Thursday 11 April 2019

மீண்டும் சர்ச்சையில் மித்ரா...!

மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார் பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி.சிவகுமார்!

பிரதமர் துறை துணை அமைச்சர் பொன்.வேதமூர்த்தியின் தலைமையின் கீழ் இயங்கும் மித்ரா அமைப்பைப் பற்றி மீண்டும் கேள்வி எழுப்பியிருக்கிரார் சிவகுமார். 

கேள்வி எழுப்புவதில் எந்தத் தவறுமில்லை. தேவை என்றால் கேள்விகள் எழுப்பப்படத் தான் வேண்டும்.  வேலைகள் நடக்க வேண்டுமானால் ம.இ.கா.வினரைப் போல மௌன சாமியாராக இருக்க முடியாது.

சிவகுமாரின் ஒரு கேள்வி நமக்கும் மனதை உறுத்துகிறது. மித்ரா அமைப்பு எந்த நோக்கத்திற்காக, அதன் கொள்கைகள் என்ன, என்கிற கேள்விகள் நம்மையும் யோசிக்க வைக்கிறது!

அதன் கொள்கைகள் இந்திய வர்த்தகர்களுக்கு உதவுவதா, பொது இயக்கங்களுக்கு உதவுவதா, கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு உதவுவதா - இப்படி பல கேள்விகள். காரணம் மித்ராவின் கொள்கைகள் தெளிவாக இல்லை. இதன் முந்தைய பதிப்பான "செடிக்",  காற்பந்துக் குழுக்கள்,  சமய குழுக்கள் - இப்படி எல்லாக் குழுக்களுக்கும்  வாரி வாரி வழங்கி வள்ளலாக நடந்து கொண்டது! இப்போது மித்ராவும் அதே பாதை என்றால் .....? ஏதோ ஒன்று சரியாக இல்லை!

மித்ராவின் மாநியங்கள் யாருக்குக் கொடுக்க வேண்டுமோ அவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.  யாருக்கு உதவ வேண்டும் என்று பணிக்கப் பட்டதோ அவர்களுக்கு உதவ வேண்டும். 

செடிக் ஆரம்பித்த போது அதன் நோக்கம் வர்த்தகர்களுக்கு உதவுவது தான்.  அது பின்னர் ம.இ.கா. அரசியல் வர்த்தர்களுக்குப் பின்னால் அது பயணிக்க வேண்டிய கட்டாயம்.

மித்ராவின் நோக்கமும் வர்த்தகர்களுக்கு உதவுவது தான். அதனுடைய பாதை வர்த்தகர்களை நோக்கி தான் இருக்க வேண்டும். குறைந்த பட்சம் எண்பது விழுக்காடு சிறு வர்த்தகர்களுக்கும், இருபது விழுக்காடு பெரீய நிறுவனங்களுக்கும் கடன் உதவி செய்யலாம்.  இயக்கங்களுக்கு உதவுவதை தள்ளி வைக்கலாம்.  அரசாங்க இலக்கு அதிக இந்திய வர்த்தகர்களை உருவாக்குவது தான். அதிகமான இயக்கங்களை  உருவாக்குவது அல்ல.  செடி,க் பாதை தவறியது உண்மை தான். மித்ரா அதனைப் பின்பற்றக் கூடாது. அரசாங்கத்தின் இலக்கு என்ன என்று அறிந்து, புரிந்து அதனை நோக்கியே மித்ரா செல்ல வேண்டும்.

மித்ராவின் கொள்கை, இலக்கு அனைத்தையும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அறிந்திருக்க  வேண்டும்.  அப்போது தான் பல்வேறு மாநிலத்தவர்கள் மித்ராவின் மூலம் உதவி பெற முடியும். துணை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி இவர்களுடனான சந்திப்பை நிகழ்த்த வேண்டும்.  நமது  நோக்கம் இந்திய வர்த்தகர்கள்  உயர வேண்டும். அவர்களை உயர்த்த வேண்டும்.

மித்ரா மீண்டும் மீண்டும் சர்ச்சைகளுக்கு ஆகாமல் தனது பணியைச் செய்ய வேண்டும். 

சர்ச்சைகள் வேண்டாம்! சாதனைகள் தான் வேண்டும்!

No comments:

Post a Comment