இந்திய மாணவர்கள் மெட்ரிகுலேஷன் கல்வி கற்க இடங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்திருக்கிறார் மலாய் ஆசிரியை ஒருவர்.
மலாய் அரசியல்வாதிகள் கூட வாய் திறக்க மறுக்கிறார்கள் என்பதைக் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த நேரத்தில் இப்ராஹிம் இடைநிலைப் பள்ளி ஆசிரியை மைமுனா நசிர் தனது கருத்தினை முகநூலில் பதிவேற்றம் செய்திருப்பது நமது பக்கம் நியாயம் இருப்பதை காட்டுகிறது எனலாம்.
ஆசிரியர்கள் தங்களது மாணவர்கள் சிறப்பான தேர்ச்சி பெற வேண்டும் என்பதைத் தான் விரும்புவார்கள். அது தான் அவர்களுக்குத் திருப்தி அளிக்கும் வாழ்க்கையில் அது தான் அவர்களுக்கு மகிழ்ச்சி தரக் கூடியது.
ஆசிரியை மைமுனா இனப்பாகுபாடின்றி படம் நடத்துபவர். தனது மாணவர்கள் அனைவரும் நல்ல நிலைக்கு வர வேண்டும் என்பதில் அக்கறை காட்டுபவர். தனது மாணவர்கள் மருத்துவம் பயில வேண்டும், பல் மருத்துவம், மருந்தகத் துறை என்று படிக்குமாறு ஊக்கம் கொடுத்து பாடங்களைப் போதிப்பவர். ஒரு பைலோஜி ஆசிரியர் என்கிற முறையில் அப்படித் தான் தனது மாணவர்களை ஊக்குவித்து வந்திருக்கிறார்.
ஆனால் இப்படி சிறப்பாகப் படித்துக் கொடுத்து வெற்றி பெற்ற மாணவர்கள் - குறிப்பாக இந்திய மாணவர்கள் - கடைசியில் கோட்டா முறை என்று சொல்லி அவர்களுக்கு மெட்ரிகுலேஷன் கல்வியை மறுப்பது எந்த ஊர் நியாயம் என்று கேட்கிறார் அவர்.
இந்திய மாணவர்கள் நல்ல தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். எல்லாப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். ஆனால் வெறும் 3A பெற்ற மலாய் மாணவர்களுக்கு இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதிகப் பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இடம் மறுக்கப்பட்டிருக்கிறது! இவைகள் அனைத்தும் கோட்டா முறையினால் வந்த குளறுபடிகள். இடங்கிடைக்காத மாணவர்களின் முகவாட்டத்தை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
தொண்ணூறு விழுக்காடு மலாய் மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு என்றால் அவர்கள் மட்டும் தான் வரி செலுத்துகிறார்களா என்று கேட்கிறார் மைமுனா.
ஆமாம் அவர் சொல்லுவது சரிதான். வரி என்பது ஓர் இனம் மட்டும் அல்ல அனைத்து இனங்களும் வரி கட்டுகின்றன. ஆனால் உயர் கல்வி என்னும் போது ஒர் இனத்துக்கு மட்டும் என்னும் கொள்கை சரியானதல்ல என்று தான் நாமும் சொல்லுகிறோம்.
ஆசிரியை மைமுனா அவர்களுக்கு நாம் அனைவரும் மலேசியர் என்கிற உணர்வு உண்டு. அதை நாம் பாராட்டுகிறோம்.
நன்றி சகோதரி! நீங்கள் தான் உண்மையான ஆசிரியர்!
No comments:
Post a Comment