முன்னாள் துணைக் கல்வி அமைச்சர் டத்தோ பி.கமலநாதன் சரியான நேரத்தில் உண்மையை உரக்கச் சொன்னார்!
கமலநாதனைப் பற்றி நமக்கு ஒன்றும் நல்ல அபிப்பிராயம் எந்தக் காலத்திலும் இருந்ததில்லை. காரணிகள் எதுவும் சொல்ல வேண்டியதில்லை.
ஆனால் அவர் காலத்தில் தான் இந்திய மாணவர்களுக்கு அதிகமான இடங்கள் மெட் ரிகுலேஷன் கல்வி பயில ஒதுக்கப்பட்டன என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
2012 - ம் ஆண்டு தொடக்கம், தொடர்ந்தாற் போல ஆறு ஆண்டுகள் 1500 இடங்களை ஒவ்வொரு ஆண்டும் இந்திய மாணவர்கள் பெற்று வந்திருக்கின்றனர். சென்ற ஆண்டு அது 2200 இடங்களாக அதிகரிக்கப்பட்டிருக்கின்றன. இவைகள் அனைத்தும் டத்தோ கமலநாதனின் காலத்தில் நடந்தவை. அதாவது நஜிப் பிரதமராக இருந்த போது நடந்த மாற்றங்கள். அதாவது ம.இ.கா. தேசிய முன்னணியில் இருந்த போது!
இந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை 2200 விட அதிகமாக இருக்க வேண்டும் என்பதே இந்திய சமூகத்தின் எதிர்பார்ப்பு. அது நடந்திருக்க வேண்டும். காரணம் இது"நமது" ஆட்சி என நாம் நினைத்தோம். தவறு என்று புரிகிறது. ஆனால் தவற்றை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை! தானைத் தலைவருக்கு தாம்பளம் தூக்கியது போதும்! இப்போதும் அதனையே செய்வோம் என்று இப்போதைய தலைவர்கள் எதிர்ப்பார்க்கக் கூடாது என நினைவுறுத்துகிறோம்.
நமது பக்காத்தான் தலைவர்கள் இந்தப் பிரச்சனையில் இன்னும் தீவிரம் காட்ட வேண்டும் என்று இந்திய சமூகம் எதிர்ப்பார்க்கிறது.
கடந்த ஒரு வருட காலத்தில் இந்திய சமூகத்தின் எந்தப் பிரச்சனையும் பக்கத்தான் அரசால் தீர்க்கப்படவில்லை என்பதை நமது தலைவர்கள் உணர வேண்டும்.
கல்வி என்பது இன்றைய அவசரப் பிரச்சனை. இது உடனடியாக தீர்க்கப்பட வேண்டும். குறைந்த பட்சம் ஒவ்வொரு ஆண்டும் 3000 மாணவர்கள் என்பதாக ஒரு வரையறை வகுத்துக் கொண்டு இனி செயல்பட வேண்டும். ஒவ்வொரு முறையும் கல்வி அமைச்சுக்கும், பிரதமருக்கும் காவடி எடுப்பதை நிறுத்த வேண்டும். இதை விட கேவலமானது வேறு எதுவும் இல்லை. இது நமது உரிமை. உரிமைக்கு இத்தனை ஆண்டுகள் குரல் கொடுத்து வந்தோம். அது தொடர நம்மால் அனுமதிக்க முடியாது.
கமலநாதன் சார்! உமக்கு நன்றி! சரியான நேரத்தில் வாய் திறந்தீர்கள். பாக்காத்தான் இந்திய தலைவர்களுக்கு உரைக்கிறதா என்று பார்ப்போம்!
நாங்கள் என்ன பேசுகிறோமோ அதையே, தலைவர்களே, நீங்களும் பேச வேண்டாம். முதலில் நீங்களே கூடிப் பேசி சமுதாயத்திற்கு என்ன தேவையோ அவைகளைக் களைய முயற்சி செய்யுங்கள்.
தலைவர்களே உங்களை நம்புகிறோம்! காலைவாரி விடாதீர்கள்!
No comments:
Post a Comment