Tuesday 9 April 2019

அநாகரிக அரசியல்...!

நமக்குப் பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ அரசியல் என்றாலே நல்லதும் உண்டு, கெட்டதும் உண்டு! முக்கால்வாசி நேரம் கெட்டதாகவே இருக்கிறது. அதனால் தான் அரசியல்வாதிகளை அயோக்கியர்கள் என்கிறோம். நல்லவர்களும் உண்டு என்பதையும் மறுப்பதற்கில்லை!

நல்லவர்களால் நாடு நலம் பெறும். நல்லவர்கள் அரசியலை ஒதுக்கும் போது நாசகாரர்கள் அரசியலில் உள்ளே புகுந்து விடுகின்றனர். 

தேர்தல் காலம் வந்து விட்டாலே பல வித பேச்சுக்கள். இனத் துவேஷங்கள்  என்பதெல்லாம் சர்வ சாதாரணமாக வரும். சட்டங்கள் கடுமையாக இருந்தாலும் அதனை அமல்படுத்தாத வரை அரசியல்வாதிகள் இந்தப் பிரச்சனையை எழுப்பிக் கொண்டே இருப்பார்கள். இனம், சமயம், மொழி என்பதெல்லாம் எல்லாக் காலங்களிலும் தேர்தல் காலத்தில் வாக்குகளுக்காகப் பயன் படுத்தப்படும் ஆயுதங்களாக இருக்கின்றன.  

இப்போது ரந்தோ தொகுதி இடைத் தேர்தலை எடுத்துக் கொள்ளுவோம். இங்கும் இனத் துவேஷம் தான்.  பக்காத்தான் வேட்பாளர் டாக்டர் ஸ்ரீராம்.ஒரு கிளிங் அவருக்கு வாக்களிக்காதீர்கள். பாரிசான் வேட்பாளர் ஒரு மண்ணின் மைந்தன் அவருக்கே வாக்களியுங்கள் என்பதாக ஐந்துக்கு மேற்பட்ட பதாகைகள் வைக்கப்பட்டிருக்கின்றன என்பதாகச் சொல்லப்படுகின்றது.

இது மிகவும் கண்டிக்கத்தக்க ஒரு செயல். நிச்சயமாக இந்திய சமுதாயத்தை"கிளிங்" என்று சொல்லி அவமானப்படுத்தும்ஒருசெயல்.  டாக்டர் ஸ்ரீராமை கிளிங் என்று சொல்லி  இந்தியர்களை கேவலப்படுத்தும் ஒரு செயல். இதனைச் செய்தது யார் என்று இதுவரை தெரியவில்லை. இது அம்னோ தரப்பு செய்த வேலை என்று தான் நம்பப்படுகிறது.  காரணம் அதில் கையாளப் பட்டிருக்கும் மொழி,  மெனாங்கபாவ்-மலாய் மொழி நடை. ஆனாலும் இன்னும் யார் என்று உறுதி செய்யப்பட வில்லை. தேர்தலுக்குப் பின்னரே தெரிய வரும் என நம்பலாம். அது மட்டும் அல்லாமல் அவர்கள் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்கப் படும்  என்றும் நம்பலாம்.

கடந்த கால ஆட்சியில் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்தாற் போல் நடந்திருக்கின்றன. ஆனால் அவர்கள் நம் மீது ஏவப்படும்  எதனையும் பொருட்படுத்துவதில்லை. இது  போன்ற அநாகரிகச் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டும் என்பதே நமது வேண்டுகோள். 

இந்த அநாகரிக அரசியலில் இதுவே கடைசியாக இருக்கட்டும்!

No comments:

Post a Comment