Thursday 18 April 2019

வந்தேறிகளா...?

தமிழ், சீன மாணவர்களைப் பார்த்து  வந்தேறிகள் என்பதாகக் கூறியிருக்கிறார் அம்னோ கட்சியைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர்.

கடந்த பொதுத் தேர்தலின் தோல்விக்குப் பின்னர் அம்னோ தரப்பிலிருந்து இது போன்ற பேச்சுக்கள் தொடர்ந்து வண்ணம் இருக்கின்றன! அதுவும் இடைத் தேர்தல்களில் இனப் பிரச்சனைகளைக் கிளப்பினார்கள்.  இப்படி பேசினால் தான் மலாய் இனத்தவரிடம் கைத்தட்டல்  வாங்க முடியும், வாக்குகளைக் கவர முடியும் என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால் கெமாயான் சட்டமன்ற உறுப்பினர் முகமது பட்லி ஓஸ்மான் தமிழ் ,சீன மாணவர்களைப் பார்த்து இந்தக் கருத்தினைக் கூறியிருக்கிறார். பள்ளிப் பிள்ளைகளின் மனதில் விஷத்தை தூவும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் பட்லி.  சட்டமன்ற உறுப்பினர்கள் படித்தவர்கள்.  படித்தவர்கள் என்பதை விட  பண்புள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பது தான் முக்கியம்.  அதை விட இறைவன் மீது நம்பிக்கை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

இப்படி விஷக் கருத்துக்களை மக்கள் மீது பரப்புபவர்கள் மேற் கூறிய எதிலும் சம்பந்தப்படாதவர்கள்! கண்டனத்துக்கு உரியவர்கள்!

வாக்குகள் சேகரிப்பதற்கு நல்ல வழிகள் இருக்கின்றன. நச்சு வழிகள் தேவையில்லை.  சட்டமன்ற உறுப்பினராவது என்பது ஒரு தொழில் அல்ல. அது தொண்டு. மக்களின் தேவைகளை  உணர்ந்து அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். நல்லதைச் செய்ய வேண்டும்.  வேறு தேவைகள் இல்லை!  பின் ஏன் நச்சுக் கருத்துக்கள்?

ஒன்று நமக்கு ஞாபகத்திற்கு  வருகிறது. ஆடத் தெரியாதவள் மேடை கோணல் என்றாளாம்! அதைத்தான் நினைவூட்டுகிறார் பட்லி! தொண்டு என்றால் என்னவென்று தெரியவில்லை. தன்னுடைய கடமை என்னவென்று தெரியவில்லை.  எதற்காக ஒரு தொகுதியைத் தேர்ந்தெடுத்து அங்கு போட்டியிட்டோம் என்று தெரியவில்லை.  அரசியல் என்றால் என்னவென்று தெரியவில்லை. ஒன்றுமே தெரியாது!  ஆனால் ஆசை மட்டும் இருக்கிறது  நாட்டை ஆள!  அதற்கு என்ன செய்ய வேண்டும்?  இந்தியர், சீனர் பிரச்சனைகளக் கிளப்புவது! இனத் துவேஷத்தை வளர்க்க முயற்சி செய்வது! கோணல்களை நேர் செய்ய துப்பில்லை! குற்றம் மட்டும் சொல்லத் தெரிகிறது! 

வருங்காலங்களில் இது போன்ற கருத்துக்களை "அது அம்னோவின் கருத்தல்ல, அவரது தனிப்பட்ட கருத்து"  என்று சொல்லக் கூடியவர்களை நிறையவே எதிர்ப்பார்க்கலாம்!

கடுமையான தண்டனைகள் கொடுத்தாலன்றி  வந்தேறிகள் தொடரத்தான் செய்யும்!

No comments:

Post a Comment