Thursday 18 April 2019

இது தான் தண்டனையா...!

ஊழல் குற்றச்சாட்டை எதிர் நோக்கியிருந்த பெரு நாட்டின் முன்னாள் அதிபர் ஒருவர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டார் என்று அறியும் போது "இது தான் ஊழலுக்குத் தண்டனையா" என்று நினைக்கத் தோன்றுகிறது.

அந்த முன்னாள் அதிபர்,  ஆலன் கார்சியா காவல் துறையினர் அவரது வீட்டில் அவரைக் கைது  செய்ய வரும் போது  அவர் சொன்ன கடைசி வார்த்தை " எனது வழக்கறிஞரைப் போய் பாருங்கள்" என்று சொல்லிவிட்டு தனது படுக்கை அறைக்குச் சென்று தனது துப்பாக்கியால் தலையில் சுட்டுக் கொண்டு இறந்து போனார்.  அவர் கடைசி காலம் வரை தனது குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை. தான் நிரபராதி என்பதாகவே கூறி வந்தார்! 

பொதுவாக அரசியல்வாதிகள் எந்தக் காலத்திலும் தங்கள் குற்றங்களை ஒப்புக் கொள்ளுவதில்லை. ஒருவர் நல்லவராக இருந்தாலும் அரசியல்வாதி என்னும் நிலைக்கு வந்த பிறகு நாம் அவர்களை நம்புவதும் இல்லை!

சான்றுக்கு தமிழ் நாட்டு அரசியல்வாதிகளைப் பாருங்கள். அல்லது நம் நாட்டு ம.இ.கா. அரசியல்வாதிகளைப் பாருங்கள்  யாரையேனும் நம்ப முடிகிறதா!  தமிழ் நாட்டு அரசியல்வாதிகளைப் போல் இந்த உலகத்தில் எங்கேனும் அரசியல்வாதிகள் இருப்பார்களா என்பது ஆய்வுக்குறிய விஷயம்!  இந்த உலகமே எனக்குச் சொந்தம் என்று நினைப்பவர்கள் தமிழ் நாட்டில் தான் இருக்கிறார்கள்!

அதே போல நமது உள்ளூர் அரசியல்வாதிகள் இந்நாட்டு இந்தியர்களின் சொத்து அனைத்துக்கும் சொந்தக்காரர்கள் நாங்கள் தான் என்கிற பெரிய மனம் படைத்தவர்கள்!  இந்தியர்களுக்கு என்று அரசாங்கம் கோடிக்கணக்கில் பணம் கொடுத்தாலும் "அது எங்கள் பணம்" என்று முதலில் கையை நீட்டுபவர்கள் அவர்கள் தான்! 

ஆனால் எந்த நிலையிலும் இந்த மாபெரும் அரசியல் ஊழல்வாதிகள், ஒருத்தரேனும் தன்னைத் தானெ சுட்டுக் கொண்டு செத்துப் போனதாக சரித்திரம் இல்லை!  அவர்கள் பிள்ளைகள் தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல் இல்லை! மற்றவர்களைத் தான் இவர்கள் கொன்றிருப்பார்களே தவிர மற்றபடி இவர்கள் அதைப் போன்ற வீணான வேலைகளில் இறங்குவதில்லை!

இந்த நிலையில் ஆலன் கார்சியா பாராட்டுக்குரிய மனிதர் தான்! கொஞ்சமாவது அவருக்கு மானம், ஈனம், ரோஷம் இவைகளெல்லாம் இருந்திருக்கின்றன என்பது அவரது தற்கொலை மெய்ப்பிக்கிறது. 

தப்பு செய்தவன் உப்பைத் தின்று தான் ஆக வேண்டும்! அது தான் உலக நியதி!

No comments:

Post a Comment