Tuesday 16 April 2019

இந்தியர்களின் வாக்குகள் சரிவா...?

சமீபத்தில் நடந்து முடிந்த ரந்தோ இடைத் தேர்தலில்  பாரிசான்  வேட்பாளர் முகமது ஹாசான் வெற்றி பெற்றார். 

இந்தத் தேர்தலைப் பற்றி விமர்சிக்கையில்  பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனநாயக செயல் கட்சியின் துணைத் தலைமைச் செயலாளருமான வி செல்வகுமார் அதிரடியான கருத்து ஒன்றினை வேளியிட்டிருக்கிறார்.

கடந்த பொதுத் தேர்தலில் 80 விழுக்காடு இந்தியர்கள் பக்காத்தான் கட்சிக்கு வாக்களித்தார்கள்.  இந்த நிலையில் கடந்த இடைத் தேர்தல்களில் இந்தியர்களின் வாக்குகள் இறங்குமுகமாக இருப்பதாக செல்வகுமார் கூறியிருக்கிறார்.

இது கவனிக்கத்தக்கது என்பதை மறுப்பதற்கில்லை. அதுவும் ரந்தோ இடைத் தேர்தலில் அந்த இறங்குமுகம் இன்னும் அதிகமாகவே தோன்றுகிறது.

இதற்கான காரணிகள் என்ன என்பதை நாம் சொல்லிக் கொண்டு தான் வருகிறோம்.  பாரிசான் அரசாங்கத்தில் என்ன நடந்தோ அதே தான் இப்போதும் இந்தியர்களுக்கு நடந்து கொண்டிருக்கிறது! பக்காத்தான் தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் தடுமாறுகிறது என்று சொல்லப்படுகிறது.

ஆனால்  இந்தியர்களின் ஏதாவது ஒரு பிரச்சனையைக் களைந்திருக்கலாம்.  எதுவும் நடக்கவில்லை. எல்லாமே நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அல்ல. அதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். நிதி பற்றாக்குறை என்னும் காரணிகள் இருந்தால் நாம் அதனைப் புரிந்து கொள்ளலாம். 

ஏற்கனவே நாம் பல முறை கூறியிருக்கிறோம். இந்தியர்களின் தலையாய பிரச்சனை என்பது நீல அடையாளக்கார்டு, குடியுரிமை  இன்றைய நிலையில் முன்னணி வகிக்கிறது. வேலையில்லாமல்  ஒரு மனிதன் எப்படி இருப்பான் என்று யோசித்துப் பார்க்க வேண்டும். அவனை சமுதாயம் எப்படிப் பார்க்கும் என்பதைப் பார்க்க வேண்டும். 

நேற்று வந்த வங்காளதேசி, நேற்று வந்த பாக்கிஸ்தான் வாசி நீல நிற அடையாளக்கார்டோடு இந்நாட்டுக் குடிமகனாக வாழ்வதும் இங்குப் பிறந்தவன் வேற்று உலகவாசியாக  வாழ்வதும், எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? 

இந்தப் பிரச்சனையில் நிதிப் பற்றாக்குறை என்னும் பேச்சுக்கே இடமில்லை. மனப் பற்றாக்குறை என்பது தான் இங்குள்ள நிலை.

சராசரி மனிதனுக்கு நஜிப் எவ்வளவு கொள்ளையடித்தார் என்பது ஒரு பிரச்சனை அல்ல. சாமிவேலு எவ்வளவு சொத்து சேர்த்தார் என்பது பிரச்சனையல்ல. தேவை எல்லாம் அவன் வாழ வேண்டும். கௌரவமாக வாழ வேண்டும். இந்நாட்டுப் பிரஜை என்னும் கம்பீரத்தோடு வாழ வேண்டும்.

இதனைச் செய்ய முடியாத  அரசாங்கத்தை ஏன் ஆதரிக்க வேண்டும்?  முதலில் இதனைச் சரி செய்யுங்கள். சரிவைத் தடுங்கள்!

No comments:

Post a Comment