு நடந்திருக்கிறது! அதுவும் கேட்காமலேயே நடந்திருக்கிறது!  

ஊழல் என்பது மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை படர்ந்து செழித்து வளர்ந்திருக்கிறது! தலைவன் தவறு செய்தால் தொண்டனும் தவறு செய்யத்தான் செய்வான்!

நஜிப் தவறு செய்த போது அவரைத் தட்டிக் கேட்க ஆளில்லை. அவர் தனக்கென்று ஒரு கொள்கை வைத்திருந்தார். "யார் வேண்டுமானாலும் திருடலாம் அகப்படாத வரை! அகப்பட்டால் நான் பொறுப்பில்லை!"  அப்போது அவரது அரசாங்கம்.  அனைவரும் திருடர்கள்!  ஒரு புதிய அரசாங்கம் அமையும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.  இப்போது அவரோடு சேர்ந்து அனைவரும் அகப்பட்டுக் கொண்டார்கள்! அகப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.  இந்த ஊழல் வழக்குகள் இன்னும் எத்தனை ஆண்டுகள் தொடருமோ, தெரியவில்லை! 

புதிய அரசாங்கம் பதவி ஏற்றதும்  முதலில் இந்த ஊழல்வாதிகள் தான் கண்ணில் பட்டவர்கள்! கையை நீட்டி இலஞ்சம் வாங்கியவன்  கையை மடக்கிக் கொண்டான்!  செய்த வேலைக்குப் பணம் கொடுக்காமல் இழுத்தடித்தவன் உடனடியாகப் பணத்தை வெளியாக்கினான்! 

நாம் என்ன எதிர்ப்பார்த்தோமோ அது இப்போது நடக்க ஆரம்பித்திருக்கிறது. கடந்த ஒரு வருடமாக வேலைகள் அனைத்தும் சுறுசுறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றன  என்பது நல்ல விஷயம் தானே! பாரிசான்  ஆட்சியில்  எதனை அலட்சியப்படுத்தினார்களோ அதனையெல்லாம் இப்போது இலட்சியப்படுத்துகிறார்கள் என்பது நல்ல விஷயம் தானே! அரசாங்க ஊழியர்கள்  இப்போது சுறுசுறுப்பாக இருப்பதை நாம் வரவேற்கலாமே!

இப்போதைக்கு நாம் இலஞ்ச ஊழலிலிருந்து  தப்பித்திருக்கிறோம்.   இது தொடர வேண்டும் என்பதே நமது அவா.

ஆம், டாக்டர் மகாதிர் சொன்னது சரி தான். ஊழல் ஒழிந்திருக்கிறது.  இன்னும் மிச்சம் மீதம் இருப்பதும் ஒழிக்கப்பட  வேண்டும். அதனை நோக்கிச் செல்லுவோம்!

No comments:

Post a Comment