Wednesday 24 April 2019

நன்றி சொல்ல ஒன்றுமில்லை..!

இந்த மெட்ரிகுலேஷன் கல்வி விவகாரத்தில்  அரசாங்கத்திற்கு நன்றி சொல்ல வேண்டுமா?

அவசியமில்லை என்றே நான் நினைக்கிறேன். நன்றி சொல்ல ஒன்றுமில்லை. அவர்களாகவே 2200 இடங்களை இந்திய மாண்வர்களுக்கு வழங்கியிருந்தால் நாம் அவர்களைப் பாராட்டியிருக்கலாம்.  அதிக இடங்களைத்  தான்  இந்த புதிய அரசாங்கத்திடம் எதிர்ப் பார்த்தோம். அதிக இடங்களை ஒதுக்கவில்லை.  மேலும் முந்தைய அரசாங்கம் கொடுத்ததையும் குறைத்ததால் தான் நாம் கொதித்து எழுந்தோம்!

இப்போது கூட அரசாங்கம் ஒரு  சரியான  நிலைப்பாட்டை எடுத்தாக நமக்குத் தெரியவில்லை. இந்த ஆண்டு 2200 இடங்கள்! ஏன் அதனை 2300 இடங்களாகக் கொடுத்திருந்தால் என்ன? சரி, அந்த 2200 இடங்கள் இந்த ஆண்டு மட்டும் தானா அல்லது அடுத்த  ஆண்டும்  கல்வி அமைச்சுக்கு நடையாய் நடக்க வேண்டுமா? அல்லது அதிகரிக்கப்பட்டிருக்கும் 40,000 இடங்களில் பூமிபுத்ரா அல்லாதவருக்கு 4000 இடங்கள் ஒதுக்கப்படுமா என்கிற கேள்விக்குப் பதலில்லை! இந்த 4000 இடங்களில் இந்தியர்களுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்படும் என்பது இன்னும் தெளிவாக இல்லை.

கடந்த கால பாரிசான் அரசாங்கம் ஒதுக்கிய 2200 இடங்களை உடும்புப் பிடியாய் பிடித்துக் கொண்டிருப்பது ஏன்?  2500 ஆக ஆக்கினால் என்ன கெட்டுப் போயிற்று?  பக்காத்தான் அரசாங்கத்தால் சுயமாக சிந்திக்க முடியாது என்பதைத் தானே இது காட்டுகிறது!

மேலும் 40,000 இடங்கள் அதிகரித்ததன் மூலம் பூமிபுத்ராக்களின் இடங்கள் தான் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன தவிர இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 2200 இடங்களோடு நிறுத்தப்படுமா என்பதும் புரியவில்லை! 

நாம் சொல்ல வருவதெல்லாம் இந்த ஆண்டு 2200  மாணவர்கள் என்பது  சரியாக  இருக்கலாம். இது தற்காலிகத்  தீர்வு  தான். 3000 மாணவர்கள்  என்பதே சரியான இலக்காக இருக்கலாம். தெரியவில்லை! கல்வியாளர்களுக்குத்  தான் இது புரியும். ஒவ்வொரு ஆண்டும் எத்தனை மாணவர்கள் வெளியாகிறார்கள் என்பதை வைத்தே ஒரு சராசரி எண்ணிக்கையை நாம் முன்மொழிய வேண்டும்.  அதனையே தொடர்ந்து கடைப்பிடிக்கலாம். தொடர்ந்து நாம் 2200 என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

நன்றி சொல்ல இன்னும் காலம் கனியவில்லை!

No comments:

Post a Comment