கல்விக்காக முதன் முதலாக இந்திய சமூதாயமே திரண்டு எழுந்திருக்கிறது.
ஆமாம், மெட்ரிகுலேஷன் கல்விக்காக மக்கள் ஒன்று சேர்ந்திருக்கின்றனர் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி தான். பெற்றோர்கள் புத்ரா ஜெயாவில் ஒன்று சேர்ந்திருக்கின்றனர். வாயைத் திறக்காத கல்வியாளர்கள் கூட வாய் திறந்திருக்கின்றனர்,!
இதனையெல்லாம் பாரிசான் காலத்தில் நாம் எதிர்ப்பார்க்காதவை! ம.இ.கா. வினரே நம்மை கும்மோ கும்மென்று மொத்தியிருப்பார்கள்! அந்த அளவுக்கு அவர்கள் பலம் வாய்ந்தவர்களாக இருந்திருக்கின்றனர்!
இப்போது நமக்குக் கொஞ்சம் சுதந்திரம் அதிகம். அதனால் அரசாங்கத்திற்கு நமது நிலையை எடுத்துரைக்க முடிகிறது. அவர்களும் நாம் சொல்லுவதை காது கொடுத்துக் கேட்கிறார்கள். அமைச்சரவையிலும் நமது இந்திய பிரதிநிதிகள் "பேசுவதாகச்" சொல்லுகிறார்கள். பேசட்டும். இந்த சமுதாயத்திற்கு என்ன தேவையோ அதனைப் பேசட்டும். பேச வேண்டும் என்பதற்காகத் தான் அவர்களை நாம் அனுப்பி வைத்திருக்கிறோம்.
ஒன்றை நாம் ஞாபகப் படுத்துகிறோம். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் புத்ரா ஜெயாவிற்குப் படை எடுப்பதை நாம் விரும்பவில்லை. கல்வி அமைச்சுக்குக் காவடி எடுப்பதை நாம் விரும்பவில்லை. மக்கள் அறிக்கை விடுவதை நாம் விரும்பவில்லை. இப்போது என்ன என்ன நடக்கிறதோ இவைகள் இனி மேல் மீண்டும் நிகழக் கூடாது என்பது தான் மீண்டும் மீண்டும் நாங்கள் சொல்ல வருவது.
காரணம் இதற்கு முன்பு நடந்தவைகள் எல்லாம் நமக்குத் தேவை இல்லை. இனி நடக்கப் போவதைப் பற்றி பேசுவோம். நாம் ஒரு புதிய அரசாங்கத்தை தேர்ந்து எடுத்து விட்டோம். பழைய அரசாங்கத்தின் மேல் உள்ள வெறுப்பின் விளைவு தான் இன்று இந்த புதிய அரசாங்கம். இந்த அரசாங்கத்தில் கடந்த கால அரசியல் விளையாட்டுக்களை நாம் பார்க்க விரும்பவில்லை.
அதனால் இனி நமக்கு ஆர்ப்பாட்டங்கள் தேவை இல்லாதது. மகஜர்கள் தேவை இல்லை. நடைப் பயணம் தேவை இல்லை. முற்றுகை தேவை இல்லை.
நமக்குத் தேவை எல்லாம் இதற்கு ஒரு தீர்வு காணப்பட வேண்டும். இந்த ஆண்டே பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்வு காணப்பட வேண்டும். அல்லது சட்டம் இயற்ற வேண்டும்.
இனி இந்த இழுத்தடிப்பு வேண்டாம்! இதுவே கடைசியாக இருக்கட்டும்!
No comments:
Post a Comment