மெட்ரிகுலேஷன் - இந்திய மாணவர்களுக்கான ஒதுக்கீடு சரியானதாகப் படவில்லை என்கிற மனக்குமுறல் நமது சமுதாயத்தில் எங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
நமது இந்திய அமைச்சர்களும் இது பர்றி பேசியிருக்கிறார்கள். இவர்களால் என்ன செய்ய முடியும் என்பது நமக்குப் புரியவில்லை. ஆயினும் அவர்களின் முயற்சியைப் பொறுதிருந்து தான் பார்க்க வேண்டும்.
இதற்கிடையே கல்வி அமைச்சு இது பற்றி விளக்கம் அளித்திருக்கிறது. சென்ற ஆண்டு கொடுக்கப்பட்ட 2200 இடங்கள் என்பது அந்த ஆண்டுக்கு மட்டுமே என்பதே தவிர அது தொடராது என்பதாக விளக்கமளித்திருக்கிறது!
ஆமாம், சென்ற ஆண்டு தேர்தல் ஆண்டு என்பதால் கொடுக்கப்பட்டிருக்கலாம்! ஆனால் அப்போது "இந்த ஓர் ஆண்டு மட்டுமே" என்பதாக எந்த அறிக்கையும் கல்வி அமைச்சோ கல்வி அமைச்சரோ வெளியிடவில்லை. ஓர் ஆண்டு கழித்து அதுவும் பக்காத்தான் அரசாங்கத்தில் இந்த ஆண்டு குறைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
சென்ற ஆண்டு அதாவது தேர்தல் ஆண்டில் 2200 இடங்கள் கொடுக்கப்பட்டால் ஏன் அது தொடரக் கூடாது என்பதே நமது கேள்வி. போதுமான இடங்கள் இருக்கின்றன என்கிற காரணத்தால் தான் அந்த எண்ணிக்கை கொடுக்கப்பட்டது. காலங்காலமாக சிறிய எண்ணிக்கையிலேயே நமக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. அது சென்ற ஆண்டு நஜிப் அரசாங்கத்தால் 2200 ஆக அதிகரிக்கப்பட்டது. இன்னும் அதிகரிக்கப்பட்டிருக்கலாம்.
ஆனால் இந்த பக்காத்தான் அரசாங்கத்தில் நாம் இன்னும் அதிக எண்ணிக்கையை எதிர்ப்பார்த்தோம். அது 2200 க்கும் மேல் தான் இருக்கும் என்பதாகத் தான் நம் கணிப்பு.
ஒவ்வொரு ஆண்டும் கல்வி அமைச்சோடு நாம் சண்டை போட்டுக் கொண்டிருக்க முடியாது. இதற்குச் சரியானதோர் தீர்வு காண வேண்டும் முந்தைய அரசாங்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் நமது கையாலாகத்தனத்தைக் காட்டிக் கொண்டிருந்தோம்! மீண்டுமா?
ந்மது இந்திய அமைச்சர்கள் குழு கல்வி அமைச்சருடன் பேச்சு வார்த்தை நடத்தி எத்தனை விழுக்காடு நமக்குத் தேவை என்பதை வலியுறுத்தலாம். அல்லது ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையை முன் வைக்கலாம். அல்லது தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் - குறிப்பாக ஏழை மாணவர்களுக்கு - இடம் ஒதுக்க வற்புறுத்தலாம்.
எது எப்படி இருந்தாலும் அந்த எண்ணிக்கை 3000 த்துக்கு கீழே போக அனுமதிக்கக் கூடாது. இது சரியா என்பது எனக்குத் தெரியவில்லை.
நமது அரசியல்வாதிகளிடம் சரியான புள்ளி விபரங்கள் இருக்கும். அவர்களே அந்த எண்ணிக்கையை முன் வைக்கலாம்.
கல்வி நமது உரிமை. அது எல்லாருக்கும் கிடைக்கவேண்டும். அதுவும் ஏழை மாணவர்களுக்கு அவசியம் கிடைக்க வேண்டும்.
இன்றைய நிலையில் கல்வி அமைச்சின் நிலை சரியல்ல. சரி செய்வது நமது தலைவர்களின் கடமை.
No comments:
Post a Comment