Friday 12 April 2019

கொஞ்சம் மனிதாபிமானம் காட்டுங்கள்..!

வீட்டு வேலைக்கென பல நாடுகளிலிருந்து இங்கு வந்து வேலை 
 செய்கின்றனர்.

குறிப்பாக இந்தோனேசிய, தாய்லாந்து, இந்தியா, கம்போடியா,  வியட்நாம். பிலிப்பைன்ஸ்   இப்படி பல நாடுகள். தங்கள் நாட்டில் பணம் சம்பாதிக்க வழியில்லாததால் இந்த ஏழைப் பெண்கள் இங்கு வந்து வீட்டு வேலைகளைச்  செய்கின்றனர்.  அவர்கள் வீட்டுப் பணிப்பெண்கள். அவர்களின் வேலைக்குத் தகுந்த ஊதியம் கொடுக்க  வேண்டும்.  அவர்களின் வேலையில் திருப்தி இல்லையென்றால் அவர்களை அவர்கள் நாட்டுக்கே திருப்பி அனுப்பி விடலாம்.  அது தான் நடைமுறை.

இப்படி வேலை செய்ய வருபவர்களை ஒரு சிலர் அவர்களை அடிமைகளைப் போல நடத்துகின்றனர். இது தான் பிரச்சனை.  இவர்கள் அவர்களுக்குச் சம்பளம் கொடுக்கிறார்கள் என்பதற்காக அவர்களை  அடிமைப் படுத்துவதற்கு இவர்களுக்கு யாரும் உரிமை கொடுக்கவில்லை. ஆனால் அப்படி உரிமை இருப்பதாகவே இவர்கள் நினைத்துக் கொள்ளுகிறார்கள்! இங்கு தான் பிரச்சனை ஆரம்பமாகிறது!

நமக்குத் தெரிந்து அதிகமாக செய்திகளில் அடிபடுபவர்கள் இந்தோனேசியர்கள்.  இந்தியப் பெண்களும் நிறையவே பாதிக்கப் படுகின்றனர். ஆனால் அவர்களைப் பற்றியான செய்திகள் முடக்கப்படுகின்றன.

சமீபகாலங்களில் இந்தோ பெண்களைப் பற்றியான  செய்திகள் அதிகமாக பத்திரிக்கைகளின் வழி பார்க்கிறோம்.  எல்லாம் அடித்தும், உதைத்தும் பலவிதமான குற்றங்களைப் புரிகின்றனர். கணவன் மனைவிக்கு உள்ள பிரச்சனைகளில் இந்தப் பெண்கள் பலிகடா ஆகின்றனர்! கணவன் மனைவியை அடிக்க முடியவில்லை, மனைவி கணவனை அடிக்க முடியவில்லை!  இவர்கள் வேலைக்காரப் பெண்கள் மேல் தங்களது வலிமையைக் காட்டுகின்றனர்!

இந்த முதலாளி என்பவர்கள் ஒரு பைத்தியக்காரக் கூட்டம்! தனக்குக் கீழ் உள்ளவர்களை அடித்துத் துன்புறுத்துவது அடாவடித்தனம் செய்வது என்பது மிகவும் கீழ்த்தர புத்தி உள்ளவர்கள் தான் செய்வார்கள்!  ஓர் ஏழையைக் கசக்கிப் பிழிவதை பாராட்டவா முடியும்? 

எல்லாவற்றுக்கும் தண்டனைகள் உண்டு. யாரும் தப்ப முடியாது. எவ்வளவு உச்சத்தில் இருந்தாலும் ஒரு நாள் நீச்சத்திற்கு வந்து தான் ஆக வேண்டும்!

கொஞ்சம் அனுதாபம்! கொஞ்சம் மனிதாபிமானம்!  இது கூட இந்த "முதலாளிகளுக்கு" இல்லை என்றால் உங்கள் வீட்டுக்கு ஏன் பணிபெண்கள்? அப்படித்தான்  கேட்க  நினைக்கிறோம், முடியவில்லை!

இப்போது நமக்கு மிகவும் அறிமுகமான  டான்ஸ்ரீ கென்னத் ஈஸ்வரன் தம்பதியினர் குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றனர்.  ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்காவிடில் இந்த நிலைமை இவர்களுக்கு ஏற்பட்டிருக்காது!  இன்னும் எத்தனை முதலைகள் இருக்கின்றனவோ, தெரியவில்லை! அவர்கள் எல்லாம் சீக்கிரம் அடையாளம்  காணப்படலாம்!   முன்னாள் பிரதமர் நஜிப்பின் எச்சங்கள் இன்னும் இருக்காமலா போகும்!

தேவை மனிதாபிமானம் மட்டுமே!

No comments:

Post a Comment